முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘மிஸ்டர் 360 டிகிரி’: டிவில்லியர்ஸ் எனும் கிரிக்கெட் நாயகன்

‘மிஸ்டர் 360 டிகிரி’: டிவில்லியர்ஸ் எனும் கிரிக்கெட் நாயகன்

ஏபிடி வில்லியர்ஸ்.

ஏபிடி வில்லியர்ஸ்.

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் தென் ஆப்ரிக்காவின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ். இது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய பங்கை நினைத்து பெருமைப்பட்டு கொள்கின்றனர் அவரது ரசிகர்கள்.

நாடு, இனம், மொழி கடந்து சில கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நிற்பவர்கள். அந்த வரிசையில் இடம்பிடித்தவர்தான் தென் ஆப்ரிக்காவின் ஆப்ரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ். கிரிக்கெட் உலகில் ஏபிடி என செல்லமாக அழைக்கப்படும், டிவில்லியர்ஸ், முகத்தில் எப்போதும் தவழும் புன்னகையால் ஆக்ரோஷமாக பந்து வீசும் எதிரணியின் பந்துவீச்சாளரையும் வசப்படுத்திவிடுவார்.

ஏபி டி வில்லியர்ஸ்

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி என்றாலே ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது அவர்களது ஆக்ரோஷமான பீல்டிங்தான். அதில் புகழ்பெற்ற ஜான்டி ரோட்ஸ் ஓய்வுபெற்ற பிறகு, அவரது இடத்தை நிரப்பியவர் டிவில்லியர்ஸ்.

அதற்கு சான்று அண்மையில் நிறைவடைந்த ஐ.பி.எல். போட்டியில் பவுண்டரி லைனில் ஒரு மீட்டர் உயரத்துக்கு துள்ளி அவர் பிடித்த கேட்ச். தென் ஆப்ரிக்க ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலக ரசிகர்களையே வசப்படுத்திய டிவில்லியர்ஸின் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தமே. சமீபகாலமாக காயங்களால் அவதிப்பட்டு வந்த டிவில்லியர்ஸ், நெடுநாட்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்து அசத்தினார்.

தென் ஆப்ரிக்காவின் விக்கெட் கீப்பராக இருந்த மார்க் பவுச்சர் ஒரு விபத்து காரணமாக கிரிக்கெட்லிருந்து விலகிய நிலையில், அணிக்குள் காலடி வைத்த டிவில்லியர்ஸ், ஒரு சிறந்த விக்கெட் கீப்பராகவும் பரிணமித்தார்.

தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ்

தனது புதுவிதமான ஷாட்களால் மைதானத்தின் எந்த பகுதிக்கும் பந்தை தூக்கி அடிக்கும் வல்லமை படைத்தவர் டிவில்லியர்ஸ். குறிப்பாக விக்கெட் கீப்பர் தலைக்கு மேலே அவர் அடிக்கும் சிக்ஸர்கள் உலக பிரசித்தம். இதனாலேயே ரசிகர்களால் மிஸ்டர் 360 என கொண்டாடப்பட்டார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 8 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ள ஏபிடி, பல சாதனைகளுக்கும் சொந்தகாரர்.

அதுவும் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக ஜோகனஸ்பர்க் நகரில் அவர் ஆடிய ரூத்ரதாண்டவம் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் விருந்து. 31 பந்துகளில் அவர் விளாசிய சதம் இன்றளவும் இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. ஒரு நாள் போட்டிகளில் ஏபிடி 16 பந்துகளில் விளாசிய அரை சதமும், 64 பந்துகளில் விளாசிய 150 ரன்களும் இன்றும் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

ஒரு நாள் போட்டியில் மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார் மிஸ்டர் 360. உலகிலேயே அதிக அளவு பந்து பவுன்ஸ் ஆகும் ஆடுகளமான ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 2008-ல் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்ரிக்கா வெல்வதற்கு பெரிதும் உதவி புரிந்தார். 414 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்ரிக்கா விளையாடிய நிலையில் ஆட்டமிழக்காமல் சதம் அடித்து அணியை கரைசேர்த்தார். இப்போட்டியில் டிவில்லியர்ஸ் பிடித்த 4 கேட்ச்களும் மிக பிரசித்தம்.

டெஸ்ட் போட்டியில் ஏபி டி வில்லியர்ஸ்

தென் ஆப்ரிக்கா மட்டுமல்லாமல் உலகில் நடைபெறும் பல்வேறு டி20 லீக் தொடரிலும் டிவில்லியர்ஸ் பங்கேற்று விளையாடி வருகிறார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய ஏபிடி, அந்த அணிக்காக 480 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இது நடப்பு தொடரில் பெங்களூரு வீரர் அடித்த அதிக ரன்களாகும்.

கிரிக்கெட் மட்டுமல்லால், பிற விளையாட்டுகளிலும் ஏபிடி திறமை வாய்ந்தவர். தென் ஆப்ரிக்காவின் தேசிய ஜூனியர் ஹாக்கி மற்றும் கால்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டவர் ஏபிடி. நீச்சலில் பல்வேறு தேசிய சாதனைக்கு சொந்தகாரரான டிவில்லியர்ஸ் தென் ஆப்ரிக்கா ஜூனியர் ரக்பி அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார்.

அன்டர்19 பேட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றுள்ள டி வில்லியர்ஸ், தென் ஆப்ரிக்காவின் ஜூனியர் டேவிஸ் கோப்பை அணியிலும் இடம் பிடித்தவர்.விளையாட்டு மட்டுமல்ல, படிப்பிலும் சிறந்தவரான ஏபிடி தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கையால் விருதும் பெற்றுள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸ்

கிறிஸ்தவரான ஏபிடி, மிகச்சிறந்த கிட்டாரிஸ்ட். பாடுவதிலும் திறமைவாய்ந்த அவர் சில ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் தவிர டிவில்லியர்ஸுக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 5 ஆண்டுகளாக பழகி வந்த தோழி டேனியஸ் ஸ்வார்ட்டிடம்  கடந்த 2012 ஆம் ஆண்டு தாஜ்மகால் முன்பு தனது காதலை வெளிப்படுத்தினார் டிவில்லியர்ஸ். மறுஆண்டு திருமணம் செய்த கொண்ட இத்தம்பத்திக்கு ஒன்று மற்றும் மூன்று வயதுகளில் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

அதிக அளவில் களைப்படைந்துவிட்டதாலும், பிறருக்கு வழிவிடும் வகையிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள 34 வயது டிவில்லியர்ஸுக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீர்ர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாட போவதாக அறிவித்துள்ள டிவில்லியர்ஸ் ஆட்டத்தை காணும் வாய்ப்பு இனி உலக ரசிகர்களுக்கு இல்லை என்பது ஏமாற்றமே!

First published:

Tags: AB de Villiers, ABD Retirement