இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்சர் வீசிய பந்து ஆஸ்திரேலிய வீரர் கேரியின் தாடைப்பகுதியில் பலமாக பட்டு ரத்தகாயம் ஏற்பட்டது.
உலகக் கோப்பை அரையிறுதி சுற்றின் 2வது போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகிறது. பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர், பின்ச் களமிறங்கினர். இந்த தொடரின் வெற்றி ஜோடியாக களம் கண்டு வந்த இவர்கள் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தனர். கேப்டன் பின்ச், வேகப்பந்து வீச்சாளர் ஆர்சர் பந்துவீச்சில் டக்-அவுட்டாகினார்.
அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்கவீரரான வார்னர் வோக்ஸ் பந்துவீச்சில் பேரிஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய க்வாஜாவிற்கு பதிலாக அணியில் இடம்பெற்ற ஹேண்டஸ்காம்ப் நெருக்கடியான சூழலில் விளையாடி வந்தார்.
பதற்றத்துடன் விளையாடிய ஹேண்டஸ்காம்ப் வோக்ஸ் பந்துவீச்சில் போல்ட்டாகி வெளியேறினார். ஆஸ்திரேலியா அணி 14 ரன்களில் 3 விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது. அவரை அடுத்து விக்கெட் கீப்பர் கேரி களமிறங்கி நிதானமாக ஆடி வந்தார்.
போட்டியின் 8வது ஓவரை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்சர் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை கேரி எதிர்கொண்டார். ஆக்ரேஷமாக ஆர்சர் வீசிய பந்தை கேரி தடுக்க முயன்ற போது அவரது தாடைப்பகுதியை பந்து பலமாக தாக்கியது. பந்து தாக்கிய வேகத்தில் ஹெல்மெட் தலையிலிருந்து கழன்று கீழே விழுந்த போது அதை கேரி பிடித்துவிட்டார்.
ஆனால் தாடைபகுதியில் இருந்து ரத்தம் சொட்டியது. உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்டபட்டது. அவரால் தொடர்ந்து விளையாட முடியுமா? என்ற சந்தேகம் நிலவிய போது தாடை முழுவதும் பிளாஸ்திரி உடன் கேரி ஆடி வருகிறார்.
3 விக்கெட்களை இழந்து ஆஸ்திரேலியா அணி தடுமாறும் நிலையில் கேரியின் விக்கெட் மிகவும் முக்கியத்துவமானதாகும்.
Also Read : நடுவரின் தவறால் தோனி ரன் அவுட்? சர்ச்சைக்குள்ளான நியூசிலாந்து அணியின் ஃபீல்டிங் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.