மறக்க முடியுமா? கிரிக்கெட்டுக்கு வந்து 50 ஆண்டுகள்: அகமதாபாத் மைதானத்தில் கேக் வெட்டி கொண்டாடிய ‘லெஜண்ட்’ சுனில் கவாஸ்கர்

மறக்க முடியுமா? கிரிக்கெட்டுக்கு வந்து 50 ஆண்டுகள்: அகமதாபாத் மைதானத்தில் கேக் வெட்டி கொண்டாடிய  ‘லெஜண்ட்’ சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்.

கவாஸ்கர் என்றால் எதிரணி கேப்டன்கள் 3 ஸ்லிப், 4 ஸ்லிப், 2 கல்லி என்று பீல்ட்செட் அப் செய்வது போக அன்று ஹோல்டிங், மார்ஷல், பவுன்சர்களை சிக்சர்களுக்கு கவாஸ்கர் தூக்கி ஹூக் ஷாட் அடிக்க, லாங் லெக், டீப் ஸ்கொயர் லெக், ஃபைன் லெக் என்று லாய்ட் பீல்டிங்கை மாற்ற வேண்டியதாயிற்று.

  • Share this:
மார்ச் 6, 1971 இந்திய கிரிக்கெட்டில் லெஜண்ட் கவாஸ்கர் தன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி தன் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய நாள். 50 ஆண்டுகள் ஓடிவிட்டன.

இதைக் கொண்டாடும் விதமாக கவாஸ்கர் இன்று வர்ணனை அறையிலும், மைதானத்திலும் கேக் வெட்டிக் கொண்டாடினார்.டான் பிராட்மேனின் 29 சதங்கள் சாதனையை உடைப்பதுதான் தன கனவு என்று கூறி வந்தவர் சாதித்தும் விட்டார், 34 சதங்களையும் 10,000 டெஸ்ட் ரன்களையும் முதலில் எடுத்தவர் சுனில் கவாஸ்கர்.

1971-ல் அரக்கத்தனமான மே.இ.தீவுகளுக்கு எதிராக கவாஸ்கர் தன் 21வது வயதில் அறிமுகமாகிறார். அந்தத் தொடரில் 774 ரன்களை 4 டெஸ்ட் போட்டிகளில் அடித்த போது தலையில் தொப்பியோடு தான் ஆடுவார் சுனில் கவாஸ்கர் அதன் பிறகுதான் ஸ்கல் கேப் போட்டு ஆடினார், ஹெல்மெட் போட மாட்டார்.

உலகின் மிகப்பெரிய வேகப்பந்து வீச்சாளர்களையெல்லாம் தொடக்கத்தில் இறங்கி முதல் பந்தில் சந்தித்த அசாத்திய துணிச்சல் கொண்ட சுனில் கவாஸ்கர் பற்றி இன்றைய மட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை இவர்கள் கவாஸ்கர் 1975 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் 333 ரன்களை விரட்டும்போது 36 நாட் அவுட் என்ற ஒன்றை வைத்தே எடைபோடுவார்கள், இன்றைய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிரிக்கெட் வரலாறும் தெரியாது, தரமான கிரிக்கெட் என்றால் என்னவென்றும் தெரியாத டி20 கால ரசிகர்கள் இவர்கள்.

கவாஸ்கர் மட்டும் இல்லையென்றால் எவ்வளவோ மோசமான தோல்விகளைச் சந்தித்திருக்க வேண்டியிருந்திருக்கும், ஆனால் அவரால் அந்த டெஸ்ட் போட்டிகள் டிரா ஆனது, போர்ட் ஆஃப் ஸ்பெயினில் ராபர்ட்ஸ், ஹோல்டிங், ஜூலியன், ஹோல்டருக்கு எதிராக 406 ரன்களை விரட்டி வெற்றி பெற வைத்தார், இங்கிலாந்தில் ஓவலில் 438 ரன்கள் இலக்கை விரட்டி இந்தியா 429/8 என்று டிரா செய்த போது 221 ரன்கள் விளாசினார்.
சுனில் கவாஸ்கர்


பாகிஸ்தானில் ஒருமுறை கடும் நடுவர் மோசடிகளுக்கு இடையில் 3 சதங்களை விளாசியுள்ளார், அதில் 111, 137 என்று ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்தார், இது போன்று அவர் 3 முறை செய்துள்ளார். அதில் 1971 அறிமுகத் தொடரிலேயே 124, 220 என்று ஒரு டெஸ்ட் போட்டியில் அசத்தினார்.

தன் முதல் தொடரில் அவரின் ஸ்கோர் 65, 67 நாட் அவுட், 116, 64, 1, 117 நாட் அவுட், 124 மற்றும் 220, முதல் தொடரிலேயே பயங்கரமான வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 774 ரன்கள் 4 சதங்கள் ஒரு இரட்டைச் சதம், ட்ரூ லெஜண்ட்.

125 டெஸ்ட் போட்டிகளில் 10.122 ரன்களை எடுத்துள்ளார் கவாஸ்கர். 34 சதங்களில் பயங்கர மே.இ.தீவுகள் பவுலிங்குக்கு எதிராகவே 15 சதங்கள். 108 ஒருநாள் போட்டிகளில் 3092 ரன்கள். 1983 உலகக்கோப்பைக்கு முன் மே.இ.தீவுகள் பயணத்தில் அந்த புகழ்பெற்ற பெர்பைஸ் ஒருநாள் போட்டியில் 90 ரன்களை விளாசி மே.இ.தீவுகளை என்ன சேதி என்று கேட்டு அந்தப் போட்டியில் வென்றது இந்தியா இதுதான் 1983 உலகக்கோப்பை வெற்றிக்கு முன்னோடி இன்னிங்ஸ், போட்டியாகும்.

1983 உலகக்கோப்பைத் தோல்விக்குப் பிறகு லாய்ட் தலைமை வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கு வெறியோடு வந்த போது கான்பூர் டெஸ்ட் போட்டியில் மார்ஷல் பவுன்சரில் கவாஸ்கர் மட்டையில் பட்டு மட்டையே பறந்தது, பந்து கேட்ச் ஆக மட்டையை மைதானத்திலிருந்து கவாஸ்கர் பொறுக்கிக் கொண்டு சென்ற காட்சி அப்போதெல்லாம் மனதை பிசைய வைத்த காட்சியாகும், இதன் பிறகே அனைவரும் கவாஸ்கர் முடிந்து விட்டார், அவ்வளவுதான் என்றனர்.

ஆனால் அடுத்த போட்டி டெல்லியில் அப்போது கவாஸ்கரிடம் பேட் பறந்தது பற்றி கேட்டனர், அதற்கு கவாஸ்கர், “மார்ஷல் பந்து கூடுதல் வேகத்தில், கூடுதல் பவுன்சில் வந்தது அதைத் தடுத்தாடக் கூடாது ஹூக் ஆடியிருக்க வேண்டு, டெல்லியி ஹூக் ஷாட் ஆடி அதை எதிர்கொள்வேன்” என்றார், உடனே அனைவரும் கவாஸ்கர் ஹூக் ஷாட் ஆடுவதா என்று ஆச்சரியப்பட்டனர்.

ஆனால் டெல்லியில் நடந்தது அதுதான். கவாஸ்கர் என்றால் எதிரணி கேப்டன்கள் 3 ஸ்லிப், 4 ஸ்லிப், 2 கல்லி என்று பீல்ட்செட் அப் செய்வது போக அன்று ஹோல்டிங், மார்ஷல், பவுன்சர்களை சிக்சர்களுக்கு கவாஸ்கர் தூக்கி ஹூக் ஷாட் அடிக்க, லாங் லெக், டீப் ஸ்கொயர் லெக், ஃபைன் லெக் என்று லாய்ட் பீல்டிங்கை மாற்ற வேண்டியதாயிற்று. 36 நாட் அவுட் என்று இன்று கேலி பேசும் ரசிகர்களுக்கு அன்று டெல்லியில் 95 பந்துகளில் சேவாக் பாணியில் மே.இ.தீவுகளுக்கு எதிராக சதம் அடித்த கவாஸ்கரைத் தெரியுமா என்ன? அல்லது அதே தொடரில் கடைசி டெஸ்ட் போட்டியில் நம் சென்னையில் மே.இ.தீவுகளுக்கு எதிராக 236 அடித்த கவாஸ்கரைத்தான் தெரியுமா என்ன?
Published by:Muthukumar
First published:

சிறந்த கதைகள்