Home /News /sports /

1983 June 25th World Cup | இதே ஜூன் 25ம் தேதி: 1983 உலகக் கோப்பையை வென்ற ‘கபில்ஸ் டெவில்ஸ்’- இந்திய அணியின் இரும்பு மனிதன் ‘ஜிம்மி’ அமர்நாத்

1983 June 25th World Cup | இதே ஜூன் 25ம் தேதி: 1983 உலகக் கோப்பையை வென்ற ‘கபில்ஸ் டெவில்ஸ்’- இந்திய அணியின் இரும்பு மனிதன் ‘ஜிம்மி’ அமர்நாத்

உலகக்கோப்பையுடன் கேப்டன் கபில், ஆட்ட நாயகன் அமர்நாத்.

உலகக்கோப்பையுடன் கேப்டன் கபில், ஆட்ட நாயகன் அமர்நாத்.

டெஸ்ட் கிரிக்கெட் உலக கிரிக்கெட்டின் உண்மையான ரசிகர்களின் ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெற்றிருந்த 1970-ம் ஆண்டுகளில் திடீரென ஒரு ஐடியாவாக உதித்ததுதான் உலகக்கோப்பை ஒருநாள் கிரிகெட் தொடர்.

1975ம் ஆண்டு ஐசிஐசிஐ புருடெண்ஷியல் உலகக்கோப்பை கிரிகெட் தொடரில் அப்போதைய ஜாம்பவான்களான வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளே அதிகம் இந்த வடிவத்தில் கோலோச்சின. இறுதிப் போட்டி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடந்தது. அப்போது பெவிலியனில் அன்ஷுமன் கெய்க்வாடுடன் இந்தப் போட்டியை ரசித்த இந்திய கிரிக்கெட்டின் இரும்பு மனிதன், ஜிம்மி என்று செல்லமாக அழைக்கப்படும் மொகீந்தர் அமர்நாத், கெய்வாடிடம், “அன்ஷு, நாமும் ஒருநாள் இறுதிப் போட்டியில் இப்படி களமிறங்கினால் பிரமாதமாக இருக்கும் அல்லவா” என்று கேட்டார்.

அமர்நாத்தின் அப்போதைய இந்தக் கேள்வி பலருக்கும் நகைப்புக்குரியதாகவே இருக்கும், கேலிக்கும் கிண்டலுக்கும் கூட ஆளாகியிருக்கும், அடுத்த 8 ஆண்டுகள் அல்ல 50 ஆண்டுகள் ஆனாலும் இந்தியாவெல்லாம் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு வருவதாவது என்ற எண்ணப்போக்குதான் காணப்பட்டது.

ஆனால் மொகீந்தர் அமர்நாத்தின் கனவு 8 ஆண்டுகளிலேயே 1983-ல் நடந்தது, அவரது கனவு மட்டுமல்ல கோடானு கோடி இந்திய ரசிகர்களின் தீராத அவாவாகவும் இருந்ததே.இரண்டு முறை கிளைவ் லாய்ட் தலைமையில் உலகக்கோப்பையை வென்ற வலுவான மே.இ.தீவுகளை முதல் போட்டியிலேயே இந்திய அணி 1983 உலகக்கோப்பையில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. இந்த தோல்வியினால் லாய்ட் கடும் கோபத்தில் இருந்தார், 2வது சுற்றுப் போட்டியில் மீண்டும் இந்தியா ஆடியபோது விவ் ரிச்சர்ட்ஸ் பொளந்து கட்டி 119 ரன்களை விளாச 9விக்கெட்டுகள் இழப்புக்கு 282 ரன்களை எடுத்தது தொடர்ந்து ஆடிய இந்திய அணி 192/4 என்று இலக்கை விரட்டி விடும் அச்சுறுத்தலை கொடுத்தது, இரும்பு மனிதன் மொகீந்தர் அமர்நாத் மார்ஷல் பந்தில் தாவாங்கட்டையில் மட்டென்று அடிவாங்கி ஓரமாப் போய் தேய்த்து விட்டுக் கொண்டு சிரித்தபடியே அடுத்த பந்துக்குத் தயாராகி 80 ரன்களை எடுத்தார், திலிப் வெங்சர்க்கார், மிகப்பிரமாதமாக ஆடி 32 ரன்களில் 7 பவுண்டரிகளை விளாசி இவரும் அமர்நாத்தும் 67 ரன்கள் என்று வலுவாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது வின்ஸ்டன் டேவிஸ் என்ற வேகப்பந்து வீச்சாளரை ஒரே ஓவரில் வெங்சர்க்கார் 4 பவுண்டரிகளை விளாசி லாய்டுக்கு அதிர்ச்சியளித்தார். கடைசியில் இவர் மார்ஷல் பந்தில் அடிவாங்கி ரிட்டையர்டு ஆக, அமர்நாத்தும் 80 ரன்களில் ஹோல்டிங் பந்தில் வெளியேற, கபில்தேவ் ஆக்ரோஷமாக ஆடி 36 ரன்களை விளாசினார், ஆனால் இந்திய அணி இன்னும் 7 ஓவர்கள் மீதமிருக்க 216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மார்ஷல் 11 ஓவர் 3 மெய்டன் 20 ரன்கள் 1 விக்கெட். இந்தப் போட்டியில் இந்தியா இலக்கை விரட்டியதும் லாய்டுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.இதன் பிறகுதான் ஒரே தொடரில் 3வது முறையாக, அதுவும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஆடினால் லாய்ட் சும்மா விடுவாரா? எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற துடிப்புடன் இந்திய அணி. ஊதிவிடுவோம் என்ற மெதப்பில் மே.இ.தீவுகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லார்ட்ஸ், ஜூன் 25, 1983 காலை இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் விடிந்தது. அன்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆட்டம் வேறு அனைவரையும் ஆவலுடன் எதிர்நோக்க வைத்தது. டாஸ் வென்ற லாய்ட் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார்.

