முதல் டெஸ்ட் போட்டியின் தோல்வித் தழும்புகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், ஆனால் பயத்தை முறியடித்து பாசிட்டிவ் மனநிலையுடன் நாட்டுக்காக ஆட வேண்டும் என்று இந்திய அணிக்கு கவுதம் கம்பீர் அட்வைஸ் வழங்கியுள்ளார்.
நாளை மெல்போர்னில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது, கோலி, ஷமி இல்லாத இந்திய அணி எப்படி ஆடுமோ என்ற கவலை ரசிகர்களைச் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் டுடே என்ற யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த கம்பீர் கூறியதாவது:
நிச்சயம் தோல்வியின் தழும்புகள் இருக்கவே செய்யும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னால் ஒளிந்து கொண்டால் கடினம்தான். பயத்தை அதன் முகத்துக்கு எதிரே எதிர்கொள்ள வேண்டும். நாளை களத்தில் இறங்கும் போது பீதி இருக்கவே செய்யும். ஆனால் இங்குதான் நம் கேரக்டரின் முக்கியத்துவமும் உள்ளது.
உலகில் எந்த அணி குறைந்த ஸ்கோருக்கு ஆல் அவுட் ஆகவில்லை. இந்தியா மட்டுமே 36 ரன்களுக்கு சுருண்டு விடவில்லை, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என்று அனைத்து அணிகளுமே சரிவு கண்டுள்ளன.
நாட்டுக்காக ஆட இன்னும் 3 வாய்ப்புகள் நமக்கு உள்ளன. நாட்டை தலைநிமிரச் செய்ய 6 இன்னிங்ஸ்கள் நம் கையில் உள்ளன. நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக களமிறங்கும் போது நாட்டுக்குப் பெருமை சேர்க்க ஆடுவது பெரிய கவுரவமாகும். போனவை போகட்டும். பாசிட்டிவ் தன்மைகளைப் பார்க்க வேண்டும், 2 நாட்களுக்கு ஆதிக்கம் செலுத்தினோமே.
ஆனால் தர்ம சங்கடங்களும், தழும்புகளும் இருக்கவே செய்யும் 2வது இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்துமாறு ஆடியிருக்க வேண்டும்.
ஒரு விஷயத்தை இந்திய அணி உணர வேண்டும், ஆஸி.யை இருமுறை சுருட்டும் திறமை கொண்ட பந்து வீச்சு நம்மிடையே உள்ளது. பும்ரா, அஸ்வின், உமேஷ் இருக்கிறார்கள், சிராஜ், வந்துள்ளார், சைனி இருக்கிறார். களத்தில் இறங்கி நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் அவ்வளவே. பந்தை நன்றாக ஊன்று கவனித்து கால்நகர்த்தலில் பாசிட்டிவ் ஆக இருக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார் கம்பீர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.