காதலில் வெற்றி - தோல்வி - காதல் திருமணம் என்பது இப்போது சர்வசாதாரணமாகப் போய்விட்டது. அப்படி காதல் திருமணம் செய்பவர்களில் பலருக்கும் பெற்றோர், சகோதர சகோதரிகளின் எதிர்ப்பே மிஞ்சுகிறது. விதிவிலக்காக ஒரு சிலருக்கு இரு வீட்டார்களின் ஆசீர்வாதம் கிடைத்து, அவர்களே தடபுடலாக நடத்தி வைக்கும் நிலையையும் பார்க்கிறோம். எவருடைய காதல் திருமணத்தில் முடியும்? பெற்றோர்களே ஆசி வழங்கி நடத்தி வைக்கும் யோகம் யாருக்கு அமையும்? என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
இன்றைய சூழலில் பல திருமணங்கள் காதல் திருமணங்களாக இருந்து வருகின்றன. சாதி, மதம் திருமணங்களும் அதிகமாக நடக்கிறது. பணிக்குச் செல்லும் ஆண்களும் சரி, பெண்களும் சரி சக ஊழியர்கள் மீதோ, தங்களின் பணி நிமித்தமாகச் சந்திக்கும் யாரோ ஒருவர் மீதோ காதல் வயப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.
காதல் வயப்பட்டதும், திருமணம் செய்துகொள்ள பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற முயல்கிறார்கள். அப்போது அவர்களுடைய காதலுக்கு பெண் வீட்டில் இருந்தோ, பிள்ளை வீட்டில் இருந்தோ அல்லது இரண்டு பேர்களின் வீட்டில் இருந்தோ எதிர்ப்பு ஏற்படுவதையும் நம்மால் காணமுடிகிறது.
சிலருடைய காதலுக்கு இரு வீட்டாரின் சம்மதம் கிடைப்பதும் உண்டு. காதலுக்கு எதிர்ப்பு நிலை வரும்போது சிலர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கின்றனர். மற்றும் சிலருக்கு எதிர்ப்பை மீற முடியாமலே போய் விடுகிறது. காதல் சம்பந்தமான விஷயங்களுக்கு சுக்கிரனும் - சர்ப்பக் கிரகங்களான ராகு கேதுவிற்கும் முக்கியத்துவம் உண்டு. இங்கு நாம் கொடுத்திருப்பது பொதுவான விஷயங்கள் தான். ஜாதகத்திற்கு ஜாதகம் இது மாறும்.
1. ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 2, 8-ல் சர்ப்ப கிரகங்களான ராகு கேது இருந்தால் காதல் வயப்படும் வாய்ப்பு உண்டு. இதே போல் ராசிக்கு அதாவது சந்திரனுக்கு 2, 8-ல் ராகு, கேது இருந்தாலும் அவர்களுக்கு காதல் ஏற்படலாம். அதே வேளையில் இவர்களது காதலுக்கு சில தடைகள் வரலாம்.
2. லக்னத்துக்கு 7-ம் வீட்டுக்கு அதிபதியும் 9 -ம் வீட்டுக்கு அதிபதியும் பரிவர்த்தனையாகி இருந்து 5-ம் வீட்டில் ஒரு பாவ கிரகம் இருந்தால், தடைகளுடன் காதல் திருமணம் நிறைவேறும். இவர்களுக்கு பெண் குழந்தைகள்தான் அதிகமாகப் பிறக்கும்.
3. ஆண் ஜாதகமாக இருந்தால் 7 -ம் வீட்டுக்கு உடையவர் ஜாதகருடைய பாதகாதிபதியின் சாரத்தில் இருந்தாலோ அல்லது ராகு, கேதுவின் சாரத்தில் (அதாவது நட்சத்திரத்தில்) இருந்தாலோ காதல் திருமணம் நடக்கும். இத்தகைய அமைப்பில் இருக்கும் ஜாதகங்கள் மதம் அல்லது ஜாதி மாறியும் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.
4. சூரியனும், சுக்கிரனும் சேர்ந்து 1, 4, 7, 10 - ம் இடங்களாகிய கேந்திர ஸ்தானங்களில் இருந்தால் காதல் வயப்படுவார்கள். அதே வேளையில் ராகு கேது சம்பந்தப்பட்டால் தடைகள் வரலாம். லக்னாதிபதி பலமாக இருக்கும் போது காதல் வெற்றி அடையும்.
5. பெண் ஜாதகத்தில் 8 - ம் வீட்டுக்கு உரியவர் ராகு, கேதுவின் நட்சத்திரத்தில் இருந்தால் காதல் திருமணம் நடக்கும்.
6. பெண் ஜாதகத்தில் 8 - ம் வீட்டில் சனி இருந்தாலும் காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு.
7. புதனுக்கு 2, 5, 7, 9, 12, -ம் இடங்களில் கேது இருந்தாலும், அல்லது புதனுடன் கேது சேர்ந்து இருந்தாலும், 18, 24 வயது நடக்கும் காலங்களில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் காதலா, நட்பா என்று சொல்ல முடியாத நிலையில் பழகி, பிறகு வேறு ஒருவருடன் திருமணம் நடக்கும்.
8. சூரியனுக்கு 2, 5, 7, 9, 12 - ம் இடங்களில் ராகு இருந்தாலோ அல்லது சூரியனுடன் ராகு சேர்ந்து இருந்தாலோ, ஜாதகரின் தந்தை காதல் விஷயத்தில் கடைசிவரை எதிர்ப்பாகத்தான் இருப்பார்.
9. ஒருவருடைய ஜாதகத்தில் 7-ம் வீட்டின் அதிபதி சுப கிரகத்தின் பார்வை பெறவேண்டும். அத்துடன் 6, 8, 12 ஆகிய இடங்களில் மறையாமலும் இருக்க வேண்டும்.
10. சூரியனுடன் குரு அல்லது சூரியனுக்கு 2, 5, 7, 9, 12 - ம் இடங்களில் குரு இருந்தால் தந்தையே காதல் திருமணத்தை நடத்தி வைப்பார்.
- ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Love, Marriage, Rasi Palan, Valentine's day