ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆசிய போட்டிகள் 2018: 69 பதக்கங்களை வென்று முந்தைய சாதனையை முறியடித்தது இந்தியா

ஆசிய போட்டிகள் 2018: 69 பதக்கங்களை வென்று முந்தைய சாதனையை முறியடித்தது இந்தியா

69 பதக்கங்களை வென்று முந்தைய சாதனையை முறியடித்தது இந்தியா

69 பதக்கங்களை வென்று முந்தைய சாதனையை முறியடித்தது இந்தியா

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 69 பதக்கங்களை கைப்பற்றி, தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

  18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தா மற்றும் பால்ம்பேங் நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் சுமார் 500 வீரர், வீராங்கனைகள் 36 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.

  நேற்று நடைபெற்ற போட்டியில் ஆடவருக்கான 49 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் இந்தியாவின் அமித் பங்கல் ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தான் வீரர் ஹசன்பாயை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

  பிரிட்ஜ் எனப்படும் சீட்டுக்கட்டுப் போட்டியில், ஆடவர் இரட்டையர் போட்டியில், இந்தியாவின் பிரணாப் பர்தான் மற்றும் ஷிபநாத் சர்கார் இணை தங்கப்பதக்கம் வென்றனர். மகளிருக்கான ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஹாங்காங்கிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆடவர் ஹாக்கியில், பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

  பெரும்பாலான போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை நடைபெறும் டிரையத்லான் போட்டிகளுக்குப் பிறகு நிறைவு விழா நடைபெறுகிறது. இந்தியா இதுவரை 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 30 வெண்கலத்துடன் மொத்தம் 69 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டுகளைவிட பெற்ற அதிக பதக்கங்களாகும். 2010-ல் சீனாவில் நடைபெற்ற போட்டியில் 64 பதக்கங்கள் வென்றதே சாதனையாக இருந்தது. நடப்புத் தொடரில் சீனா 132 தங்கம், 92 வெள்ளி, 65 வெண்கலத்துடன் மொத்தம் 289 பதக்கங்களை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளது.

  மேலும் பாய்மர படகுப் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆடவர் பிரிவில் வருண் தக்கார் மற்றும் கணபதி ஆகியோர் வெண்கலப் பதக்கத்தையும், பெண்கள் பிரிவில் வர்ஷா மற்றும் ஸ்வேதா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Asian Games 2018