• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 2011-ல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?

2011-ல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?

கோப்புப் படம்

கோப்புப் படம்

இந்திய அணி வென்ற பிறகு சச்சின் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் இருந்தும் 28 ஆண்டுகளுக்கு பிறகு, 2011-ம் ஆண்டு தான் உலகக்கோப்பை மீண்டும் இந்திய அணியின் கைகளுக்கு எட்டியது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டாக பார்க்கப்படுவதில்லை, ஒரு மதமாக உள்ளது. இந்தியாவிற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகிற்கே கடவுளாக பார்க்கப்பட்டவர் சச்சின் டெண்டுல்கர். 1983 உலகக் கோப்பையை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வென்ற பிறகு சச்சின் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் இருந்தும் 28 ஆண்டுகளுக்கு பிறகு, 2011-ம் ஆண்டு தான் உலகக்கோப்பை மீண்டும் இந்திய அணியின் கைகளுக்கு எட்டியது.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் இணைந்து 2011-ம் ஆண்டு நடத்திய உலக கோப்பை தொடரை தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் வீரர்கள் படை கைப்பற்றி, கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் பல வருட கனவை நிறைவேற்றி வைத்து நேற்றுடன்(ஏப்ரல் 2) 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்த இந்திய கிரிக்கெட் அணியில் ஏராளமான மாற்றங்கள் இந்த 10 வருடத்தில் நடந்துள்ளன. 2011-ல் உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியில் ஏறக்குறைய பெரும்பாலான வீரர்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். பல கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்பை 28 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிகரமாக பூர்த்தி செய்த இந்திய அணியில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்கள் தற்போது என பார்க்கலாம்.

எம்.எஸ். தோனி:

இந்தியாவின் மிக வெற்றிகரமான கேப்டனாக இருந்த தோனி உலககோப்பையை வென்ற பின் 2013ல் இந்தியாவை சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 2020ம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக பங்கேற்கும் அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்:

2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற பிறகு, டெண்டுல்கர் மேலும் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். அதன் பிறகு 2013-ம் ஆண்டில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஓய்வு பெறுவதற்கு முன் சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை படைத்திருந்தார். சமீபத்தில் கோவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்ட சச்சின், தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

வீரேந்தர் சேவாக்:

சச்சினை போலவே பேட்டிங் செய்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சேவாக், 2015-ம் ஆண்டு வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றார். ஓய்வுக்குப் பிறகு, சில போட்டிகளுக்கு வர்ணனையாளராக இருந்தார். தற்போது வரை சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரான Road Safety World Series-ல் பெற்ற சேவாக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கவுதம் கம்பீர்:

கடந்த 2018-ல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கவுதம் கம்பீர், இந்தியாவிற்காக கடைசியாக 2016-ம் ஆண்டு விளையாடினார். வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன்களில் ஒருவராக இருந்தார். 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். பாஜக-வில் சேர்ந்து தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு மக்களவை உறுப்பினராக உள்ளார்.

விராட் கோலி:

2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இருந்து இப்போதும் விளையாடி வரும் 2 பேரில் ஒருவர் விராட் கோலி. தோனியிடமிருந்து கேப்டன் பதவியை பெற்ற பின், இந்திய கிரிக்கெட் அணியை வெவ்வேறு உயரத்திற்கு அழைத்து சென்றவர். தற்போது உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கிறார். இவரது தலைமையின் கீழ், டீம் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியை எட்ட முடிந்தது.ஜூன் மாதம் நடைபெற உள்ள இந்த போட்டியில் நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா விளையாட உள்ளது. தற்போது விரைவில் துவங்க உள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக தயாராகி வருகிறார்.

யுவராஜ் சிங்:

ஆல் ரவுண்டராக திகழ்ந்த யுவராஜின் அதிரடியும் இந்தியா 2011 உலகக்கோப்பை தொடரை வெல்ல ஒரு காரணமாக இருந்தது. பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், மனஉறுதியுடன் போராடி அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் இந்திய அணிக்காக விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். 2019-ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இவர், புற்றுநோய்க்கு எதிராக போராடுவது குறித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

சுரேஷ் ரெய்னா:

சின்ன தல என்றழைக்கப்படும் இவர் தல தோனி தனது ஓய்வை அறிவித்தபோது, சிலமணி நேரங்களிலேயே தனது ஓய்வை அறிவித்தார். 2018 முதல் ணியில் விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அபார பீல்டிங் திறமை மிக்கவர். விரைவில் துவங்க உள்ள ஐ.பி.எல் சீசனுக்காக தீவிரமாக தயாராகி வருகிறார்

யூசுப் பதான்:

உலகக்கோப்பை வெற்றிக்கு பின் இவர் 6 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். பின் ஐ.பி.எல் தொடர்களில் பங்கேற்றார். கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். Road Safety World Series தொடரை வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார்.

ஹர்பஜன் சிங்:

இன்னும் சுறுசுறுப்பான வீரராக உள்ள ஹர்பஜன், 2016 ஆம் ஆண்டில் இந்தியாவுக்காக தனது கடைசி ஆட்டத்தில் விளையாடினார். தொடர்ந்து ஐபிஎல்-லில் விளையாடி வருகிறார், மேலும் தான் அதிகம் விளையாட விரும்புவதாக சமீபத்தில் தெளிவுபடுத்தியிருந்தார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்:

தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராகவும் இந்தியா வெற்றி பெற உறுதுணையாக இருந்தார். ஒருநாள் போட்டியில் 2017 முதல் பங்கேற்கவில்லை என்றாலும் டெஸ்ட் அணியில் தவறாமல் இடம்பெற்று வருகிறார்.

பியூஷ் சாவ்லா:

2011 உலகக்கோப்பையின் போது தான் சாவ்லா தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடினார். அப்போதிருந்து, அவர் 2012-இல் ஒரு சில டி 20 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். பின் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ஜாகீர் கான்:

உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த வீரர் ஆவார். அவர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பதற்கு முன், 2015 வரை அணிக்காக விளையாடினார். மும்பை இந்தியன்ஸ் அணியில் கிரிக்கெட் நடவடிக்கைகளின் இயக்குநராக சேர்ந்தார். அந்த அணிக்காக இளம் மற்றும் திறமையான பந்து வீச்சாளர்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறார்.

Also read... IPL 2021: இந்த சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடிப்பது கடினம் - சுனில் கவாஸ்கர்!

ஆஷிஷ் நெஹ்ரா:

அடிக்கடி காயங்களுடன் போராடிய வீரர்களில் ஒருவர் வேகப்பந்து வீச்சாளரான நெஹ்ரா. இந்தியாவுக்காக விளையாடிய லிமிட்டட் ஓவர் போட்டிகளில், மிகவும் சிறப்பாக செயல்பட்டார். 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக நெஹ்ரா அறிவித்தார். ஆர்.சி.பி. யில் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் சேர்ந்தார்.

முனாஃப் படேல்:

இவர் 2015-ல் நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு 6 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 2016-ம் ஆண்டில் ஐபிஎல் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார். அவர் 2018-ல் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஸ்ரீசாந்த்:

ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு 2013-ம் ஆண்டில் இவருக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் உள்நாட்டு சுற்றுக்கு வலுவாக திரும்பி வந்து சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் விஜய் ஹசாரே டிராபியில் தனது மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: