ஒரே நாளில் 13 விக்கெட் 211 ரன்கள்; 5 எல்.பி.டபிள்யு, 4 பவுல்டு- இது நல்ல பிட்சா? தூசித் தும்பட்டைப் பிட்சா?- ஐசிசி என்ன செய்யப்போகிறது?

ஒரே நாளில் 13 விக்கெட் 211 ரன்கள்; 5 எல்.பி.டபிள்யு, 4 பவுல்டு- இது நல்ல பிட்சா? தூசித் தும்பட்டைப் பிட்சா?- ஐசிசி என்ன செய்யப்போகிறது?

6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அக்சர் படேல்.

இந்தியா இப்படியே தொடர்ந்து பிட்ச்களைப் போடுவது பற்றி ஐசிசி பிட்ச் கமிட்டி விசாரிக்க வேண்டும், இல்லையெனில் இந்தியாவில் இனி ஒரு டெஸ்ட்தான் ஆடுவோம் என்று பிற நாடுகள் போர்க்கொடி தூக்க வேண்டும் இல்லையெனில் விராட் கோலி அண்ட் கோ கிரிக்கெட்டை அழித்து விடுவார்கள்.

  • Share this:
அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 112 ரன்களுக்குச் சுருண்டது. அக்சர் படேல் 38 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். தொடர்ந்து ஆடிய இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 99/3 என்று உள்ளது.

74 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையிலிருந்து 38 ரன்களுக்கு அடுத்த 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலந்து சரிந்தது. பிட்சைப் பற்றி ஒருவரியில் கூற வேண்டுமெனில் ஆண்டர்சன் ஓடி வந்து வீசி முன் காலை வைத்த இடத்தில் குழியாகி அவர் பேலன்ஸ் தவறி கீழே விழுந்ததுதான் மிச்சம்.

அதுவும் எல்லா எல்.பி.யும் நடுவர் கையை உயர்த்தி விடுகிறார், அது நாட் அவுட்டாக இருக்கும் வாய்ப்பு கூட அவருக்குத் தெரியவில்லை. இதனால் ரிவியூவில் அம்பயர்ஸ் கால் என்று வந்தால் அவுட். ஆனால் இந்திய வீரர்கள் பேட் செய்யும் போது நாட் அவுட் என்பார், அது அம்பயர்ஸ் கால் ஆகி நாட் அவுட் ஆகும். இதுதான் புரிந்தும் புரியாத புதிர்.

முதல் நாள் ஆட்ட முடிவில் ரோஹித் சர்மா 57 ரன்களுடன் வலுவாக ஆடி வருகிறார், ரஹானே 3 பந்துகள்தான் ஆடியுள்ளார், அவர் 1 நாட் அவுட்.

ஷுப்மன் கில் பந்து தெரியவில்லையா என்னவென்று நமக்குத் தெரியவில்லை 51 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் எடுத்து ஆர்ச்சரின் ஆஃப் ஸ்டம்ப் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆடுகிறேன் பேர்வழி என்று மூக்குக்கு மேல் கொடியேற்றினார். புஜாரா 4 பந்துகளே நீடித்தார், பிட்சின் தன்மையினால் ஒரு பந்து நேராக வர புஜாரா காலில் வாங்கினார், தாழ்வான பந்து. டக் அவுட் ஆனார். ஜாக் லீச் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

கடைசியாக விராட் கோலி 27 ரன்களை இமயமலையைக் காலால் ஏறுவது போல் ஏறி எடுத்து கடைசியில் ஜாக் லீச் பந்து ஒன்று இவர் எதிர்பார்த்த அளவு பவுன்சும் ஆகாமல் திரும்பவும் இல்லாமல் நேராக இவர் கட் ஆட முயன்று மட்டியின் அடி விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். முன்னதாக ஆண்டர்சன் பந்தில் இவருக்கு ஸ்லிப்பில் கேட்ச் விடப்பட்டது.

முன்னதாக ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் எடுத்தார். பிங்க் பந்து என்று இங்கிலாந்து பவுலர்கள் நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டு இருப்பதாக பென் ஸ்டோக்ஸ் கூறினார் ஆனால் பாவம் மீண்டும் ஒரு தூசித் தும்பட்டைப் படல பிட்ச்தான், மிக மோசமான பிட்ச் உலகின் எந்த மூலையிலும் அக்சர் படேல் போன்ற பவுலர்கள் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாது, ஆனால் அவர் நேற்று 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் 3 எல்.பி.டபிள்யூ, 2 பவுல்டு. முதல் நாள் டெஸ்ட் பிட்ச் ஒன்றில் ஸ்பின்னர்கள் பந்துகளில் 5 எல்.பி.டபிள்யூக்களும் 3-4 பவுல்டுகளும் ஆனால் பிட்சின் பவுன்ஸை நம்ப முடியவில்லை என்றுதான் பொருள்.

