செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஆடவர் பிரிவில், இந்திய 'பி' அணியில் நம்பிக்கை நட்சத்திரம் பிரக்ஞானந்தா வெற்றிபெற்று, தன் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளார். அத்துடன் 'பி' அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிரணியை வாஷ்-அவுட் செய்து அசத்தியது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி களைகட்டியுள்ளது. இதன் ஆடவர் பிரிவில் இந்திய 'ஏ' அணி, தனது இரண்டாவது சுற்று போட்டியில் மால்டோவா உடன் மோதியது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் வீரர்கள் உற்சாகத்துடன் காய்களை நகர்த்தி எதிராளிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர்.
Commonwealth Games 2022: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்ற மீராபாய் சானு
இப்பிரிவில், நாராயணன் மற்றும் ஹரிகிருஷ்ணன் வெற்றியை ஈட்டித் தந்து, தங்களது அணியை முன்னிலை பெறச் செய்தனர். அத்துடன், சசி கிரணும் 61-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அதேவேளையில், அர்ஜுன் மால்டோவா வீரர் ஆண்ட்ரே மேகோவெய் உடனான போட்டி டிராவில் முடிந்தது. இதனால், இந்திய அணி 3.5 பாயின்ட்களுடன் வெற்றியை வசப்படுத்தியது.
இந்திய 'பி' அணி எஸ்டோனியா அணியை எதிர்கொண்டது. இப்பிரிவில் முதல் சுற்றில் விளையாடாத பிரக்ஞானந்தா, இரண்டாவது சுற்றில் களம் கண்டார். வெள்ளை நிற காய்களுடன் , தன்னை எதிர்கொண்ட கிரில் சுகவினை 41-வது நகர்த்தலில் வீழ்த்தி, தனது அணிக்கு வலு சேர்த்தார்.
மேலும், குகேஷ், அதிபன் மற்றும் சத்வானியும் வாகை சூடியதால் எஸ்டோனியா அணி 2-வது சுற்றில் 4-0 என தோல்வியுற்றது. தொடர்ந்து இரண்டு சுற்றுகளில் எதிரணியை அனைத்து போட்டிகளிலும் வென்று பலம் வாய்ந்தது இந்திய 'பி' அணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தனர்.
ஆடவரில் இந்திய 'சி' அணி, தனது இரண்டாவது சுற்றில் மெக்சிகோ அணிக்கு எதிராக விளையாடியது. இதில் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகேயன் முரளி விளையாடினார். மிகவும் நுட்பமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், மெக்சிகோ வீரர் கெப்போ விடல்-ஐ வீழ்த்தி, வெற்றியை வசப்படுத்தினார். அத்துடன், இரண்டாவது சுற்று ஆட்டங்களில் இந்தியாவுக்கு முதல் வெற்றியையும் ஈட்டிக் கொடுத்தார்.
ஆனால், சூர்யசேகர் கங்குலி, சேதுராமன், அபிஜித் குப்தா ஆகியோர் தங்களது எதிராளிகளுடன் சமபலத்துடன் மோதி, ஆட்டத்தை டிரா செய்தனர். இதனால், இந்திய 'சி' அணி 2 .5 பாயின்ட்கள் எடுத்து போராடி வெற்றிபெற்றது.
மகளிர் பிரிவில் இந்திய A அணி, அர்ஜென்டினா அணியுடன் விளையாடியது. இதில், தமிழக வீராங்கனை வைஷாலி, மரியா ஜோஸ்-க்கு எதிராக கருப்பு நிற காய்களை நகர்த்தி, நீண்ட போராட்டத்துக்கு பின் 90-வது நகர்த்தலில் வெற்றிக்கனியை தட்டிப் பறித்தார்.
இந்த போட்டியில் மற்ற இந்திய வீராங்கனைகளான தனியா சச்தேவ், பாக்தி குல்கர்னியும் வெற்றியை வசப்படுத்தினர். அதேவேளையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொனேரு ஹம்பி டிரா செய்ததால், 3.5 பாயின்டுகள் எடுத்து இந்தியா வெற்றிகண்டது. மகளிர் B அணி, லாத்வியாவை, 3.5 பாயின்ட்களில் வீழ்த்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.