கம்பளா எருமை மாட்டு பந்தயத்தில் சீனிவாச கவுடாவின் சாதனையை ஒரு சில நாட்களிலேயே மற்றொரு வீரர் முறியடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கர்நாடாவில் பிரபலமான கம்பளா எனும் எருமை மாடு பந்தயத்தில் உசைன் போல்ட்டை விட வேகமாக ஓடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் சீனிவாச கவுடா. மங்களூரு அருகே அய்கலாவில் நடந்த கம்பாலா பந்தயத்தில் 142.50 மீட்டர் துரத்தை வெறும் 13.62 விநாடிகளில் கடந்து அதிசயிக்க வைத்தார்.
இந்த ஓட்டத்தை 100 மீட்டருக்கானதாகக் கணக்கிட்டு பார்த்தால், அதனை 9.55 விநாடிகளில் அவர் ஓடியிருக்கிறார். இது உசைன் போல்ட்டின் உலக சாதனையை விட 0.03 விநாடிகள் குறைவான நேரம் என்பதே சீனிவாச கவுடாவை பலரும் ஆச்சர்யமாகப் பார்க்கக் காரணமாக இருந்தது.
இந்நிலையில் இவரது சாதனையை முறியடிக்கும் நிலையில் நிஷாந்த் ஷெட்டி என்ற மற்றொரு வீரர் தற்போது 143 மீ தொலைவை 13.68 நொடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். அதாவது, 100மீ தொலைவை 9.51 வினாடிகளில் கடந்து முந்தைய சீனிவாச கவுடாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
உசைன் போல்ட்க்கு இணையாக பேசப்பட்ட சீனவாச கவுடாவிற்கு, மத்திய விளையாட்டுத்துறை இணையமைச்சரான கிரண் ரிஜூஜு அவரை தொழில் முறை ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க ஒரு சோதனை ஓட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் சீனிவாச கவுடா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.
இதேப்போன்ற வாய்ப்பை நிஷாந்த் ஷெட்டிக்கும் மத்திய அரசு ஒரு வாய்ப்பு வழங்கி இவரை அங்கீகரிக்க வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் தற்போது கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.