ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பரும் அதிரடி மன்னனுமான ஆடம் கில்கிறிஸ்ட், இன்று ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான அலெக்ஸ் கேரிக்கு ஆஸ்திரேலியாவின் பேகி கிரீன் தொப்பியை வழங்கி ஆசி வழங்கினார். அலெக்ஸ் கேரி இதில் நெகிழ்ந்து போனார்.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஆஷஸ் தொடர் இன்று பிரிஸ்பன் மைதானத்தில் தொடங்கியது. இதில் 461வது ஆஸ்திரேலிய வீரராக விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அறிமுகமானார். அலெக்ஸ் கேரி ஆஸ்திரேலியாவின் 34வது விக்கெட் கீப்பர் ஆவார்.
தொப்பியை அவரிடம் அளித்த ஆடம் கில்கிறிஸ்ட், “இதற்கு நீ தகுதியானவன் தான், மீதியெல்லாம் தானாக நடக்கும், குட் லக்” என்றார். மேலும் 2012-ல் கால்பந்திலிருந்து கிரிக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரி மாறிய தருணத்தையும் கில்கிறிஸ்ட் குறிப்பிட்டார்.
“இது தீரமான பயணம், ஒரு பயணத்திலிருந்து இன்னொரு பயணத்துக்கு மாறியிருக்கிறாய் , தைரியமாக இன்னொரு கனவை தொடங்கியுள்ளாய். இன்று அந்த கனவு பூர்த்தியாகிறது” என்றார் ஆடம் கில்கிறிஸ்ட்.
எனக்கு முதன் முதலில் பேகி கிரீன் கேப் வழங்கப்பட்ட போது என்னை அந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்களையும் என் பயணத்தியும் நினைத்துப் பார்த்தேன், நீயும் அப்படி நினைத்துப் பார்ப்பாய்” என்று உணர்ச்சிகரமாக பேசினார் கில்கிறிஸ்ட். அலெக்ஸ் கேரி நெகிழ்ந்தே போனார்.
டிம் பெய்ன் செக்ஸ் புகாரில் சிக்கி விலகியதையடுத்து மேட் வேட், இங்கிலிஸ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி கேரி இந்த இடத்துக்கு வந்துள்ளார்.
ஆடம் கில்கிறிஸ்ட் மேலும் கேரிக்குக் கூறும்போது, “இந்தத் தொப்பிக்கு ஏகப்பட்ட மதிப்பு உள்ளது. ஆனால் இதனை சரியாகப் பயன்படுத்த வேண்டும். இந்தத்தொப்பி சமூகத்தில் மற்றவர்களை விட உனக்கு பெரிய அந்தஸ்தை வழங்கி விட்டதாக கூற மாட்டேன், ஆனால் நேர்மை, உழைப்பு கடமை உணர்வுடன் ஆடினால் இந்த நாட்டு மக்கள் உன்னை உயர்விலும் தாழ்விலும் கூட கொண்டாடுவார்கள்” என்றார் ஆடம் கில்கிறிஸ்ட்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.