மாதவிடாய் வலியால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் தோல்வியடைந்த சீன வீராங்கனை ஜெங் கின்வென், தாம் ஆணாகவே பிறந்திருக்கலாம் என விரக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் மட்டுமல்ல... பிற வீராங்கனைகளும் உடல் சார்ந்து சந்திக்கும் சவால்கள் ஏராளம்.
ஆடுகளத்தில் அசராமல் நின்று பதக்கம் வெல்லும் வீராங்கனைகளை சிங்கப்பெண்.. தங்க மங்கை என்றெல்லாம் வர்ணிக்கிறோம். ஆனால் உடல் ரீதியாக அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பெரும்பாலும் வெளி உலகத்துக்கு தெரிவதில்லை.
அண்மையில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடிய சீன வீராங்கனை ஜெங் கின் வென், மாதவிடாய் வலியால் துடித்தார். இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல், இகா ஸ்விடெக்கிடம் தோல்வி அடைந்தார். மாதவிடாயின் முதல் நாளில் வலியால் தம்மால் விளையாட முடியவில்லை என வேதனைப்பட்ட ஜெங் கின், தாம் ஆணாக இருந்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது என்றபோது ரசிகர்களை கண்ணீர் வடிக்கச் செய்தது.
பொதுவாகவே வீராங்கனைகளுக்கு மாதவிடாய் பெரும் சவாலாகவே இருக்கிறது. 2016ல் ரியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் சீனா தோல்வி அடைந்தது. குழுவாக நடந்த போட்டியில் ஃப்யூ யுவான் ஹூய் (Fu Yuan Hui) தாமதமாக நீந்தியதே தோல்விக்கு காரணம் என விமர்சனங்கள் எழுந்தன. மாதவிடாய் ஏற்பட்டதால் தம்மால் இயல்பாக நீந்த முடியவில்லை என தைரியமாக கூறினார் யுவான் ஹூய்.
"It's that time of the month. I know the ladies watching are probably like, 'Yeah, I got you.'"
Lydia Ko kept it real in her post-round interview after the @PV_Champ 😂🙌 pic.twitter.com/00swxr3Euv
— LPGA (@LPGA) May 2, 2022
விண்வெளி வீராங்கனைகள் சந்திக்கும் சவால் இதை விட கொடியது. விண்வெளிககு புறப்படும் ஒரு மாத்துக்கு முன்பே மாதவிடாயை தடுக்கும் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். 3 ஆண்டுகள் வரை விண்வெளியில் இருக்க வேண்டியதிருந்தால் சுமார் ஆயிரம் மாத்திரைகள் சாப்பிட நேரிடும். இதை தவிர்க்கும் வகையில், "லாங் ஆக்டிங் ரிவர்சிபிள் கான்ட்ரசெப்டிவ்" என்ற சிகிச்சை பலன் தரும் என சொல்லப்படுகிறது. மெல்லிய பிளாஸ்டிக்கால் கருப்பையில் வைக்கப்படும் கருவி, கருமுட்டை உடைவதை தடுக்கும் என கூறப்படுகிறது.
Also Read : மாதவிலக்கு பற்றிய உரையாடல் ஏன் அவசியம்..? ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன..?
மாதவிடாயை தள்ளிப்போட மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டால், மூளை செயலிழப்பு, பக்கவாதம், வலிப்பு ஆகியவை ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
இதுஒருபுறம் இருக்க, சில வீராங்கனைகள் ஹார்மோன் பிரச்னையில் ஆண்களை போலவே தோற்றம் கொண்டிருப்பதால், அவர்களது சாதனைகள் பாதியிலேயே முடக்கப்பட்டதையும் மறுப்பதற்கில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்து, 2006ல் தோஹா ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற சாந்திக்கு பாலின சோதனை இப்படித்தான் பேரிடியாக விழுந்தது. பெண்களுக்கான ஹார்மோன் குறைவாக இருப்பதாக கூறி, அவரிடம் பதக்கம் திரும்ப பெறப்பட்டது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகமாக்கியது.
ஆண்களைப் போல் இன்றி ஆடையும் வீராங்கனைகளுக்கு பெரிய பிரச்னை. டென்னிஸில் சானியா மிர்சா குட்டை பாவாடை அணிந்து விளையாடுவது இஸ்லாத்துக்கு எதிரானது என குரல்கள் எழுந்தன. அதைக்கண்டு சளைக்காத அவர், தமக்கு எது சரி என தோன்றுகிறதோ அதையே செய்வதாக கூறினார். தமிழகத்தில் விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் பல பெண்கள் குட்டைப் பாவாடையும், ஷார்ட்சும் அணிய முடியாமல் சமூகத்தை நினைத்து தயங்கி மைதானத்திற்கு வெளியவே நின்று விட்ட கதைகள் பல நூறு உண்டு.
வெற்றியோ...தோல்வியோ... வீரர்களை விட வீராங்கனைகள் சந்திக்கும் சவால்களும், வலிகளும் அதிகம் என்பதே மறுக்க முடியாத உண்மை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sports Player, Women