• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • தோல்விக்குக் கிடைத்த ‘பரிசு’ கொலை மிரட்டல்: டுபிளெசிஸ் பேட்டி

தோல்விக்குக் கிடைத்த ‘பரிசு’ கொலை மிரட்டல்: டுபிளெசிஸ் பேட்டி

டுபிளெசிஸ்

டுபிளெசிஸ்

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் 3-வது காலிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்ததால் தனக்கும் தன் மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தென் ஆப்பிரிக்காவின் சிஎஸ்கே வீரர் ஃபாப் டு பிளெசிஸ் இப்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிட்டுள்ளார்.

 • Share this:
  டேனியல் வெட்டோரி தலைமை நியூஸிலாந்து அணிக்கும் கிரேம் ஸ்மித் தலைமை தென் ஆப்பிரிக்கா அணிக்கும் இடையே 2011-ம் ஆண்டு டாக்காவில் மார்ச் 25-ல் நடைபெற்ற 3வது காலிறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஒவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்களையே எடுத்தது.

  இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்கா 24 ஓவர்களில் 108/2 என்று வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. ஜாக் காலீஸ் (47), டிவில்லியர்ஸ் (35) கிரீசில் இருந்தனர். ஆனால் ஜாக் காலீஸ், டிம் சவுதி பவுன்சரை தூக்கி சிக்சருக்கு விரட்டினார், ஆனால் பவுண்டரியில் ஜேகப் ஓரம் என்ற அபார பீல்டர் திகைப்பூட்டும் வகையில் எம்பிப் பிடிக்க ஆட்டம் திருப்பு முனை கண்டது.

  அடுத்து டுமினி 3 ரன்களில் நேதன் மெக்கல்லம் பந்தில் வெளியேற, அதே ஓவரில் ஏ.பி.டிவில்லியர்ஸ், கப்தில் த்ரோவுக்கு ரன் அவுட் ஆக தென் ஆப்பிரிக்க அணி சோக்கர்ஸ் ஆகிவிடுமோ என்ற ஐயம் நிரூபணமானது. டுபிளெசிஸ் இந்தப் போட்டியில் 43 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து கவர் பாயிண்டில் சவுதியிடம் கேட்ச் ஆகி வெளியேற 9/172 என்று ஆகி இடையில் போத்தா, ராபின் பீட்டர்சன், ஸ்டெய்ன், மோரின் மோர்கெல் என்று வரிசையாக இழந்து 172 ரன்களுக்குச் சுருண்டது, சோக்கர்ஸ் என்ற பட்டப்பெயரைத் தக்க வைத்தது.

  அப்போது மீம் இருந்திருந்தால், வடிவேலுவை வைத்து ‘என்னடா ஸ்கோர் 100 ஆயிடுச்சே, இன்னும் எதுவும் நடக்கல்லையேன்னு பார்த்தேன்’ என்று போட்டிருக்கலாம். அப்படி ஒரு கொலாப்ஸ்.

  வெற்றிக்கு ஒரு கண்ணியாக இருந்த டுபிளெசிஸ் ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் தலையில் இடி போல் இறங்கியது.

  இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு டுபிளெசிஸ் இதைப்பற்றி கூறியதாவது:

  “2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் நாங்கள் தோல்வி அடைந்தோம். அந்தப் போட்டி முடிந்த சில மணி நேரங்களில் எனக்குத் தனிப்பட்ட முறையில் கொலை மிரட்டல் வந்தது. என் மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. நாங்கள் உடனடியாக சமூக வலைதளத்திலிருந்து வெளியேறினோம். எங்கள் நாட்டுக்குச் சென்றுவிட்டோம். இது எங்கள் இருவருக்கும் மட்டுமே அறிந்ததாக இருந்தது.

  இதுபோன்ற குற்றத்துக்குரிய நிகழ்வுகள் அங்கு நடந்தன. ஆனால், மறுபடியும் நான் செல்லவில்லை. அங்கு எங்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்பதால், அணிக்குள் சிறிய குழுவாக இருக்க நாங்கள் தள்ளப்பட்டோம். எங்கள் அணிக்குள்ளேயே பாதுகாப்பான இடத்தை உருவாக்கவே நான் கடினமாக உழைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

  பணமழை ஐபிஎல் போட்டிகளில் காட்டும் தீவிரத்தை கொஞ்சமாவது உலகக்கோப்பை போட்டிகளில் காட்ட வேண்டும் என்பது எல்லா நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருப்பது தவறில்லை, ஆனால் தோல்விக்காக கொலை மிரட்டல் விடுக்கப்படுவதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் அப்போது அங்கலாய்த்தது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: