தனித்திறமைகளை வெளிப்படுத்தவும் அதுகொண்டு உலகையே ஆச்சரியப்படுத்தவும், வயது என்றும் ஒரு தடை இல்லை என்பதை உறுதிப்படுத்தும் நிகழ்வுளுக்கு மேலும் ஒரு சாட்சியாக அமைந்துள்ளார் 94 வயதான பகவானி தேவி தாகர். வெறும் ஆறு மாத முயற்சியால் உலக அளவிலான தடகள போட்டியில் தங்கம் வென்ற, சாதனை பெண்மணி குறித்து பார்ப்போம்.
தள்ளாத வயதிலும் தனக்கு பிடித்ததை செய்து நாட்டையே பெருமைபடுத்தியுள்ளார், பகவானி தேவி தாகர் எனும் 94 வயதான இளம்பெண். ஹரியானா மாநிலத்தில் கிட்கா பகுதியில் 1927ம் ஆண்டு பிறந்த பகவானி தேவி, டெல்லியின் நஜஃப்கர் பகுதியில் வசித்து வருகிறார்.
5ம் வகுப்பு வரையில் மட்டுமே பயின்ற இவர், கபடியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை பராமரிப்பது மட்டுமே முழு நேர வேலையாக மாறிப்போக, விளையாட்டை முற்றிலும் கைவிட்டார். 29ஆவது வயதில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தபோது தனது கணவரை இழந்த பகவானி தேவி, 11வது வயது மகளையும் இழந்து ஆற்ற முடியாத துயரத்திற்கு ஆளானார். பின்பு தனது ஒரே மகனான ஹவா சிங்கை வளர்ப்பதும், குடும்ப வேலைகளை கவனிப்பதையுமே தனது வாழ்க்கையாக மாற்றிக் கொண்டார்.
கடந்த 2007ம் ஆண்டில் 79 வயதில் பைபாஸ் சர்ஜரி செய்து கொண்ட பகவானி தேவி, மகன், மருமகள் அவர்களது நான்கு மகன்கள், கொள்ளுப்பேரன்கள் என பெரிய குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வந்தார். ஆனால், எல்லாவற்றையும் மாற்றும் ஒரு நேரம் வரும் என்பது போல, பகவானி தேவியின் வாழ்க்கையை மாற்றும் தருணம் அவரது பேரனும், பாரா தடகள வீரருமான விகாஸ் தாகரால் நிகழ்ந்தது.
சாதரணமாக ஒருநாள் தனது பேரன் கொடுத்த பந்தை தூக்கி எறிந்த பகவானி தேவி, இதேபோன்று ஷாட்-புட் பந்தையும் தூக்கி எறிந்தால் நன்றாக இருக்குமே என்று கேட்டுள்ளார். இதனால் ஆர்வமடைந்த விகாஸ் 94 வயதான தனது பாட்டியை கக்ரோலா மைதானத்திற்கு அழைத்து சென்று, கடந்த டிசம்பர் மாதம் முதல் சாதாரண மற்றும் எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ள செய்தார்.
ஓட்டப்பந்தயம், குண்டு மற்றும் வட்டு எறிதலில் பாட்டி மிகுந்த ஆர்வமுடன் செயல்படுவதை கண்டு ஆச்சரியப்பட்டு, 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டிகளில் பகவானி தேவியின் பெயரை பதிவு செய்ய ஆரம்பித்தார் விகாஸ்.
கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில், முதல்முறையாக பங்கேற்றதுமே 3 தங்க பதக்கங்களை கைப்பற்றினார். பின்பு சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளிலும் 3 தங்கப்பதக்கங்களை வென்று, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும் தகுதி பெற்றார்.
இதையடுத்து பின்லாந்தின் டாம்பர் நகரில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பின்ஷிப் போட்டியில் களமிறங்கினார். அதில் 90 முதல் 94 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில், குண்டு எறிதலில் வெண்கல பதக்கம் வென்றபோது, அந்த நிறம் தனக்கு பிடிக்கவில்லை என சத்தம் போட்டுள்ளார். அதேநேரம் மறுநாள் நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இலக்கை, 24. 74 விநாடிகளில் எட்டி தனக்கு பிடித்த தங்கபதக்கத்தை வென்று மகிழ்ந்தார்,
வட்டு எறிதலில் மேலும் ஒரு வெண்கலதையும் கைப்பற்றி, நாடு திரும்பிய பகவானி தேவிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
வயது மூப்பு காரணமாக தான் காலை மற்றும் மாலையில் நடைபயணம் போன்ற சாதாரண உடற்பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்வதாகவும், வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள தோட்டத்தை பராமரிக்க மாடிப்படிகளை ஏறி, இறங்குவது தனக்கு உதவுவதாகவும் பகவானி தேவி கூறியுள்ளார்.
முன்வரிசை பற்களே இல்லாததால் பால், சப்பாத்தி, பருப்பு, காய்கறி மற்றும் பழங்களையே உண்பதாக தெரிவித்தார். பேரன் விகாஸ் தான் தனது ரோல் மாடல் மற்றும் பயிற்சியாளர் என்றும், அவனது உதவியுடன் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பேசினார். இன்றைய பிள்ளைகள் ஓடி, ஆடி, துள்ளி குதித்து விளையாட வேண்டும் எனவும் பகவானி தேவி கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Game, Haryana, Sports, Women achievers, Women after 30