மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா இணைந்து 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதையொட்டி, ரோகித் சர்மாவுக்கு அணி நிர்வாகமும், ரசிகர்களும் வாழ்த்து கூறியுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி தனக்கு இன்னொரு குடும்பத்தை போன்றது என்று ரோகித் சர்மா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகம் முழுவதும் மிகப் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த போட்டிக்காக உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வலுவான அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த அணி 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், 2 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் கைப்பற்றி மிகப்பெரும் கவுரவத்தை பெற்று உள்ளது. இதற்கு அந்த அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.
கடந்த 2011 ஜனவரி 8ஆம் தேதி நடந்த ஏலத்தின் போது 23 வயதான ரோகித் சர்மா, டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மும்பை அணிக்கு வந்து 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது- 12 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடி உள்ளேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது எனக்கு உணர்ச்சிகரமான பயணம். மிகப்பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்கள், இளம் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளோம்.
அதேபோன்று வருங்காலத்திலும் பல சாதனைகளை ஏற்படுத்த மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறோம். மும்பை இந்தியன்ஸ் அணி எனக்கு குடும்பத்தை போன்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 182 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 4,709 ரன்களை குவித்துள்ளார். இதில் ஒரு சதமும், 32 அரை சதமும் அடங்கும்.
கடந்த சீசனில் மிக மோசமான ஆட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வெளிப்படுத்தியது. கடந்த சீசனில் 14 ஆட்டங்களில் விளையாடிய அந்த அணி 4 -இல் மட்டுமே வெற்றி பெற்றது.
நான் பேட்டிங் செஞ்சு நீங்க பாத்ததில்லைனு நினைக்கிறேன்.. சூர்யகுமார் யாதவிடம் ஜாலி செய்த டிராவிட்!
தற்போது அணியில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், இஷான் கிஷன், டிம் டேவிட், கேமரூன் க்ரீன் உள்ளிட்ட முக்கிய ஆட்டக்காரர்கள் நல்ல பார்மில் இருப்பதால் நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.