அங்கு போனால் கிரீன் டாப் போடுகிறார்கள் என்று அஸ்வின், ரோஹித் சர்மா முதல் விராட் கோலி மற்றும் இவரது ரசிகர்கள் உட்பட கூறினால் அங்கு பவுன்ஸ் மீது நம்பிக்கை வைத்து காலை முன்னாலோ பின்னாலோ நகர்த்தலாம், இங்கு ஒரே லெந்தில் பிட்ச் ஆகும் ஒரு பந்த் கணுக்காலுக்கு வருகிறது ஒரு பந்து விக்கெட் கீப்பர் தோள்பட்டைக்குச் செல்கிறது.

இரு அணிகளுக்கும் இதே பிட்ச்தானே என்ற மொன்னை வாதம் பேசினால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 ஆகிறது என்றால் அனைவருக்கும்தானே அது என்று வாதிட்டால் எவ்வளவு மொன்னையாகவும் அராஜகமான பதிலாகவும் இருக்கும் என்பதே இதற்கும் பதிலாக இருக்கும்.

டாம் சிப்லிக்கு இஷாந்த் சர்மா வீசி வீழ்த்திய பந்து ஒன்றுதான் நேற்று டெஸ்ட் தரத்துக்கான பந்து. ஜானி பேர்ஸ்டோ அக்சர் படேல் வீசிய முதல் பந்திலேயே எல்.பி. ஆனார். பந்து திரும்பும் என்று எதிர்பார்த்தார், எழும்பும் என்று எதிர்பார்த்தார் ஆனால் அது முழங்காலுக்குக் கீழ் வந்து கால் காப்பை தாக்கியது. டக் அவுட் ஆனார்.

ஆனால் ஒரு முனையில் ஜாக் கிராலி மிக அருமையாக ஆடினார், என்ன டைமிங்! கண்களில் ஒத்திக் கொள்ளும் 10 பவுண்டரிகளுடன் அவர் 68 பந்துகளில் அரைசதம் எடுத்தார், ஆனால் 84 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவர் அக்சர் படேல் பந்து திரும்பும் அல்லது எழும்பும் என்று நினைத்து ஆட மீண்டும் கால்காப்பில் பட எல்.பி.ஆகி வெளியேறினார். ஜோ ரூட் 17 ரன்களுக்கு நன்றாகவே ஆடினார். ஆனால் அஸ்வின் பந்துக்கு பிட்சின் பவுன்சை இவரும் நம்பி மோசம் போனார், பின்னால் சென்று ஆட பந்து சுருக்கென்று வந்து எல்.பி.ஆனார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு மீதமுள்ள இங்கிலாந்து பேட்டிங்கை பிட்ச் பெருக்கித் தள்ளியது. ஆலி போப் மீண்டும் பந்து திரும்பும் என்று எதிர்பார்த்து பவுன்ஸ் இருக்கும் என்று எதிர்பார்த்து அஸ்வினிடம் பவுல்டு ஆனார். பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களில் அக்சர் படேலின் பேக் ஆஃப் லெந்த் பந்தில் மீண்டும் பவுன்சை எதிர்பார்த்து எல்.பி.ஆனார்.

ஆர்ச்சர் (11) 2 பவுண்டரிகளை அடித்தார், பென் போக்ஸ் (12) நிதானிக்க இருவரும் சேர்ந்து 58 பந்துகள் ஆடினர், ஒரு பயனும் இல்லை. 48.4 ஓவர்களில் இங்கிலாந்து 112 ரன்களுக்கு சுருண்டது. அக்சர் படேல் அறிமுகமாகி 2 டெஸ்ட் போட்டிகளிலேயே இருமுறை 5 விக்கெட்டுகளைச் சாய்த்தது சாதனையானது, இதனை சாதிக்கும் 4வது பவுலர் ஆனார் அவர். அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தியா இப்படியே தொடர்ந்து பிட்ச்களைப் போடுவது பற்றி ஐசிசி பிட்ச் கமிட்டி விசாரிக்க வேண்டும், இல்லையெனில் இந்தியாவில் இனி ஒரு டெஸ்ட்தான் ஆடுவோம் என்று பிற நாடுகள் போர்க்கொடி தூக்க வேண்டும் இல்லையெனில் விராட் கோலி அண்ட் கோ கிரிக்கெட்டை அழித்து விடுவார்கள்.

ஹோம் அட்வாண்டேஜ் இருக்கலாம் ஆனால் அதன் பெயரில் தண்ட பிட்சையா போடுவது? ஒரு டெஸ்ட் போட்டி 5-வது நாள் வரை செல்ல வேண்டும், பதிலாக ஒரு அணி மட்டுமே வெல்ல வேண்டும், ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிக்குச் செல்ல வேண்டும் என்று அடாவடியாகப் பிட்ச் போடுவதற்கு ஐசிசி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
Published by:Muthukumar
First published: