ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்: 220 ரன்களுக்கு சுருண்ட தெ.ஆ; பாகிஸ்தானும் திணறல்

2 விக்கெட்டுகளைச் சாய்த்த ரபாடா.

பாபர் ஆஸம், 7 ரன்களில் மஹாராஜின் விரைவு பந்துக்கு கால்காப்பில் வாங்கி வெளியேறினார், ரிவியூவும் பலனளிக்கவில்லை, நைட் வாட்ச்மேன் ஷாஹின் அஃப்ரீடி நார்ட்யே பந்தில் ஸ்டம்ப் எகிற வெளியேறினார்.

  • Share this:
கராச்சியில் தென் ஆப்பிரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 14 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

ஆம்! தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 220 ரன்களுக்கு மடிய, தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 33 ரன்களை எடுத்து தடுமாறி வருகிறது.

தென் ஆப்பிரிக்கா 200 ரன்களுக்கும் கீழ் போயிருக்க வேண்டியதுதான், ஆனால் பாகிஸ்தான் அணி தேநீர் இடைவேளைக்குப் பிறகு சிலபல கேட்ச்களை விட்டனர்.

220 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா ஆக்ரோஷமாக களம் திரும்பியது, இதில் ரபாடாவின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் பாகிஸ்தான் தொடக்க வீரர்களான பட், அபிட் வெளியேறினர், மிக முக்கியமாக மஹராஜிடம் பாபர் ஆஸம் வெளியேற நைட் வாட்ச்மேன் ஷாஹின் அப்ஃரீடியின் ஸ்டம்பை பறக்க விட்டார் நோர்ட்யே. இதனையடுத்து 33/4 என்ற நிலையில் பவாத் ஆலம் 5 ரன்களுடனும் அசார் அலி 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. 2007-க்குப் பிறகு பாகிஸ்தானில் தென் ஆப்பிரிக்கா டாஸில் வென்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா பேட்டிங் சரிவுக்கு அவர்களே காரணம். 2 வீரர்கள் ரன் அவுட். அறிமுக ஸ்பின்னர் நவ்மானிடம் விக்கெட்டை தூக்கி எறிந்தார் குவிண்டன் டி காக் (15). நவ்மான் தன் 34வது வயதில் முதல் டெஸ்ட்டில் ஆடுவதும் குறிப்பிடத்தக்கது.

டீன் எல்கர் (58) வழக்கம் போல் கட்டுக்கோப்புடன் ஆடினார், ஆனால் அவரும் வைடு பந்தை ட்ரைவ் ஆடப்போய் நவ்மான் பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ரஸி வான் டெர் டியூசன், தெம்பா பவுமா இருவரும் ரன் அவுட் ஆனார்கள். பாக். ஸ்பின்னர் யாசிர் (3/54) முக்கிய விக்கெட்டான டுபிளெசிஸ் (23) விக்கெட்டை வீழ்த்தினார், இவர் விக்கேட் கீப்பர் ரிஸ்வானிடம் எட்ஜ் செய்தார்.

ஜார்ஜ் லிண்ட் (35), ரபாடா (21) கடைசியில் கொஞ்சம் சரிவைத் தடுக்க தென் ஆப்பிரிக்கா 220 ரன்களுக்குச் சுருண்டது. அப்ரீடி 2 விக்கெட்டுகளையும் அறிமுக ஸ்பின்னர் நவ்மான் அலி 2 விக்கெட்டுகளையும் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் அபிட் அலி ரபாடா வேகத்துக்கு பவுல்டு ஆனார். அறிமுக தொடக்க வீரர் இம்ரான் பட் 9 ரன்களில் ஷார்ட் ரைசிங் பந்துக்கு கேட்ச் ஆகி ரபாடாவிடம் வெளியேறினார்.

பாபர் ஆஸம், 7 ரன்களில் மஹாராஜின் விரைவு பந்துக்கு கால்காப்பில் வாங்கி வெளியேறினார், ரிவியூவும் பலனளிக்கவில்லை, நைட் வாட்ச்மேன் ஷாஹின் அஃப்ரீடி நார்ட்யே பந்தில் ஸ்டம்ப் எகிற வெளியேறினார். பாகிஸ்தான் 33/4 என்று உள்ளது.
Published by:Muthukumar
First published: