ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இலங்கையை வெளியேற்றியது ஆப்கானிஸ்தான் அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இலங்கையை வெளியேற்றியது ஆப்கானிஸ்தான் அணி

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் அணியினர்

வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் அணியினர்

  • News18
  • 2 minute read
  • Last Updated :

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிராக 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்று, சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்த முன்னாள் சாம்பியனான இலங்கை, பரிதாபமாக வெளியேறியது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் 14- வது தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 'பி' பிரிவில் இடம் பிடித்திருந்த இலங்கை அணி வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணியுடன் நேற்று மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீரர்களான முகமது ஷாஸத் 34 ரன்களும் இசானுல்லா 45 ரன்களும் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். குறிப்பாக, இவர்கள் மலிங்கா மற்றும் சமீரா பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து நடுவரிசை வீரர்களுடன் கைகோர்த்த, ரஹ்மத் ஷா அபாரமாக ஆடி அரைசதம் கடந்து அணியின் ரன் உயர்வுக்கு வழிவகுத்தார். மேலும் ஆட்டத்தின் கடைசிப் பந்தில் இறுதி விக்கெட்டை இழந்த ஆப்கானிஸ்தான் 249  ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இது சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக அந்த அணியின் அதிகபட்ச ரன்களாக அமைந்தது.

பின்னர், இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் குசால் மெண்டிஸ் டக்-அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அத்துடன், சீரான இடைவெளியில் இலங்கை வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்த வண்ணம் இருந்தனர்.

41.2 ஓவர்களில் இலங்கை அணி, 158 ரன்களுக்குள் சுருண்டது. இதன் மூலம் 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. ஆப்கன் தரப்பில் முஜீப் ரஹ்மான், முகமது நபி, ரஷித் கான் மற்றும் குல்பதின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியில் 72 ரன்கள் விளாசி ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு வித்திட்ட ரஹ்மத் ஷா ஆட்டநாயகனாக தேர்வானார். அத்துடன், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இலங்கை அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது. மேலும் வங்கதேசத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானுடன் தோல்வியைத் தழுவிய முன்னாள் சாம்பியனான இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது. இதன் மூலம் 'பி' பிரிவில் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறின.

இன்று நடைபெறும் 'ஏ' பிரிவு லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்தியா, கத்துக்குட்டி அணியான ஹாங்காங்-ஐ எதிர்கொள்கிறது. இந்தப்  போட்டி துபாய் மைதானத்தில் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஹாங்காங் அணி ஏற்கனவே, பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்நிலையில், இன்றைய போட்டியில் தோல்வியுற்றால் தொடரில் இருந்து வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Afghanistan, Angelo Mathews, Asia Cup 2018, Dubai, Rashid Khan, Sri Lanka