புஜாரா, கோலி மந்தமாக ஆடவில்லை.. அத்தகைய தடுப்பாட்டத்தை 2வது இன்னிங்ஸில் ஆடாததே கோளாறு: ஆடம் கில்கிறிஸ்ட்

புஜாரா, கோலி மந்தமாக ஆடவில்லை.. அத்தகைய தடுப்பாட்டத்தை 2வது இன்னிங்ஸில் ஆடாததே கோளாறு: ஆடம் கில்கிறிஸ்ட்

விராட் கோலி, புஜாரா

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியினர் காட்டிய கவனத்தை 2வது இன்னிங்ஸில் காட்டத் தவறியதால் அதிர்ச்சிகரமான சரிவு ஏற்பட்டு 36 ரன்களில் சுருண்டனர் என்று முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரும் அதிரடி இடது கை பேட்ஸ்மெனுமான ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இரண்டரை நாட்களில் முடிந்த அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியினர் காட்டிய கவனத்தை 2வது இன்னிங்ஸில் காட்டத் தவறியதால் அதிர்ச்சிகரமான சரிவு ஏற்பட்டு 36 ரன்களில் சுருண்டனர் என்று முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரும் அதிரடி இடது கை பேட்ஸ்மெனுமான ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

  அஜித் வடேகர் கேப்டன்சியில் இங்கிலாந்தில் 42 ரன்களுக்கு இந்திய அணி சுருண்ட பிறகு நம்பர் 1 விராட் கோலி தலைமையின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியா ஆகக்குறைந்த ஸ்கோரான 36 ரன்களுக்குச் சுருண்டது. இது டெஸ்ட் வரலாற்றில் இணைந்த 4வது குறைந்தபட்ச அணி ஸ்கோராகும். விராட் கோலி தலைமை இந்திய அணிக்கு இது பெரும் கரும்புள்ளியாக அமைந்து விட்டது.

  இந்நிலையில் ‘மிட் டே’ பத்திரிக்கையில் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியிருப்பதாவது:

  இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தைத் திரும்பிப் பார்க்கும் போது, வெளிப்பார்வைக்கு புஜாராவும் கோலியும் மந்தமாக ஆடியது போல் தோன்றினாலும் அது உண்மையில் அபாரமான தடுப்பாட்டமே. இதைத்தான் இந்திய அணியினர் இரண்டாவது இன்னிங்சில் செய்யத் தவறி விட்டனர்.

  முதல் இன்னிங்ஸில் இந்திய அணியினர் ரன் எடுக்கும் வாய்ப்புகளுக்காகப் பார்க்கவில்லை. ஆனால் கோலியின் மாஸ்டர்கிளாஸ் கவனம் மற்றும் உத்தி, இவருடன் புஜாரா, பிற்பாடு ரஹானே ஆடிய விதம் இந்திய அணிக்கு முதல் இன்னிங்சில் 244 ரன்களை எட்ட உதவியது.

  தொடக்க வீரர் பிரித்வி ஷா இரண்டு இன்னிங்ஸ்களிலும் வந்தோம் போனோம் என்று ஆட்டமிழந்ததால் இந்திய அணி பின்னடைவைச் சந்தித்தது. கடந்த முறையும் இவர் ஆஸி. வந்திருந்தார். பிரிதிவி ஷா-வைச் சுற்றி ஏகப்பட்ட பில்ட்-அப்கள் பின்னப்பட்டன.

  இதனால் அவரது உத்தியை தொடர்ந்து கண்காணித்தனர். அதில் அவர் கால்காப்புக்கும் மட்டைக்கும் இடையே இடைவெளி கொடுப்பது தெரியவர அதைப் பயன்படுத்தத் தெளிவாகத் திட்டமிடப்பட்டது. இந்த உத்தி விவகாரம் ஷாவுக்கு கவலையளிக்கக் கூடிய குறைபாடாகும்.

  மேலும் பிரிதிவி ஷா, பெரிய ஷாட்களை ஆட முயற்சிக்கிறார், இது ஆஸ்திரேலிய பிட்ச்களில் எடுபடாது. ஏனெனில் பந்தை அவர் கல்லிக்கு எட்ஜ் செய்யும் வாய்ப்புகள் இங்கு அதிகம். இவர் திறமையான வீரர் என்றாலும் அவரது இத்தகைய ஆட்டம் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தேர்வை மிகுந்த சிக்கலாக்கியுள்ளது.

  இவ்வாறு அந்தப் பத்தியில் எழுதியுள்ளார் ஆடம் கில்கிறிஸ்ட்.

  டிசம்பர் 26ம் தேதி மெல்போர்னில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

  விராட் கோலி, முகமது ஷமி ஆகியோர் இல்லாததை இந்திய அணி எப்படி ஈடுகட்டப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
  Published by:Muthukumar
  First published: