முகப்பு /செய்தி /ஆன்மிகம் / சூரியனால் அஸ்தங்கமாகும் சனி... இந்த ராசியினருக்கு யோகம், நிம்மதியான காலம் உண்டாகும்

சூரியனால் அஸ்தங்கமாகும் சனி... இந்த ராசியினருக்கு யோகம், நிம்மதியான காலம் உண்டாகும்

சனிபெயர்ச்சி

சனிபெயர்ச்சி

ஜனவரி மாதம் 31 ஆம் தேதி முதல், மார்ச் 4 ஆம் தேதி வரை, சூரியனின் 15 டிகிரிக்குள் சனி சஞ்சரிப்பதால், சனி அஸ்தங்கம் அடைகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

எந்த எந்த ராசிக்கட்டத்தில் கிரகங்கள் பெயர்ச்சி ஆகிறதோ, உங்கள் ஜாதகத்தில் அது குறிக்கும் வீடு, அதற்குரிய காரகத்துவத்தில் குறிப்பிட்ட தாக்கங்களை ஏற்படுத்தும். சமீபத்தில்தான் சனி பெயர்ச்சி நடந்துள்ளது. ஆண்டு கோள்கள் என்று கூறப்படும் குரு, ராகு, கேது, சனி ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி பெரிதாக பேசப்படும் அளவுக்கு மாதக்கோள்கள் என்று கூறப்படும் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி பேசப்படுவது இல்லை. ஏனென்றால் இந்த கிரகங்கள் ஒரு ராசியில் 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை தான் சஞ்சரிக்கும். ஆனாலும் இந்த கிரகங்களின் தாக்கம் கணிசமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும்போது, உடன் எந்த கிரகம் இருந்தாலும் அந்த கிரகம் சூரியனின் ஒளியால் அஸ்தங்கம் ஆகும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் கும்பத்தில் இருக்கும் சனி, இப்பொழுது சூரியன் ஒரு குறிப்பிட்ட டிகிரியில் பெயர்ச்சி ஆகும் போது அஸ்தங்கம் ஆகிறது. இதனால் சனி பலம் இழக்கிறது. சூரியனால் சனி அஸ்தங்கம் ஆகும் பொழுது, எந்த ராசியினருக்கு சாதகமான மற்றும் யோகமான பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

அஸ்தங்கம் என்பது, ஒரு கிரகம் சூரியனின் பார்வையில் ஒரு குறிப்பிட்ட டிகிரிக்குள் வந்தால், அதன் பலம் இழந்து விடும். தற்போது, ஜனவரி மாதம் 31 ஆம் தேதி முதல், மார்ச் 4 ஆம் தேதி வரை, சூரியனின் 15 டிகிரிக்குள் சனி சஞ்சரிப்பதால், சனி அஸ்தங்கம் அடைகிறது.

சனி அஸ்தங்கம் ஆகும் போது உண்டாகும் பொதுவான மாற்றங்கள்

ஜோதிட ரீதியாக சனி மற்றும் சூரியன் ஆகிய இரண்டு கிரகங்களும் பகை கிரகங்கள். புராணங்களின்படி சூரியனின் மகன் தான் சனி. சூரியன் பிரபஞ்சத்திற்கு ஒளி அளிக்கும் ஒரு கிரகம், ஆனால் சனி கருமை நிறத்தில் இருளை குறிக்கும் கிரகம். எனவே இந்த இரண்டு எதிர்மறை குணங்கள் கொண்ட கிரகங்கள் ஒரே ராசியில் சஞ்சரிக்கும்போது ஏற்கனவே ஒளிப்பொருந்திய சூரியனால் சனி அஸ்தங்கதம் ஆகி, இந்த இரண்டின் காரகத்துவமும் குறிப்பிட்ட அளவுக்கு பாதிக்கப்படும். அந்த அடிப்படையில் தந்தை-மகன் உறவில் சிக்கல்கள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் எந்த ராசியில், அல்லது எந்த ராசி கட்டத்தில் இந்த இரண்டு கிரகங்கள் சஞ்சரிக்கின்றன என்பதன் அடிப்படையில், அதன் காரகத்துவம் பாதிக்கப்படும். தற்பொழுது, கும்ப ராசியில் சனி அஸ்தங்கமாக இருப்பதால், கும்ப ராசி பதினோராவது வீடு எனவே தொழில்துறையில் பிரச்சனைகள் ஏற்படும்.

அஸ்தங்கமாகும் சனியால் எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான காலம்

கடக ராசிக்கு அஷ்டம சனியின் தாக்கம் குறையும். தாமதம், தடைகள் நீங்கி, இந்த கால கட்டத்தில் நிம்மதியாக உணர்வீர்கள். புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்றால், மார்ச் 5 ஆம் தேதிக்குள் தொடங்கலாம். இருப்பினும், திருமண உறவில், கணவன் மனைவி தவிர்த்து யாரையும் தலையிட அனுமதிக்க வேண்டாம்.

விருச்சிக ராசிக்கு அஷ்டார்த்தம சனியின் பாதிப்பு குறையும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். வீடு, சொத்து, வாகனம் வாங்கும் யோகம் பெருகும். ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள் கைகூடும்.

மகர ராசிக்கு நிதி நிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஏழரை சனியின் கடைசி கட்டத்தில் இருக்கு மகர ராசியினருக்கு அஸ்தங்கமாகும் சனியால் கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும். நிலுவையில் இருந்த தொகை வந்து சேரும். பொருளாதாரம் மேம்படும். வருமானம் அதிகரிக்கும்.

கும்ப ராசியினருக்கு ஜென்ம சனியாக அதிகமாக உழைக்க வேண்டும் என்ற சூழலை ஏற்படுத்திய சனி, இந்த காலகட்டத்தில் கொஞ்சம் ஓய்வாக இருக்க வைக்கும். நெருக்கடிகள், பரபரப்புகள் குறைந்து, நிதானமாக செயல்படலாம்.

மீன ராசியினருக்கு ஏழரை சனியின் தொடக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு ஓரளவு குறையும். விரயம் குறைந்து வருமானம் அதிகரிக்கும். உடல் நலம் மேம்படும். கடன், சட்ட பிரச்சனைகள், உறவினர் பகை உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும். மன நிம்மதி அதிகரிக்கும்.

First published:

Tags: Astrology, Sani Peyarchi, Tamil News