கோபா அமெரிக்க கால்பந்து : கடைசி நிமிடத்தில் த்ரில் கோல்... பெருவை வீழ்த்தி கொலம்பியா மூன்றாவது இடம்

கோபா கால்பந்து

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பெருவை வீழ்த்தி கொலம்பிய அணி மூன்றாவது இடத்தை தட்டிச்சென்றது.

  • Share this:
    தென் அமெரிக்க கண்டங்களில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்க கால்பந்து தொடர் விறுவிறுப்பான முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ளது. அரையிறுதியில் பிரேசிலிடம் தோல்வியடைந்த பெரு அணியும், அர்ஜென்டினா அணியுடன் தோல்வியடைந்த கொலம்பியா அணியும் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். பந்தை அதிக நேரம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினர்.

    முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் பெரு அணி வீரர் yoshimar எதிரணியின் தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி லாவகமாக கோல் அடித்து அணிக்கு முன்னிலையை ஏற்படுத்திக்கொடுத்தார். இரண்டாவது பாதியில் கொலம்பிய அணி பதிலடி கொடுக்க முனைப்பு காட்டியது. போட்டி தொடங்கிய நான்காவது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை Juan அற்புதமாக கோல் வலைக்குள் தள்ளி ஆட்டத்தை சமன்படுத்தினார்.

    இதனை தொடர்ந்து ஆட்டத்தின் 66 வது நிமிடத்தில் கொலம்பியாவின் நம்பிக்கை லூயிஸ் டயாஸ் கோல் அடிக்க ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. அடுத்த 10 வது நிமிடத்தில் பெரு அணி வீரர் லபாடுலா பதிலடி கொடுக்கும் விதமாக அசத்தலான கோலை பதிவு செய்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

    பிரதான நேரத்தில் 2-2 என ஆட்டம் சமனில் இருக்க காயங்களுக்காக அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில் கார்னரிலிருந்து வந்த பந்தை தலையால் முட்டி கோல் அடித்தார் கொலம்பியாவின் வெற்றி நாயகன் லூயிஸ் டயாஸ். போட்டி நேரம் முடிந்ததால் பெரு அணியால் பதில் கோல் அடிக்கமுடியவில்லை இதனால் 3-2 என்ற கோல்கள் கணக்கில் த்ரில் வெற்றியை ருசித்து மூன்றாவது இடத்தை கைப்பற்றியது கொலம்பிய அணி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: