Happy 31st, Kohli : ஆக்ரோஷமான இளைஞர், ஆதர்ச நாயகனாக மாறிய சுவாரஸ்யம்

Happy 31st, Kohli : ஆக்ரோஷமான இளைஞர், ஆதர்ச நாயகனாக மாறிய சுவாரஸ்யம்
  • Share this:
'ரன் மெஷின்', 'கிங் கோலி' என்று அழைக்கப்படும் சாதனை நாயகன் விராட் இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பிரிக்க முடியாதது 'ஆக்ரோஷமும், அன்பும்' என்று தனது கிரிக்கெட் கேரியரை தொடங்கியவர் விராட் கோலி. 2008ம் ஆண்டு நடைபெற்ற U-19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி கோப்பையை வென்று சாதனை படைத்தவர்.

சர்வதேச போட்டிகளில் 2008ம் ஆண்டு அடிஎடுத்து வைத்த விராட் இன்று வரை தனது ரன்வேட்டையை தொடர்ந்து கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் ரசிகர்கள் காஷ்மீர் வேண்டாம் விராட் கோலியை எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்று சொல்லுமளவுக்கு புகழின் உச்சத்திற்கே சென்றவர். ரன் சேசிங்கில் விராட் கோலியின் ஆட்டத்தை போன்று இந்திய அணியில் வேறுஎந்த வீரரும் விளையாட முடியாது. ஒரு நாள் போட்டிகளில் 43 சதங்கள் அடித்துள்ள கோலி அதிக சதம் ரன்சேசிங்கில் அடித்தது தான். கிரிக்கெட்டில் யாராலும் முறியடிக்க முடியாது என்று நினைத்த பல சாதனைகளை ரன் மெஷின் முறியடித்து வருகிறார்.


ஒரு நாள் போட்டிகளில் குறைந்த போட்டிகளில் 10,000 மற்றும் 11,000 ரன்களை கடந்த வீரர் என பல சாதனைகள் விராட் கோலியின் வசம் உள்ளது. ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த சச்சின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 7 சதங்கள் மட்டுமே தேவை.

களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் கோலி பல முறை சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். அமைதியாக இருக்கும் வீரர்களே ஆஸ்திரேலிய ரசிகர்களின் கேலி மற்றும் கிண்டல் காரணமாக கோபத்தை வெளிப்படுத்துவார்கள். விராட் கோலி என்றால் இன்னும் சொல்லவா வேண்டும்... 2012 சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்கள் ஏற்படுத்திய கோபத்தின் காரணமாக தனது நடுவிரலை உயர்த்தி காட்டி சர்ச்சையில் சிக்கினார்.

இதனால் அந்த நாட்டு ஊடகங்கள் விராட் கோலியை பெருதும் விமர்ச்சித்து வந்தன. அன்று முதல் விராட் கோலியை அந்த நாட்டு ஊடகங்களும், ரசிகர்களும் தங்கள் மனதில் வில்லனை போல் சித்தரித்து கொண்டனர். ஆனால் கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டி அமைந்தது. அந்த போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைக்கு பின் களமிறங்கிய ஸ்மித்தை ரசிகர்கள் 'ஏமாற்றுக்காரர்' என்று கேலி செய்தனர்.

இதை பார்த்த கோலி, ஸ்மித்துக்கு கைதட்டி அவரை உற்சாகப்படுத்துங்கள் என்று அவருக்கு ஆதரவு கொடுத்தார்.



விராட் கோலியின் உணர்வுபூர்வமான இந்த செயலை பார்த்த அந்நாட்டு ரசிகர்கள் அவரை ஹீரோவாக கொண்டாட ஆரம்பித்தனர். வயது வித்தியாசம் பார்க்காமல் தனது ரசிகர்களுக்கு மதிப்பு கொடுக்க கூடியவர். இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டிக்கு வந்திருந்த விராட் கோலி தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொண்டிருந்தார். அப்போது சிறுவன் ஒருவர் விராட் ஒரு போட்டோ, விராட் ஒரு போட்டோ என்று கூச்சலிட்டு கொண்டே இருந்தார். அதை கேட்ட விராட் அந்த சிறுவன் உடன் செல்பி எடுத்து அவனது ஆசையை நிறைவேற்றினார்.



தனது உடலில் பல இடங்களில் விராட் கோலியின் பெயர் மற்றும் அவரது சாதனையை பச்சைக்குத்தி கொண்ட ரசிகரை அழைத்து அவரிடம் புகைப்படம் எடுத்து கொண்டு அவரை பெருமைப்படுத்தியவர். விராட் கோலி கிரிக்கெட் மீது எவ்வளவு காதல் வைத்து இருக்கிறாரோ அதே அளவு தனது மனைவி அனுஷ்கா மீதும் வைத்துள்ளார். 5 வருடங்களாக காதலித்து வந்த அனுஷ்கா சர்மாவை 2017ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார். இந்திய அணி நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டால் தனது மனைவி அனுஷ்கா சர்மாவையும் கோலி உடன் அழைத்து செல்வார்.



 




View this post on Instagram




 

😍❤️ @anushkasharma


A post shared by Virat Kohli (@virat.kohli) on






ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாட கூடியவர் விராட் கோலி. ஐசிசியின் ஒரு நாள் தரவரிசையில் முதலிடத்திலும் டெஸ்ட் கிரிக்கெட் 2ம் இடத்திலும் உள்ளார். கேப்டனாகாவும் விராட் கோலியின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே போகும். டெஸ்ட் கேப்டன்ஷிப் வெற்றி, டி20 கேப்டனஷிப் வெற்றி எனது தனது பயணத்தில் பல மைல்கல்லை  எட்டி வருகிறார்.

விளையாட்டு துறையில் வழங்கப்படும் அர்ஜூனா விருது(2013), பத்மஸ்ரீ(2017) விருதுகளை பெற்றுள்ளார். மேலும் விளையாட்டு துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதையும்(2018) பெற்றுள்ளார் விராட் கோலி. ஐசிசியின் சிறந்த ஒரு நாள் மற்றும் டெஸ்ட் வீரர்களுக்கான விருதையும் விராட் கோலி பெற்றுள்ளார்.

ராஜீவ்காந்தி கேல் விருது பெறும் விராட் கோலி


விராட் கோலி 239 ஒரு நாள் போட்டிகள், 82 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 72 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். சர்வதேச போட்டிகளில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை அடித்துள்ள கோலி 69 சதங்களையும் பதிவு செய்துள்ளார். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக உள்ள விராட் கோலி இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாத ஒரு குறை மட்டும் அவரிடம் உள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஓய்வில் இருக்கும் விராட் கோலி பூடானில் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் தனது 31வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். Happy Birthday Virat Kohli...!

Also Watch

First published: November 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்