சென்னையை சேர்ந்த கௌசல்யா - பிரபு தம்பதிகளின் மகளான கோதை வாஹ்ருணி முதலாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே கதைகள் கேட்பது, புதிர் போடுவதை அதை விடுவிப்பது, கணிதம் உள்ளிட்டவற்றில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார் கோதை. பெரியவர்களே விடைகண்டறிய திணறும் 9*9 சுடோகு விளையாட்டை 5 வயதிலேயே சுலபமாக முடித்துள்ளார். இந்த திறனை கண்டறிந்த இவரது பெற்றோர்கள் சுடோகு போல் உள்ள ரூபிக் கனசதுர புதிர் விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஆர்வத்துடன் விளையாடத்தொடங்கிய கோதை அதில் வல்லுனராகவும் ஜொலிக்க தொடங்கியுள்ளார். இந்த விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பயிற்சியை தொடங்கிய கோதையின் சாதனை பயணம் இன்று கின்னஸ் உலக சாதனை வரை நீண்டுகொண்டிருக்கிறது. பல கோணங்கள், பல வண்ணங்களில் இருக்கும் ரூபிக் கனசதுரத்தை தனது மாயஜால விரல்களால் அசால்டாக வரிசைப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படவைக்கிறார் கோதை.
குறிப்பாக ஹூலா ஹூபிங் எனப்படும் சாகச வளையத்தை இடுப்பில் சுற்றிக்கொண்டே டெட்ராஹெட்ரான் எனப்படும் முக்கோண வடிவ ரூபிக் கனசதுரத்தை 6.88 நொடிக்குள் வரிசைப்படுத்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். 18 வயது வாலிபர் 13.86 நொடியில் நிகழ்த்திய சாதனையை கோதை 6.88 நொடியில் செய்து காண்பித்து சாதனைகளை தகர்த்தெறிந்துள்ளார்.
அம்மா, அப்பா மூலம் அறிமுகமான ரூபிக் கனசதுர புதிர் விளையாட்டை தனது ஆர்வத்தால் யூ டியூபில் கற்றுத்தேர்ந்து இன்று கின்னஸ் சாதனை வரை பயணப்பட்டுள்ளார் கோதை. மேலும் மாஸ்டர்மார்பிக்ஸ் எனப்படும் மிகக்கடினமான ரூபிக் கனசதுர புதிர் விளையாட்டை ஹூலா ஹூபிங் செய்துகொண்டே 1 நிமிடம் 59 நொடிக்குள்ளும், மெகாமின்க்ஸ் எனப்படும் 8 பக்கம் கொண்ட கனசதுரத்தை 3.3 நிமிடத்தில் செய்துமுடித்து மேலும் இரண்டு உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இவரது திறமையை அங்கீகரிக்குக் விதமாக தமிழ்நாடு கியூப் சங்கம் பதக்கமும், சான்றிதழும் வழங்கி கௌரவித்துள்ளது.
செல்போன், டிவி என மின்னணு சாதனத்தில் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகளின் ஆர்வத்தை திசைதிருப்பி அந்த சாதனங்களை பயனுள்ளவகையில் பயன்படுத்த கற்றுக்கொடுத்தால் கோதையை போல் சாதனையாளர்களை நாமும் உருவாக்கலாம் என பொற்றோர்களுக்கு பாடம் புகட்டியுள்ளார் இந்த சாதனை சிறுமி கோதை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.