ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

எதிரணி வீரரை சதா கிண்டல் கேலி செய்த ஜெய்ஸ்வால்: வெளியே அனுப்பிய ரஹானே- குவியும் பாராட்டுக்கள்!

எதிரணி வீரரை சதா கிண்டல் கேலி செய்த ஜெய்ஸ்வால்: வெளியே அனுப்பிய ரஹானே- குவியும் பாராட்டுக்கள்!

போட்டியின் போது ஜெய்ஸ்வாலை வெளியே அனுப்பிய ரஹானே

போட்டியின் போது ஜெய்ஸ்வாலை வெளியே அனுப்பிய ரஹானே

துலீப் கோப்பை போட்டியில் நடந்த நிகழ்வு மூலம் ஒரு கேப்டன் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கும் ரஹானே முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  துலீப் கோப்பை சிகப்புப் பந்து இறுதிப் போட்டியில் தென் மண்டல வீரருடன் தகராறில் ஈடுபட்ட வீரரை மேற்கு மண்டல கேப்டன், தன் அணி வீரர் என்று சலுகை காட்டாமல் வெளியே அனுப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  கோவையில் மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் இடையே நடைபெற்ற துலீப் டிராபி 2022 இறுதிப் போட்டியின் ஐந்தாவது மற்றும் கடைசி நாளில், கேப்டன் அஜிங்கியா ரஹானே, எதிர் அணி வீரர் உடன் தகராறு செய்த தனது சொந்த அணி வீரரையே வெளியேற்றியுள்ளார். இந்தப் போட்டியில் மேற்கு  மண்டலம் வெற்றி பெற்றது.

  முதல் இன்னிங்சில் முறையே மேற்கு மண்டலம் 270 ரன்களும், தென் மண்டலம் 327 ரன்களும் எடுத்தன. 57 ரன்கள் பின்தங்கிய மேற்கு மண்டலம் 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 585 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. ஜெய்ஸ்வால் இரட்டை சதம் (265 ரன்) அடித்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 529 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென் மண்டலம் 4-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 154 ரன்களுடன் தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தென் மண்டலம் 71.2 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

  Also Read : அட்டகாசமான 19வது ஓவர்: நம்ப முடியாத பாகிஸ்தானின் ‘த்ரில்’ வெற்றி!

  இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸ் முலானி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 294 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்த மேற்கு மண்டல அணி துலீப் கோப்பையை கைப்பற்றியது.

  இந்த ஆட்டத்தில் ரவி தேஜா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அருகில் பீல்ட் செய்து கொண்டிருந்த மேற்கு மண்டல வீரர் ஜெய்ஸ்வால், தேஜாவை அடிக்கடி சீண்டிக்கொண்டிருந்தார். வாய்வார்த்தைகள், கிண்டல்கள், கேலிகள் என்று செய்துகொண்டிருந்தார். எரிச்சல் அடைந்த தேஜா 57-வது ஓவரின் போது நடுவரிடம் முறையிட்டார்.

  இது குறித்து அறிந்த மேற்கு மண்டல கேப்டன் அஜிங்யா ரஹானே, ஜெய்ஸ்வாலை எச்சரிக்கை செய்ததுடன் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார். அவரை களத்தை விட்டு வெளியே போகும்படி உத்தரவிட்டார். இதனால் சிறிது நேரம் மேற்கு மண்டல அணி 10 வீரர்களுடன் பீல்டிங் செய்தது.

  7 ஓவருக்கு பிறகு ஜெய்ஸ்வால் மீண்டும் களம் திரும்பி பீல்டிங் செய்தார். இது குறித்து ரஹானே கூறுகையில், 'எதிரணி வீரர்கள், நடுவர்கள், போட்டி உதவியாளர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவன்நான். இத்தகைய விஷயங்களை இது மாதிரி தான் கையாள வேண்டும்' என்றார்.

  ரஹானேயின் இந்தச் செயல் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரிய பாராட்டுதலை பெற்றுள்ளது, ஜெய்ஸ்வால் போன்ற வளர்ந்துவரும் இளம் வீரர் சக இந்திய வீரரையே ஸ்லெட்ஜிங் செய்ததற்கு கேப்டன் ரஹானே செய்தது சரி என்றும் ஒரு கேப்டன் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கும் ரஹானே முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Ajinkya Rahane, Cricket, Indian cricket team