சுனில் கவாஸ்கர் 2 ரன்களில் ராபர்ட்ஸிடம் வெளியேறினார். ஜிம்மி அமர்நாத் இறங்க கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்துக்கு மறக்க முடியாத ஆட்டமாக இது அமைந்தது, ராபர்ட்சின் ஒரு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஃபுல் லெந்தில் சென்றபந்தை மண்டி போட்டு ஆஃப் சைடு ஸ்வீப் போல ஸ்ரீகாந்த் ஒரு அதிர்ச்சிகரமான ஷாட்டை அடித்து பவுண்டரிக்கு விரட்ட அதுதான் பல விளையாட்டு இதழ்களின் அடுத்த வார அட்டைப்படமாக இருந்தது. கிரேட் ஷாட் என்று பலரும் விதந்தோதினர்.

ஸ்ரீகாந்த் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 57 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து மார்ஷலிடம் எல்.பி.ஆனார். அமர்நாத் 26 ரன்களில் ஹோல்டிங்கிடம் பவுல்டு ஆனார். கபில்தேவ் 15 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளிக்க அதிரடி வீரர் சந்தீப் பாட்டீல் 29 பந்துகளில் 1 சிக்சருடன் 27 ரன்கள் எடுத்தார். மதன்லால் 17, சையத் கிர்மானி 11, பல்வீந்தர் சாந்து 11 நாட் அவுட் என இந்தியா 183 ரன்களுக்கு 54.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது.

சாந்துவின் அந்த ஸ்விங் பந்தும்,  கபிலின் கேட்சும், அமர்நாத் எனும் அற்புதனும்:

அனைவரும் 183 ரன்களா ரிச்சர்ட்ஸ் ஒரு காலில் பேடைக் கட்டிக் கொண்டு முடித்து விடுவார், ரிச்சர்ட்ஸ் இறங்க மாட்டார், ஹெய்ன்ஸ், கார்டன் கிரீனிட்ஜே முடித்து விடுவார் என்றேல்லாம் பேச்சுக்கள் ஆங்காங்கே ஓடிக்கொண்டிருந்தன.

அப்போதுதான் கார்டன் கிரீனிட்ஜ், பல்வீந்தர் சாந்துவின் இன்ஸ்விங்கரை ஆடாமல் விட்டு பவுல்டு ஆனார். ரிச்சர்ட்ஸ் இறங்கினார் பளார் பளார் என்று அறை விழும் சப்தம்தான், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 13 ரன்களில் மதன்லாலிடம் ஆட்டமிழக்க, ரிச்சர்ட்ஸ் 28 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் விளாச ஸ்கோர் விறுவிறுவென ஏறிக் கொண்டிருந்தது, அப்போதுதான் மதன்லால் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீச ரிச்சர்ட்ஸ் அதனை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பும் கோபத்துடன் சுழற்ற டாப் எட்ஜ் ஆகி வானில் பந்து சென்று கொண்டிருந்தது, கபில் தேவ் ரொம்ப தூரம் ஓடிப்போய் அந்த வின்னிங் கேட்சை எடுக்க இந்தியாவுக்கு கதவுகள் திறந்தன.

சந்தீப் பாட்டீல் எனும் பிரமாத அதிரடி பேட்ஸ்மென்.


லாரி கோம்ஸ், பவுட் பாக்கஸ் ஆகியோரை மதன்லால், சாந்து வெளியேற்ற மே.இ.தீவுகள் 76/6 என்று சரிந்தது. கிளைவ் லாய்ட் காயமடைந்த நிலையில் பின்னி பந்தில் கபிலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜெஃப் டியூஜானும் மார்ஷலும் ஸ்கோரை 119 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். அப்போதுதான் இரும்பு மனிதன் மொகீந்தர் அமர்நாத் பந்து வீசி டியூஜான், மார்ஷல் மற்றும் கடைசி விக்கெட்டான மைக்கேல் ஹோல்டிங் விக்கெட்டுகளைக் கைப்பற்ற கபில்தேவ் ஆண்டி ராபர்ட்ஸை எல்.பி. செய்ய இந்திய அணி சாம்பியன்!! அமர்நாத் 7 ஓவர் 12 ரன் 3 விக்கெட், ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

இந்திய கிரிக்கெட்டின் திருப்பு முனை அதுதான்.
Published by:Muthukumar
First published:

Tags: Cricket, ICC world cup, Team India

அடுத்த செய்தி