ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆசிய போட்டிகள் 2018: குண்டு எறிதலில் தங்கம் வென்றார் இந்திய வீரர்

ஆசிய போட்டிகள் 2018: குண்டு எறிதலில் தங்கம் வென்றார் இந்திய வீரர்

தஜிந்தர் பால்சிங் தூர்

தஜிந்தர் பால்சிங் தூர்

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  ஆசிய விளையாட்டுப் போட்டியின் குண்டு எறிதல் பிரிவில் இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் தங்கப்பதக்கம் வென்றதுடன் புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார். ஸ்குவாஷ் பிரிவில் இந்திய வீரர்கள் 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றிய நிலையில், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

  இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின், ஆடவர் பிரிவு குண்டு எறிதல் போட்டியில் 9 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் 20.75 மீட்டர் தூரம் எறிந்த இந்திய வீரர் தஜிந்தர் பால்சிங் தூர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அத்துடன் ஆசிய விளையாட்டுப் போட்டியின் குண்டு எறிதலில் அதிகபட்ச தூரம் எறிந்த வீரர் என்ற பெருமைக்கும் சொந்தகாரரானார்.

  வெற்றிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தஜிந்தர் பால்சிங், தங்கப்பதக்கத்தை புற்றுநோயால் அவதியுற்று வரும் தமது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார். மேலும் ஆசிய விளையாட்டு போட்டிகள் முடியும் வரை உயிரோடு இருப்பேன் என தந்தை உறுதியளித்திருந்தார். பதக்கம் வென்றதன் மூலம் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளேன். அதேநேரத்தில் கடவுளுக்கு மிகுந்த நன்றி கூறுகிறேன். அனைத்தும் நன்மைக்கே என்றார்.

  இதனைத் தொடர்ந்து, ஸ்குவாஷ் பிரிவில், மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழக வீராங்கனைகள் தீபிகா பல்லிகல், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் தோல்வியடைந்தனர். அரையிறுதிக்கு முன்னேறினாலே வெண்கல பதக்கம் என்ற அடிப்படையில் இருவரும் வெண்கலப் பதக்கத்தை பெற்றனர். இதேபோல, மற்றொரு தமிழக வீரர் சவுரவ் கோஷலும் அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.

  பேட்மிண்டனை பொருத்தவரையில், இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளனர். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரிட்ஜ்  விளையாட்டில், இந்தியாவுக்கு இரு பதக்கங்கள் உறுதியாகியுள்ளது. ஆண்கள் குழு மற்றும் கலப்புக் குழு ஆட்டங்களில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

  ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி, நடப்பு சாம்பியன் தென் கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அம்பு எய்தல், கோல்ஃப், பளுதூக்குதல் பிரிவுகளில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். அதேநேரத்தில் தடகளப் பிரிவில் இந்திய வீரர் வீராங்கனைகள் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். ஆண்கள் 400 மீட்டர் பிரிவில் முகம்மது அனாஸ் மற்றும் ஆரோக்கிய ராஜிவ், பெண்கள் 400 மீட்டர் பிரிவில் ஹீமா தாஸ் மற்றும் நிர்மலா ஷரோன் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். 100 மீட்டர் பிரிவில் டூட்டி சந்த் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

  பதக்கப்பட்டியலைப் பொருத்தவரையில், சீனா 72 தங்கம் உள்பட 153 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 34 தங்கம் உள்பட 109 பதக்கங்களுடன் ஜப்பான் 2-வது 84 பதக்கங்களுடன் தென் கொரியா மூன்றாமிடத்திலும் உள்ளன. இந்தியா 7 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலங்களுடன் மொத்தம் 29 பதக்கங்களை கைப்பற்றி 8-வது இடத்தில் உள்ளது. இதனிடையே, டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ஊக்கத்தொகையாக 20 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Asian Games 2018