• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஆசிய கோப்பை கிரிக்கெட்: நாளை பாகிஸ்தானை தோற்கடிக்குமா இந்தியா?

ஆசிய கோப்பை கிரிக்கெட்: நாளை பாகிஸ்தானை தோற்கடிக்குமா இந்தியா?

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், ஓராண்டுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை எதிர்த்து நாளை விளையாடும் நிலையில், இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    வெறிச்சோடும் மாநகரச் சாலைகள், காலியாக கிடக்கும் திரையரங்குகள், வீட்டுக்குள்ளே முடங்கும் இளைஞர் பட்டாளம். இந்தக் காட்சிகளெல்லாம் பொது வேலைநிறுத்தத்தின்போது காணும் காட்சிகள் அல்ல. இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா முழுவதும் ஏற்படும் நிகழ்வுகள்தான்.

    துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஓராண்டுக்குப் பிறகு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கடைசியாக லண்டனில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தது.

    இந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானை பொருத்தவரை, துபாய் மைதானம் என்பது அவர்களது சொந்த மைதானமாகவே பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு சென்று எந்த நாடும் கிரிக்கெட் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த அணி பெரும்பாலான போட்டிகளை துபாயிலேயே விளையாடி வருகிறது. இது அவர்களுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்தத் தொடரில் இல்லாத நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் களம் காண்கிறது. பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களான உஸ்மான் கான், முகம்மது அமிர், ஜுனைத் கான் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வரும் நிலையில், அவர்களை இந்திய வலது கை பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், அம்பதி ராயுடு, மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், மகேந்திர சிங் தோனி ஆகியோர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகிய மூவரில் தொடக்க வீரர்களாக யார் இறங்குவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஹாங்காங் உடனான போட்டியில் கே.எல்.ராகுல் சேர்க்கப்படவில்லை. மேலும், மனிஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்டியா ஆகியோருக்கு பதில் தினேஷ் கார்த்திக், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மணிக்கட்டை சுழற்றி பந்துவீசும் வீரர்களை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து தவித்து வருகின்றனர். இந்தியாவின் யுவேந்திர சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை பாகிஸ்தானின் சர்ப்ஃபராஸ் அகமது, பாபர் அசாம், இமாம் உல் ஹக் ஆகியோர் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதைப் பொருத்தே போட்டியின் முடிவு இருக்கும் என்று தெரிகிறது.

    இன்று ஹாங்காங்கை எதிர்கொள்ளும் இந்தியா நாளை பாகிஸ்தானுடன் விளையாடுகிறது. துபாயில் அதிகப்படியான வெப்பம் நிலவும் நிலையில், அடுத்தடுத்து போட்டி உள்ளதால் இந்திய வீரர்கள் சோர்வடைவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், இரு நாட்கள் ஓய்வுக்குப் பிறகு களம் காணும் பாகிஸ்தானுக்கு இந்தியாவுடனான போட்டி சாதகமாகவே பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: