Home /News /spiritual /

திருமணம், கிரஹபிரவேசம் என்று எந்த சுப நிகழ்ச்சிகளும் ஆடி மாதம் ஏன் செய்யப்படுவதில்லை.!

திருமணம், கிரஹபிரவேசம் என்று எந்த சுப நிகழ்ச்சிகளும் ஆடி மாதம் ஏன் செய்யப்படுவதில்லை.!

Aadi Month | ஆடி மாதம் முழுவதும் ஊரெங்கும் விசேஷம், திருவிழா, விரதங்கள், பூஜைகள், வழிபாடு என்று இருந்தாலும், தனிப்பட்ட குடும்ப விசேஷங்கள் எதுவும் ஆடி மாதத்தில் செய்யப்படுவதில்லை.

Aadi Month | ஆடி மாதம் முழுவதும் ஊரெங்கும் விசேஷம், திருவிழா, விரதங்கள், பூஜைகள், வழிபாடு என்று இருந்தாலும், தனிப்பட்ட குடும்ப விசேஷங்கள் எதுவும் ஆடி மாதத்தில் செய்யப்படுவதில்லை.

Aadi Month | ஆடி மாதம் முழுவதும் ஊரெங்கும் விசேஷம், திருவிழா, விரதங்கள், பூஜைகள், வழிபாடு என்று இருந்தாலும், தனிப்பட்ட குடும்ப விசேஷங்கள் எதுவும் ஆடி மாதத்தில் செய்யப்படுவதில்லை.

ஒவ்வொரு தமிழ் மாதத்துக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. தமிழ் மாதத்திற்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கை முறையோடு இணைந்திருப்பது போல பல்வேறு விசேஷங்களும் சுப நிகழ்ச்சிகளும் விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆடி மாதம் பல விதங்களில் சிறப்பு வாய்ந்த மாதமாகும். தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாதப்பிறப்பும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும், ஆடி மாதப் பிறப்பு விசேஷமாகக் கொண்டாடப்படும். ஆடி மாதம் முழுவதும் ஊரெங்கும் விசேஷம், திருவிழா, விரதங்கள், பூஜைகள், வழிபாடு என்று இருந்தாலும், தனிப்பட்ட குடும்ப விசேஷங்கள் எதுவும் ஆடி மாதத்தில் செய்யப்படுவதில்லை. திருமணம், புதுமனை புகுதல், என்று எந்தவிதமான சுப நிகழ்சிகளும் ஆடி மாதத்தில் செய்யப்படுவதில்லை. இதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்!

தம்பதிகள் பிரிந்திருப்பதால் சுப நிகழ்சிகள் இல்லை

ஆடி மாதம் திருமணமான தம்பதிகளை ஏன் பிரித்து வைக்கிறார்கள் என்பது அனைவரும் தெரிந்ததுதான். திருமணமான உடனேயே புதுமண தம்பதிகளை பிரித்து வைக்க முடியாது என்ற காரணத்தால் ஆடி மாதத்தில் திருமணம் செய்யப்படுவதில்லை. அதுமட்டுமில்லாமல் திருமணமான முதல் ஆண்டில் புதுமண தம்பதிகள் ஆடி மாதம் முழுவதும் பிரிந்து இருப்பார்கள். எனவே இந்த காரணத்திற்காக குடும்பத்தில் தனிப்பட்ட முறையில் எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளையும் செய்வதை தவிர்க்கிறார்கள். உதாரணமாக கிரகப்பிரவேசம், பூமி பூஜை செய்வது உள்ளிட்ட எந்தவிதமான தனிப்பட்ட சுப நிகழ்ச்சிகளையும் ஆடி மாதம் தவிர்க்கிறார்கள்.

ஆடி மாதத்தில் திருமணத் தம்பதிகளை பிரித்து வைப்பதற்கு முக்கியமான காரணம், ஆடி மாதத்தில் ஒரு பெண் கருவுற்றால் அவருக்கு சித்திரை மாதம் குழந்தை பிறக்கும் என்பது தான். சித்திரை மாதம் என்பது வெயில் சுட்டெரிக்கும் மாதம். அதுமட்டுமில்லாமல் கத்திரி நாட்களின் போது வெயில் கடுமையாக இருக்கும். எனவே முதல் பிரசவ காலத்தில், பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைக்கும் வெயில் காலம் சாதகமாக இருக்காது. மேலும், சில நேரங்களில் இளம் குழந்தையால் கத்திரி வெயிலின் வாட்டத்தை தாங்க முடியாது.



குலதெய்வ வழிபாடு தவிர்க்கக் கூடாது

எல்லோர் வீட்டிலுமே ஒரு ஆண்டுக்கு ஒரு முறையாவது குலதெய்வ வழிபாடு செய்வது வழக்கமாக இருக்கும். வழக்கமாக கோவிலுக்கு சென்று வருவது போல அல்லாமல், அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி, பல விதமான உணவுகளை படைத்து, பொங்கல் வைத்து என்று பெரிய விசேஷமாகத் தான் குலதெய்வ வழிபாடு நடக்கும். குலதெய்வ வழிபாடே  ஒரு சிறிய திருவிழா அல்லது விசேஷம் போல இருக்கும்.

ஆடி மாதத்தில் தான் அந்த பருவத்துக்கான விவசாயத்தை செய்வதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபடுவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்கேற்ப, ஆடி மாதம் விவசாயிகள் விதைக்கத் தொடங்குவார்கள். எனவே விவசாயம் செழித்து, வளம் பெருக வேண்டி ஆடி மாதத்தில் தங்கள் குலதெய்வ வழிபாட்டை மேற் கொள்வார்கள். எனவே குலதெய்வ வழிபாடு தவிர்க்கக்கூடாது என்பதற்காக ஆடி மாதத்தில் வேறு எந்த விசேஷங்களும் குறிப்பாக செய்யப்படுவதில்லை.

Also Read : ஆடி மாத முதல் நாள் - வீட்டிலேயே அம்மன் வழிபாடு செய்வது எப்படி?

இயற்கை மாற்றங்கள்

ஆடிமாதத்தில் தெற்கு திசை நோக்கி பூமி நகரும் போது இயற்கையாக ஒரு சில பாதிப்புகள் ஏற்படக்கூடும். விஞ்ஞான ரீதியாக நில அதிர்வுகள், கடல் சீற்றம், அதிக காற்று ஆகியவை ஆடி மாதத்தில் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்ற பழமொழியும் உண்டு. அந்த அளவுக்கு காற்று அதிகமாக வீசக்கூடிய மாதம் ஆடி மாதம். ஆடி மாதத்தில் விதை விதைப்பதால் எப்பொழுது வேண்டுமானாலும் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருப்பார்கள். எனவே ஆடி மாதம் திடீரென்று மழை பெய்யும், பலத்த காற்றடிக்கும் என்று இயற்கை சூழலால் ஆடி மாதத்தில் புதுமனை புகு விழா, பூமி பூஜை செய்தல், நிலம் வாங்குதல் என்று மனை சார்ந்த எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளையும் செய்வதில்லை.

Also Read : ஆடி மாதத்தின் சிறப்புகளும் ஆன்மீக அறிவியலும்.!

ஆடி மாதம் வழிபாட்டுக்கு உகந்த மாதம்

ஆடி மாதம் என்பது அம்மன் மாதம் என்றும், இது இறைவனுக்கு உரிய மாதம் என்றும் கூறப்படுகிறது. இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதம் என்பதாலும், இறை வழிபாடு செய்வதில் கவனம் சிதறலாம் அல்லது தடை படலாம் என்பதால் தான் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடத்தப்படுவதில்லை.
Published by:Selvi M
First published:

Tags: Aadi

அடுத்த செய்தி