முகப்பு /செய்தி /ஆன்மிகம் / குரு பலன் வந்தால் திருமணம் நடந்துவிடுமா?

குரு பலன் வந்தால் திருமணம் நடந்துவிடுமா?

திருமணம்

திருமணம்

Guru Palan | குரு நேரடி பார்வையாக ஏழாவது வீட்டைப் பார்க்கும் பொழுது அது சுப பார்வையாக திருமணம் கைகூடும். அந்த அடிப்படையில் மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் குருவின் வலுவான பார்வை ஏழாவது வீடான கன்னி ராசியில் விழுகிறது.

திருமணப் பேச்சை எடுக்கும் போது ஜாதக ரீதியாக குரு பலம் அல்லது குரு பலன் வந்தால் திருமணம் நடந்து விடும் என்று கூறுவார்கள். குரு பலன் என்பது கோச்சாரப்படி உங்கள் ஜாதகத்திற்கு அல்லது ராசிக்கேற்ப குறிப்பிட்ட ராசியில் குரு பெயர்ச்சியாவது ஆகும். உதாரணமாக உங்கள் ஜாதகப்படி உங்கள் லக்னம், ராசி, இரண்டாவது வீடு, ஏழாவது வீடு ஆகிய வீடுகளில் குரு பெயர்ச்சியானால் உங்களுக்கு குரு பலன் வந்திருக்கிறது. அந்தப் பெயர்ச்சி காலத்தில் திருமணம் நடக்கும் என்று பொதுவாகக் கூறுவார்கள். ஆனால் குரு பலன் வரும் அனைவருக்குமே அந்த கால கட்டத்தில் திருமணம் நடந்து விடுமா என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

குரு பலன் மற்றும் திருமணம்

தற்போது குரு மீன ராசியில் சஞ்சரித்து கொண்டிருக்கிறது. அதாவது திருமணத்திற்கு காத்திருக்கும் மீன ராசியினருக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெற சாத்தியம் இருக்கிறது. அதே போல மீன ராசியிலிருந்து ஏழாவது வீடு கன்னி ராசியாகும். ஏழாவது வீடு என்பது களத்திர ஸ்தானம் ஆகும். குரு நேரடி பார்வையாக ஏழாவது வீட்டைப் பார்க்கும் பொழுது அது சுப பார்வையாக திருமணம் கைகூடும். அந்த அடிப்படையில் மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் குருவின் வலுவான பார்வை ஏழாவது வீடான கன்னி ராசியில் விழுகிறது. எனவே இந்த ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல கும்பராசியை சேர்ந்தவர்களுக்கு இரண்டாவது வீடு மீனம் ஆகும். இரண்டாவது வீடு என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் அடிப்படையான பல விஷயங்களைக் குறிக்கும். அதில் குடும்பம் மற்றும் குழந்தைகள் ஆகியவையும் அடங்கும். எனவே இரண்டாவது வீட்டில் குரு ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது கும்ப ராசியினருக்கு திருமணம் கை கூடி வரும் வாய்ப்பை அதிகரிக்கும். இதே போல, ஜாதகத்தின் லக்ன அடிப்படையில் பலன்கள் அமையும்.

திருமணம் என்று வரும் பொழுது ஏன் குரு முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறது

ஜாதக ரீதியாக ஒரு நபரின் வாழ்வில் ஒவ்வொரு காரகத்துக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருக்கிறது. உதாரணமாக சந்திரன் என்பது மனம். அந்த வகையில் திருமணத்திற்கு காரகனாக குரு பகவான் விளங்குகிறார். எனவே ஒரு நபரின் ஜாதகத்தில் குரு எந்த இடத்தில் இருக்கிறார் மற்றும் கோச்சார அடிப்படையில் எந்த கட்டத்தில் பெயர்ச்சி ஆகிறார் என்பதன் அடிப்படையில் அவரின் திருமணம் எப்போது நடக்கும் என்பதை கணிக்கலாம்.

குருபலன் மட்டும் போதுமா?

குரு பலன் வந்தால் திருமணம் நடந்துவிடும் என்பதை உறுதியாக கூற முடியாது. பொதுவாகவே ஒரு ஜாதகத்தை கணிக்கும் பொழுது அதில் லக்னத்தின் மற்றும் ராசியின் அடிப்படையில் வரும் பலன்களை 50% வரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு நடப்பு கோச்சாரப்படி எந்தெந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகு முக்கியமாக ஜாதகருக்கு என்ன தசா புத்தி நடக்கிறது என்பதைத் தான் பார்க்க வேண்டும். தசா புத்தி அடிப்படையில் தான் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகள் ஏற்படுகிறது.

பிறப்பு ஜாதகத்தில் குரு நன்றாக இருந்தாலோ அல்லது மறைவு ஸ்தானத்திலோ அல்லது நீச்சமாக இருந்தாலும், ஒரு நபருக்கு தசாபுக்தி சாதகமாக அமைந்து விட்டால், திருமணம் விரைவில் நடந்துவிடும்.

உண்மையில் குரு பலன் என்பதை விட ஒரு நபரின் ஜாதகத்தை, பிறப்பு ஜாதகத்தில் குரு இருக்கும் இடம், களத்திர ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்கள், மற்றும் தசா புத்தி தான் தீர்மானிக்கின்றன. உதாரணமாக ஒரு ஜாதகருக்கு ஏழாமிடத்தில் ராகு இருக்கும் பொழுது அந்த நபருக்கு ராகு தசை வந்தால் உடனே திருமணம் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல குரு கெட்டிருக்கும் ஜாதகத்தில் சுக்கிரன் லக்னத்திலோ அல்லது ஆட்சி உச்சம் பெற்றோ அல்லது ஏழாம் வீட்டில் புதன் இருந்தாலும் குரு பலன் இல்லாமலேயே இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்று விடும்.

Also see...  குரு பகவானின் பயோடேட்டா, காயத்ரி மந்திரம், ஸ்லோகம் குறித்த தகவல்கள்..

எனவே குரு பலன் வந்தால் அனைவருக்கும் திருமணம் நடக்கும் என்பது அனைவருக்கும் பொருந்தாது. ஒரு நபரின் ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருக்கிறதா என்பதன் அடிப்படையில்தான் திருமணம் நடக்கும். உதாரணமாக இந்த ஆண்டு மீன ராசி மற்றும் கன்னி ராசி இரண்டுக்குமே குரு பலன் வலுவாக இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு ராசிக்காரர்களின் தனி ஜாதகப்படி ஆறாம் அதிபதியின் தசை அல்லது எட்டாம் அதிபதி தசை நடக்கும் போது திருமணம் கைகூடாது.

First published:

Tags: Gurupeyarchi, Marriage