நாங்கள் வெற்றி பெறுவதற்காக ஆடுகிறோம்; 5 நாட்கள் வரை ஆட்டத்தை கொண்டு செல்ல அல்ல: விராட் கோலி திட்டவட்டம்

விராட் கோலி

இரு அணிகளுமே மோசமாக பேட்டிங் செய்தோம். பிட்சில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு போதிய அனுபவம் பெற்றவனாக இருக்கிறேன் என்று நம்புகிறேன்.

  • Share this:
அகமதாபாத் டெஸ்ட் போட்டி ஒன்றரை நாட்களில் முடிந்து விட்ட நிலையில் பல விமர்சனங்கள் எழுந்தன, இரு அணிகளுக்குமே பேட்டிங் வரவில்லை, இப்படி ஒரு பிட்சா என்று பலரும் விமர்சனம் வைத்தனர்.

இந்நிலையில் விராட் கோலி “நாங்கள் வெற்றி பெறுவதற்காக ஆடுகிரோமே தவிர ஆட்டத்தை 5-ம் நாள் வரை கொண்டு செல்ல அல்ல” என்று கூறியுள்ளார்.

பாவம்! விராட் கோலிக்கு ஒளிப்பரப்பு உரிமை பெற்றவர்கள் 2 நாட்களில் டெஸ்ட் முடிய மீதி 3 நாட்களுக்கு என்னத்தைக் கொண்டு அந்த நேரத்தைத் தேய்ப்பார்கள் என்ற அறியாமையில் பேசுகிறாரா இல்லை ஏதாவது பேச வேண்டுமே, விமர்சனங்களுக்கு பதில் கூற வேண்டுமே என்பதற்காகப் பேசுகிறாரா என்று தெரியவில்லை.

பிட்சை குழிப்பிட்சாகப் போட்டு விட்டு ஒன்றரை நாட்களில் டெஸ்ட் முடியுமாறு செய்து விட்டு ஆட்டத்தை ஏதோ இவர் நினைத்தால் 5 நாட்களுக்கு இழுப்பது போல பேசுகிறார், பிட்ச் பள்ளம், கிடுகிடு குழிப் பிட்ச் என்ற உண்மையான முழுப்பூசணிக்காயை வெற்றி பெற ஆடுகிறோம் என்ற சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்.

இனி இந்தியாவில் டெஸ்ட் நடந்தால் கோடி கோடியாக பணத்தைக் கொட்டி லாபம் ஈட்ட எடுக்கும் நேரலை ஒளிபரப்பு தொலைக்காட்சி நிறுவனங்கள் குறைந்தது 4 நாட்களாவது நடக்குமா என்ற உத்தரவாதத்தை கேட்டுக் கொண்டுதான் ஒளிபரப்பு உரிமையை எடுப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு விளம்பரம் கொடுக்கும் நிறுவனங்களுக்கு பேக்கேஜ் அடிப்படையில்தான் கட்டணம் வசூலிப்பார்கள், இப்படியிருக்க 5 நாட்கள் டெஸ்ட் ஒன்றரை நாளில் முடிய மீதி நாட்களில் அதுவும் பகலிரவு போட்டி என்றால் பிரைம் டைமான மதியம் 2.30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மீதி 3 நாட்களுக்கு அவர்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும். இது பற்றி கோலிக்கு தெரியவந்தால் ஒருவேளை ‘5 நாட்கள் டெஸ்ட் சென்றால்தான் அது உண்மையான டெஸ்ட்’ என்று பல்டி அடித்தாலும் அடிப்பார்.

இப்போதைக்கு அவர் கூறுவதைப் பார்ப்போம்: “கிரிக்கெட் பந்து, பிட்ச் ஏன் இப்படி அடிக்கடி விவாதப்பொருளாகிறது என்பது எனக்குப் புரியவில்லை. பேட்ஸ்மென்கள் போதிய திறமை இல்லாமல் ஆட்டமிழக்கிறார்கள்.

இரு அணிகளுமே மோசமாக பேட்டிங் செய்தோம். பிட்சில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு போதிய அனுபவம் பெற்றவனாக இருக்கிறேன் என்று நம்புகிறேன்.

ஆஸ்திரேலியா, அல்லது இங்கிலாந்தில் நாங்கள் தொடருக்குச் செல்லும் போது ஹோம் அட்வாண்டேஜ் பற்றி என்னிடம் கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன். பந்துகள் திரும்பும் இரண்ட் பிட்ச்களுக்குப் பிறகு அல்ல.

நான் ஒரு கேள்வி கேட்கிறேன், நாம் விளையாடுவது வெற்றி பெறுவதற்காகவா அல்லது ஆட்டத்தை 5 நாட்களுக்குக் கொண்டு செல்வதற்காகவா? இது என்ன பொழுதுபோக்கா? வெற்றிபெற ஆடுகிறோம் அனைவரும் ரன் எடுப்பதற்காக ஆடவில்லை. இந்தியா வெற்றி பெறுவதை ரசிகர்கள் விரும்புகிறார்கள், எத்தனை நாட்களில் என்பது கேள்வி அல்ல” என்று பொரிந்து தள்ளினார்.
Published by:Muthukumar
First published: