Home /News /sports /

தினேஷ் கார்த்திக் 91 பந்துகளில் 206 ரன்கள் - இந்திய அணியில் தேர்வு சரி... லெவனில் வாய்ப்பு கொடுப்பார்களா?

தினேஷ் கார்த்திக் 91 பந்துகளில் 206 ரன்கள் - இந்திய அணியில் தேர்வு சரி... லெவனில் வாய்ப்பு கொடுப்பார்களா?

தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட்

தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட்

டெத் ஓவர்களில் தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரில் 91 பந்துகளில் 206 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் டெத் ஓவர்களில் மட்டும் 226.37.

    நடப்பு தொடரில் ஏபி.டிவில்லியர்ஸ் இல்லாத குறையை ஆர்சிபி அணிக்குப்போக்கிய தினேஷ் கார்த்திக் 14 போட்டிகளில் இதுவரை 287 ரன்களை 191.33 என்ற டாப் பேட்ஸ்மென்களின் ஆக அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருப்பதாலும் பன்முகத்திறமை வாய்ந்தவர் என்பதாலும் இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அபிஷேக் நாயர் என்ற முன்னாள் மும்பை வீரரின் உதவியுடன் கடும் பயிற்சியில் ஈடுபட்டு ஹிட்டிங் திறமைகளை வளர்த்துக் கொண்டார், அதன் பலன் ஆர்சிபி அணிக்கு சிறப்பாக ஆடினார். தினேஷ் கார்த்திக் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் என்பதற்கான இன்னொரு அசத்தல் புள்ளி விவரம் என்ன தெரியுமா? நாம் மிரண்டே போய் விடுவோம், டெத் ஓவர்களில் தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரில் 91 பந்துகளில் 206 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் டெத் ஓவர்களில் மட்டும் 226.37.

    37 வயதில் டி20 அணியில் இந்திய தேர்வாளர்கள் தன்னை தேர்வு செய்தே ஆக வேண்டிய நிர்பந்தத்திற்கு தன் மட்டையின் மூலம் தள்ளியுள்ளார் தினேஷ் கார்த்திக். நீண்ட காலமாகவே இந்திய கிரிக்கெட்டில் பெஸ்ட் பினிஷர் தினேஷ் கார்த்திக் தான். ஆனால் பாவம் எம்.எஸ்.தோனி இருந்ததால் இவருக்கு நீண்ட காலம் இடம் கிடைக்கவில்லை, இது ஒரு பெரிய துரதிர்ஷ்டம். விக்கெட் கீப்பராக மட்டும் இல்லாமல் வெறும் பேட்டராக இருந்திருந்தால் தொடக்கத்தில் பவர் ப்ளேயில் இறங்க வேண்டியவர் கூட இந்த தினேஷ் கார்த்திக். பார்ட் டைம் ஸ்பின் பவுலிங்கும் வீசுவார்.

    இத்தனை திறமைகள் இருந்தும் அவரை அணியில் பொருத்த முடியுமா என்பதுதான் சந்தேகமே. ஒரு நல்ல செட்டில்டு இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் 5,6,7-ம் இடங்களில் இறங்க முடியும். ஹர்திக் பாண்டியா பந்து வீச முடியாது என்றால் நிச்சயம் கார்த்திக்குக்கு இடம் உண்டு, ஆனால் ஆல்ரவுண்டர் தேவை எனும்போது அக்சர் படேலுடன் தினேஷ் கார்த்திக் போட்டி போட வேண்டும். 7ம் இடத்திற்கான இந்தப் போட்டி மிக மிக கடினமானது என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

    எனவே தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுக்க வேண்டுமெனில் ஹர்திக் பாண்டியா இடம் கேள்விக்குறியாக வேண்டும், இன்னொரு வாய்ப்பு ரிஷப் பண்ட்டின் பார்ம் தடுமாற்றமாக இருப்பதால் நிச்சயம் அவரை விடவும் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் தினேஷ் கார்த்திக்கிற்குதான் வாய்ப்பளிக்க வேண்டும்.

    ஒருவேளை ஊர் வாயை அடைப்பதற்காக ஸ்குவாடில் எடுத்து விட்டு லெவனில் எடுக்காமல் நிக்கிள், காயம் என்று கூறவும் வாய்ப்பு உண்டு. பொறுத்திருந்து பார்ப்போம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Dinesh Karthik, IPL 2022, RCB

    அடுத்த செய்தி