Home » News » Sports » CHENNAI BODYBUILDER DINESH WON THE TITLE OF MR TAMIL NADU SADA VJR

மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற சென்னை பாடி பில்டர் தினேஷ்

இசைக்கு ஏற்றார் போல் உடலில் உள்ள ஒவ்வொரு தசையையும் தனி தனியாக பிரித்து நடுவர்களை கவர வீரர்கள் கடுமையாக முயற்சித்தனர்.

மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற சென்னை பாடி பில்டர் தினேஷ்
மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற சென்னை பாடி பில்டர் தினேஷ்
  • News18 Tamil
  • Last Updated: December 14, 2020, 12:25 PM IST
  • Share this:
கொரோனோ கால ஊரடங்கிற்கு பிறகு சென்னையில் களைகட்டிய மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் சென்னை கொரட்டூரை சேர்ந்த தினேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். மிகவும் கடினமான விளையாட்டுகளில் ஒன்றான பாடி பில்டிங்கை தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும் என பாடி பில்டர்கள் வேதனையடைகின்றனர்.

ஆணழகன், இந்த பட்டத்தை விரும்பாத ஆண்களே இருக்க முடியாது அவ்வளவு வசீகரத்தை கொண்ட இந்த விருதை வெல்வது எளிதான காரியமும் அல்ல. இரவு பகல் பாராமல் உணவு கட்டுப்பாடுடன் உடற்பயிற்சி கூடத்தில் உழைத்தால் மட்டுமே இவ்விருது கைகூடும்.

இந்திய பாடி பில்டிங் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு பாடி பில்டிங் சங்கம் ஆதரவுடன் சென்னையில் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்திற்கான போட்டி களைகட்டியது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 400 க்கும் மேற்பட்ட பாடி பில்டர்கள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர். ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளில் உடல் எடைக்கு ஏற்றார் போல் 55 கிலோ முதல் 85 கிலோ வரை மற்றும் அதற்கு மேல் என மொத்தம் 13 சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது.


கொரோனோ முன்னெச்சரிக்கை விதிமுறைகளுடன் நடைபெற்ற இந்த போட்டியில் பாடி பில்டர்கள் தங்கள் உடல் கட்டமைப்பை மேடையில் வெளிப்படுத்திய காட்சி பார்வையாளர்களையும் உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்துச்செல்வதாகவே அமைந்தது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை கைப்பற்றியவர்களுக்கு சான்றிதழ்கள், கேடையம் மற்றும் ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. அனைத்து சுற்றுகளின் முடிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் மட்டும் கலந்துகொள்ளும் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்திற்கான போட்டி அரங்கம் அதிர கொண்டாடப்பட்டது.



சாம்பியன் பாடி பில்டர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் உடல் கட்டமைப்பை மேடையில் வெளிப்படுத்தி விருந்து படைத்தனர். இசைக்கு ஏற்றார் போல் உடலில் உள்ள ஒவ்வொரு தசையையும் தனி தனியாக பிரித்து நடுவர்களை கவர வீரர்கள் கடுமையாக முயற்சித்தனர். இறுதியில் சென்னை கொரட்டூரை சேர்ந்த தினேஷ் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்று சாதனை படைத்தார். பட்டம் வென்ற ஆணழகனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.மத்திய அரசு வேலைவாய்ப்பில் பாடி பில்டிங்கை விளையாட்டாக அங்கீகரித்தது போல் தமிழக அரசும் வேலைவாய்ப்பு வழங்கும் விளையாட்டு பட்டியலில் பாடி பில்டிங்கை சேர்க்க வேண்டும் என அர்ஜூனா விருது வென்றவரும், மிஸ்டர் வேல்ட் பட்டத்தை அழங்கரித்தவருமான பாஸ்கரன் கோரிக்கை வைத்துள்ளார்.

உணவு கட்டுப்பாடுடன், உடலை வருத்தி இரவு - பகல் பாராமல் உடற்பயிற்சி கூடத்தில் உழைக்கும் பாடி பில்டிங் என்பதும் ஒரு விளையாட்டே.  ஆணழகன், மிஸ்டர் தமிழ்நாடு என்ற விருதுகளை விட விளையாட்டு வீரர் என்ற அங்கீகாரமே ஒவ்வொரு பாடி பில்டர்களின் கனவாக அமைந்துள்ளது.
First published: December 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories