புள்ளி விவரங்களைச் சரிபார்த்து விட்டு சரியான கேள்விகளுடன் வாருங்கள்: செய்தியாளர்களிடம் ரகானே சிடுசிடு

ரஹானே

மனத்தளவில் ஆக்ரோஷமாக இருப்பதையும் வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாதது பற்றியும் ரகானே நிறைய பேசியுள்ளார், ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி ஒன்றுக்கு அவர் நிருபர்களிடம் சிடுசிடுவென்று முகத்திலடித்தார் போல் பேசியது அவரிடமிருக்கும் முரண்பாட்டை பறைசாற்றியதாக அமைந்துள்ளது.

  • Share this:
மனத்தளவில் ஆக்ரோஷமாக இருப்பதையும் வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாதது பற்றியும் ரகானே நிறைய பேசியுள்ளார், ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி ஒன்றுக்கு அவர் நிருபர்களிடம் சிடுசிடுவென்று முகத்திலடித்தார் போல் பேசியது அவரிடமிருக்கும் முரண்பாட்டை பறைசாற்றியதாக அமைந்துள்ளது.

அகமதாபாத் 4வது டெஸ்ட்டை முன்னிட்டு மெய்நிகர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் அவரது உள்நாட்டு ஸ்கோர் புள்ளி விவரம் சரியாக இல்லையே? வெளிநாட்டில் நன்றாக இருக்கிறதே, உடல், மனரீதியாக ஏதாவது தடையா அல்லது உத்தி ரீதியான பிரச்சினையா கொஞ்சம் விளக்கவும் என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இதில் ஆத்திரமடைந்த ரஹானே, “நான் இந்தக் கேள்வியைத்தான் எதிர்பார்த்தேன், நன்றி கூறும் விதமாக கேட்டு விட்டீர்கள். நீங்கள் முதலில் உங்கள் தரவுகளை சரிபாருங்கள். அப்போது என் பங்களிப்பு என்னவென்பது தெரியும். அணிக்கு ரன்கள் தேவைப்படும்போதெல்லாம் நான் ஸ்கோர் செய்திருக்கிறேன். நீங்கள் புள்ளிவிவரங்களைச் சரியாகப் பார்த்து சரியான கேள்விகளைக் கேளுங்கள்” என்று சிடுசிடுவென பதிலளித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு தொடரில் 5 இன்னிங்ஸ்களில் ரஹானே 85 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதில் சென்னையில் முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மாவுடன் மேற்கொண்ட சதக் கூட்டணியில் பிரமாதமாக ஒரு 67 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் அவர் மேலும் கூறும்போது, “இதோ பாருங்கள் நான் அணிக்காக ஆடுபவன். அனைவருக்கும் அது தெரியும். அணிக்கு தேவைப்படும் சூழ்நிலையில் நான் ரன்கள் எடுத்து எப்போதும் பங்களிப்பு செய்துள்ளேன். ஒரு வீரராக நான் கற்றுக் கொண்டு வளர்ச்சியடைவதில் நாட்டமுடையவன்.

4வது டெஸ்ட்டுக்கான பிட்சில் எந்த மாற்றமும் இருக்காது, சென்னை 2வது டெஸ்ட் பிட்ச், 3வது டெஸ்ட் பிட்ச் போல்தான் இருக்கும். பிங்க் பந்து பேட்டுக்கு கொஞ்சம் விரைவில் வரும் இப்போது சிகப்புப் பந்து எனவே இது ஒன்றுதான் வித்தியாசம். இதற்கு நாங்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள வேண்டும்” என்றார் ரகானே.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்கக் கூடாது, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்குச் செல்வதை உறுதி செய்ய தோற்கக் கூடாது.

ரஹானே இதுவரை இந்தியாவில் 30 டெஸ்ட் 47 இன்னிங்ஸ், 1,578 ரன்கள், சராசரி 36.69, 8 அரைசதம் 4 சதம். சிறந்த ஸ்கோர் 188.

அயல்நாட்டில், 42 போட்டி, 75 இன்னிங்ஸ். 2,978 ரன்கள், சராசரி 44.44, 15 அரைசதம் 8 சதம். சிறந்த ஸ்கோர் 147.
Published by:Muthukumar
First published: