ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கால்பந்தில் கலக்கும் தெருவோரக் குழந்தைகள்.. கத்தார் வரை சென்று கலக்கிய சென்னை வீராங்கனைகள்!

கால்பந்தில் கலக்கும் தெருவோரக் குழந்தைகள்.. கத்தார் வரை சென்று கலக்கிய சென்னை வீராங்கனைகள்!

ஸ்ட்ரீட் ஃபுட்பால் வீராங்கனைகள்

ஸ்ட்ரீட் ஃபுட்பால் வீராங்கனைகள்

மனிதனின் அடிப்படை தேவை கழிவறை. இந்த அத்தியாவசிய வசதி தெருவோரக் குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

தெருவோரக்குழந்தைகளுக்கென நடத்தப்படும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், சென்னையை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்று காலிறுதிவரை முன்னேறி சாதனை நிகழ்த்தினர்.

உலகின் உச்சபட்ச விளையாட்டு திருவிழா என்ற கேள்விக்கு நம் அனைவரின் ஒட்டுமொத்த பதிலாக இருப்பது ஃபிஃபா உலகக் கோப்பை. உலகமே கொண்டாடும் கால்பந்து உலகக் கோப்பை திருவிழாவிற்கு முன், போட்டி நடைபெறும் அதே மைதானத்தில் ஒவ்வொரு முறையும் உலகெங்கிலும் வசிக்கும் தெருவோர குழந்தைகளுக்கென உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

தாய் தந்தையரை இழந்த, வீடற்ற குழந்தைகளின் புகலிடமாக திகழ்வது தெருக்கள்தான். தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகள் தங்கள் அடையாளத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும், தங்கள் மீதான பார்வையை மாற்றுவதற்காகவும் அவர்களுக்கான உலகக் கோப்பை தொடர் களமாக அமைகிறது. லண்டனைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் முயற்சியால் 2010ம் ஆண்டு முதல் தெருவோர குழந்தைகளுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் 5 கண்டங்களிலிருந்து 25 நாடுகளைச் சேர்ந்த தெருவோரக்குழந்தைகளை ஒருங்கிணைத்து பிரத்யேகமாக போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் சென்னையை சேர்ந்த கருணாலயா தொண்டு நிறுவனத்தின் மூலம் 9 தெருவோரக்குழந்தைகள் கத்தார் பறந்தனர். உலகக் கோப்பை போட்டிகளோடு அவர்களுக்கென கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மகிழ்வித்ததுடன், கோரிக்கை மாநாடு நடத்தி கோரிக்கையை வலியுத்த வாய்ப்பையும் ஏற்படுத்தும் கொடுத்துள்ளனர். மனிதனின் அடிப்படை தேவை கழிவறை. இந்த அத்தியாவசிய வசதி தெருவோரக் குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கிறது. இந்த நிலை மாறவேண்டியது அவசியம் என்கிறார் இந்திய அணியின் கேப்டன் சந்தியா.

தாய், தந்தையை இழந்த தன்னைப்போன்றோருக்கு அரசு அடையாள அட்டை என்பது எட்டாக்கனியாக இருப்பதாகவும் அதைப் பெறுவதை எளிமைப்படுத்தவேண்டும் என கூறுகிறார் வீராங்கனை பிரியா. உரிமையை மீட்டெடுக்கும் போராட்ட களத்தில் காலிறுதிவரை சென்ற இந்த குழந்தைகளின் சாதனை இந்தியாவில் கால்பந்து வீர்களின் திறமையை சர்வதேச அரங்கில் நிலைநாட்டியதாக கூறுகிறார் வீராங்கனைகளை கண்டுபிடித்து அவர்களுக்கென பிரத்யேக பயிற்சி வழங்கி கத்தார் அழைத்துச்சென்ற கருணாலயா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பால் சுந்தர். தெருவோரக்குழந்தைகள் தானே என்ற ஏளன பார்வையை உடைத்தெரிந்திருக்கும் இந்த வீராங்கனைகளின் சாதனை ஒட்டுமொத்த இந்தியாவையும் தலைநிமரச்செய்வதுடன் அவர்கள் பாதுகாக்கப்படவேண்டிய முக்கியத்துவத்தையும் உணர்த்தியிருக்கிறது.

First published:

Tags: Chennai, Football, Qatar