டோக்கியோ மண்ணில் முதன்முறை ஓடும்போது அழுகை வந்தது - மதுரை திரும்பிய தடகள வீராங்கனை ரேவதி உருக்கம்

தடகள வீராங்கனை ரேவதி

டோக்கியோ மண்ணில் முதன்முறையாக ஓடும்போது அழுகை வந்தது என்று மதுரை திரும்பிய தடகள வீராங்கனை ரேவதி தெரிவித்துள்ளார்.

  • Share this:
மதுரையில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று நாடு திரும்பிய வீராங்கனை ரேவதிக்கு சொந்த ஊரில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் அவரது பாட்டி ஆரம்மாள், பயிற்சியாளர் கண்ணன், நண்பர்கள், சக விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என பலரும் கிரீடம் அணிவித்து பூங்கொத்து அளித்து பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

அப்போது நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரேவதி, ‘மதுரையில் இருந்து முதல் பெண்ணாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது பெருமை அளிக்கிறது. இந்த போட்டியில் என்னுடைய சிறப்பான பங்களிப்பை அளித்தேன். அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் இன்னும் சிறப்பாக விளையாடி பதக்கம் வெல்வேன்.

ஓடுகையில் Patterning செய்வதில் சில தவறுகள் ஏற்பட்டு விட்டது, அதனால் வெற்றி வாய்ப்பு இழந்தோம். அடுத்தடுத்த போட்டிகளில் அந்த தவறை சரி செய்வோம்.

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு இந்த முறை அரசின் ஒத்துழைப்பு இருந்தது. வரும் காலங்களில்  இன்னும் அதிகமாக அரசின் ஒத்துழைப்பு இருந்தால், வீரர்களின் பங்களிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.

என் போன்ற கிராமத்து பெண்களுக்கு இயல்பாகவே ஒடும் திறன் அதிகமாக இருக்கும். அந்த வகையில், கிராமப்புற மாணவர்களை அரசு அதிகமாக ஊக்குவிக்க வேண்டும். மதுரையில் இருந்து சென்று டோக்கியோ மண்ணில் முதன்முறையாக ஓடுகையில் எனக்கு அழுகை வந்தது. அந்த கணத்தில் என்னை தைரியமாக ஆளாக்கிய என் பாட்டியை நினைத்து கண்கள் கலங்கின.

யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று என்னை வளர்த்து ஊக்குவித்த என் பாட்டி ஆரம்மாளுக்கும், எனக்குள் இருந்த ஒடும் திறனை கண்டுபிடித்த பயிற்சியாளர் கண்ணனுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறு வயதில் இருந்தே ஒலிம்பிக் போக வேண்டும் என்று நினைத்தேன். இப்போது அது நிறைவேறி உள்ளது. முதல் போட்டியில் யாராலும் பதக்கம் வெல்ல முடியாது. எனவே, ஒலிம்பிக்கில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளையாட்டையும் சிறப்பாக விளையாடுங்கள். நிச்சயம் உங்கள் ஒலிம்பிக் கனவுகள் நிறைவேறும்’ என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published: