இந்திய அணியை பந்தாடியது இங்கிலாந்து: சென்னை டெஸ்ட் போட்டியில் தோல்வி- கோலி தலைமையில் மீண்டும் தோல்வி முகம்

வெற்றி மகிழ்ச்சியில் இங்கிலாந்து. | சென்னை டெஸ்ட் 2021

கோலி தோல்வி, ரஹானே வெற்றி மீண்டும் கோலி மீண்டும் தோல்வி என்றுதான் இதனை வர்ணிக்க வேண்டும். உண்மையான பிட்ச்களைப் போட்டு ஆடாமல் இப்படிப்பட்ட குழிப்பிட்களைப் போட்டால் இப்படித்தான் ஆகும்.

  • Share this:
சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் முலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் 30-ஐ பெற்றது இங்கிலாந்து.

1999-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் அபாரமாக ஆடி கடைசியில் ஆட்டமிழக்க இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக தோற்ற பிறகு சேப்பாக்கத்தில் கோலி தலைமையில் தோல்வி அடைந்துள்ளது இந்திய அணி. கோலி தலைமையில்தான் 36 ஆல் அவுட். கோலி தலைமையில்தான் இந்திய அணியின் ராசியான மைதானமான சென்னையிலும் தோல்வி.

420 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்கொண்டு இறங்கிய இந்திய அணி நேற்று ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்த நிலையில் இன்று 58.1 ஓவர்கள்ல் 2வது இன்னிங்சில் 192 ரன்கள் சுருண்டது.

கோலி தோல்வி, ரஹானே வெற்றி மீண்டும் கோலி மீண்டும் தோல்வி என்றுதான் இதனை வர்ணிக்க வேண்டும். உண்மையான பிட்ச்களைப் போட்டு ஆடாமல் இப்படிப்பட்ட குழிப்பிட்களைப் போட்டால் இப்படித்தான் ஆகும். கோலி மட்டைக்குக் கீழ் பந்து உருண்டு செல்லாத குறைதான் ஸ்டோக்ஸ் பந்தில் பவுல்டு ஆனார். அதுவரை 104 பந்துகளில் 72 என்று அற்புதமாக ஆடினார்.

கோலி


உண்மையான பிட்ச் என்றால் முழுக்கவும் வேகப்பந்துக்கு சாதகமாகவும் அல்ல, முழுக்க ஸ்பின்னுக்கு சாதகமாகவும் அல்ல. பேட்டுக்கும் பந்துக்கும் ஒரு சரிசம போட்டியிருக்க வேண்டும். ஆனால் இங்கு டாஸ் வென்ற அணி வெல்கிறது, இந்தியா டாஸ் வென்றிருந்தால் இங்கிலாந்து இப்படித்தான் தோற்றிருக்கும் என்பது இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 50 ஓவர்களுக்குள் 178 ரன்களுக்குச் சுருண்டதை வைத்தே கூற முடியும்.

ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை உட்கார வைத்து ஷாபாஸ் நதீம் என்ற ஒருவரை கோலி தேர்வு செய்தது மன்னிக்க முடியாத குற்றம். ஏனெனில் நதீம் பவுலிங்கும் போட மாட்டார், பேட்டிங்கும் பிடிக்க மாட்டார். அவரை ஏன் எடுக்க வேண்டும், அதே போல் சிராஜ் ஏன் இல்லை, ஷர்துல் தாக்குர் ஏன் உட்கார வைக்கப்பட்டார்? போன்ற கேள்விகளுக்கு கோலி பதில் சொல்லியாக வேண்டும்.

இன்று 39/1 என்று களமிறங்கியது இந்திய அணி. முதலில் புஜாரா 15 ரன்களில் ஜாக் லீச்சின் பந்து ஒன்று மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி திரும்ப அவர் அதை ஆடித்தான் ஆகவேண்டும் ஆடினார் எட்ஜ் ஆனது பென் ஸ்டோக்ஸ் நல்ல கேட்சை எடுத்தார்.

ஷுப்மன் கில் 81 பந்துகளில் அரைசதம் கண்டு ஆண்டர்சன் வீசிய அபாரமான ரிவர்ஸ் ஸ்விங்குக்கு உள்ளே வந்த பந்தின் லைனை தவறாக ஆட மட்டையை கடந்து ஸ்டம்ப் வண்டிச்சக்கரம் போல் சுழன்று சில அடி தள்ளிப்போய் விழுந்தது.

பிரமாதமான லெந்த் அருமையான ஸ்விங், முன் காலை இன்னும் கொஞ்சம் தள்ளிப்போட்டிருந்தால் ஒருவேளை எல்.பி.அப்பீல் ஆகி நிராகரிக்கப்பட்டிருக்கலாம். காலை முன்னால் நீட்டாததால் பந்து மட்டைக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்து ஸ்டம்பை பதம் பார்க்க ஸ்டம்ப் நடந்துபோய் சில அடிகள் தள்ளி விழுந்தது.

முன்னதாக புஜாரா 15 ரன்களில் ஜாக் லீச்சின் பந்து ஒன்று மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி திரும்ப அவர் அதை ஆடித்தான் ஆகவேண்டும் ஆடினார் எட்ஜ் ஆனது பென் ஸ்டோக்ஸ் நல்ல கேட்சை எடுத்தார்.

ஷுப்மன் கில் ஆக்ரோஷமாக ஆடினார். பிரமாதமான பிளிக் ஷாட், ஆன் ட்ரைவ், ஆஃப் டிரைவ் என்று அசத்தியதோடு டாம் பெஸ் பந்தை மேலேறி வந்து லாங் ஆனில் பெரிய சிக்சரை விளாசினார். அரைசதம் அடித்து முடித்தவுடன் ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சனைக் கொண்டு வந்தார்.

ஆண்டர்சன் வீசிய ரிவர்ஸ் ஸ்விங் பந்து ஷுப்மன் கில்லின் மட்டை, கால்காப்புக்குள் புகுந்து ஸ்டம்பைத் தாக்க ஸ்டம்ப் வண்டிச்சக்கரம் போல் சுழன்று சில அடிகள் தள்ளிப் போய் விழுந்தது.

கில், ரஹானே ஆண்டர்சனிடம் பவுல்டு ஆன காட்சி.


அதே ஓவரில் ரஹானே இறங்கி ஒரு எல்.பி. அப்பீலில் பெரிய அளவில் தப்பினார், அது உண்மையில் பிளம்ப் ஆனால் களநடுவர் நாட் அவுட் என்றதால் அதே தீர்ப்பையே 3ம் நடுவரும் ஏற்றுக் கொண்டார்.

ஆனால் அடுத்த பந்தே மீண்டும் அதே ரிவர்ஸ் ஸ்விங் ரஹானே கடந்த பந்து போல் காலை கொண்டு வரவில்லை, பந்து உள்ளே புகுந்தது ஸ்டம்ப் நடந்து சென்று சில அடிகள் தள்ளிப் போய் விழுந்தது.

அதோடு விட்டுவிடாமல் அபாய வீரர் ரிஷப் பந்த், இவருக்காகவே நிறுத்தி வைக்கப்பட்டது போலிருந்த ஷார்ட் கவர் பீல்டர் கையில் நேராக கேட்ச் கொடுத்து 11 ரன்களில் வெளியேறினார். ஆண்டர்சனின் இந்தப் பந்து நேர் பந்து, ஃபுல் லெந்த் பந்து ஆனால் கொஞ்சம் நின்று வந்தது போல் இருந்தது, பந்த்தினால் ஷாட்டை தரையில் ஆடுமாறு கட்டுப்படுத்த முடியவில்லை நேராக கையில் போய் உட்கார்ந்தது.

முதல் இன்னிங்ஸ் நாயகனான வாஷிங்டன் சுந்தர் 5 பந்துகள்தான் தாக்குப் பிடித்தார், பெஸ் வீசிய ஆஃப் ஸ்பின் பந்தை சரியாகவே பேக்புட் சென்று ஆடினார், ஆனால் ஆஃப் ஸ்டம்பைக் கவர் செய்து விட்டு பந்தை ஏன் தொட வேண்டும்? லேசான எட்ஜ் ஆகி கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார்.

117/6லிருந்து அஸ்வின், கோலி இருவரும் 171 ரன்கள் வரை கொண்டு சென்றனர். அஸ்வின் 9 ரன்களில் லீச் பந்தை கட் ஆட முயன்றார் சற்றே கூடுதல் பவுன்ஸ் இருந்ததால் எட்ஜ் ஆகி பட்லரிடம் கேட்ச் ஆனார்.

9 பவுண்டரிகளுடன் 104 பந்துகளில் 72 ரன்கள் எடுத்த கோலி பென் ஸ்டோக்ஸின் தாழ்வான பந்துக்கு பவுல்டு ஆகி ஏமாற்றத்துடன் நக்கலாக சிரித்துக் கொண்டே வெளியேறினார். என்ன செய்வது ? இப்படிப் பிட்ச் போட்டால் இப்படித்தான் ஆகும் என்பதை இனிமேலாவது உணர வேண்டும். ஷாபாஸ் நதீம் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆனார். பும்ரா ஆர்ச்சரிடம் ஆட்டமிழக்க இந்தியா தோல்வி அடைந்தது, இங்கிலாந்துக்கு அபார வெற்றி.

ஆட்ட நாயகனாக ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார்.
Published by:Muthukumar
First published: