தீபாவளி திருநாளில் நாம் செய்யும் பூஜையின் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் பெற முடியும். அதில் மிக முக்கியமான பூஜை லட்சுமி குபேர பூஜை. செல்வ வளங்களை வழங்கிடும் மகாலட்சுமியையும், நவநிதிகளையும் வைத்துள்ள குபேரரையும் ஒரு சேர பூஜை செய்வதன் மூலம் நமது செல்வ நிலை உயரும். தரித்திரம் நீங்கும். இதற்கு மிகவும் உன்னதமான நாள் தீபாவளி திருநாள்.
லட்சுமி குபேர பூஜை செய்யும்முறை :
சிறப்பாக முறையான லட்சுமி குபேர பூஜை என்பது வேத மந்திரங்கள் ஓத கலசம் வைத்து செய்யப்பட வேண்டும். சாதாரணமாக வீட்டில் நாமே செய்வது என்றால் பூஜை மாடத்தில் லட்சுமி குபேர படத்தினை வைத்து இருபக்கமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். இப்படத்திற்கு முன்பாக பெரிய வாழை இலை வைத்து அதில் நவ தானியங்களை தனித்தனியாக பரப்பி வைக்க வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து அதில் மஞ்சள் கலந்து பின் மாவிலை சொருகி அதன்மேல் ஓர் மட்டை தேங்காய் வைத்திட வேண்டும். அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்திட வேண்டும்.
பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை ஆரம்பித்திட வேண்டியதுதான். நமக்கு தெரிந்த விநாயகர் துதி மற்றும் பாடல்களை பாடி பூஜையை செய்ய வேண்டும். பின் மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபட வேண்டும். அதன்பின் குபேர மந்திரங்களான “குபேராய நமஹ” “தனபதியே நமஹ” என 108 முறை சொல்லி தாமரை பூக்களால் பூஜிக்க வேண்டும். தாமரை மலர் லட்சுமி மற்றும் குபேரனுக்கு உகந்த மலர்.
பின் நைவைத்தியமாக இனிப்புகள் மற்றும் பால் பாயாசம் போன்றவை வைத்து பூஜை முடித்திட வேண்டும். பூஜையில் தட்சணையாக காசுகள் வைக்கப்பட வேண்டும். அதனை பூஜை முடிந்தவுடன் எடுத்து நமது பெட்டகங்களில் வைத்துவிடலாம். சிலர் தாம்பூலங்களையும், காசுகளையும் தானமாக வழங்கிடுவர். லட்சுமி குபேர பூஜை தீபாவளி தினத்தில் செய்யும்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதுடன் குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார்…
மேலும் படிக்க.. தீபாவளி உருவான கதை!
குறைவற்ற செல்வம் வழங்கும் குபேரன் :
திரேதா யுகத்தில் ஸ்ரீமுக ஆண்டு, தனுசு ராசி, பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர் குபேரர். தந்தையார் விஸ்வரஸ், தாயார் சுவேதாதேவி. சிறந்த சிவ பக்தனாகிய குபேரன் இந்திரனுக்கு இணையாக புஷ்பக விமானத்தில் பயணித்த பெருமை பெற்றவர். சிவனின் அருள்பெற்று அளகாபுரிக்கு அரணாக விளங்கிய குபேரன் வடதிசைக்கு அதிபதியாகவும் திகழ்கிறார்.
மேலும் படிக்க.. Diwali 2021: தீபாவளி எப்போது? கங்கா ஸ்நானம், பூஜை செய்யும் நேரம் குறித்த தகவல்கள்...
குபேரன் திருமுத்துகுடையான் கீழ் தாமரை மலர் மீதுள்ள ஆசனத்தில் ஒரு அபயமுத்திரையுடன் அமர்ந்திருக்கிறார். அவரது இருபுறமும் சங்க நிதி, பதும நிதி, என்ற தன தேவதைகள் வீற்றிருப்பர். அவர் தன் அருகே இரத்தினங்களை உதிரும் கீரிப்பிள்ளை வைத்திருப்பார். இத்தகைய சிறப்புமிக்க குபேரனை மகாலட்சுமியுடன் இணைந்து பூஜை செய்வதன் மூலம் குறைவற்ற செல்வநிதியை வாரி வழங்குவார்.
மேலும் படிக்க... பணத்தடை நீங்கி குபேர யோகம் பெற இதை செய்யுங்கள்!
தீபாவளியன்று லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் :
அதிகாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை
காலை 09.13 மணி முதல் 10.43 மணி வரை
பிற்பகல் 01.13 மணி முதல் 01.28 மணி வரை
மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை
இரவு 08.00 மணி முதல் 09.00 மணி வரை
மேலும் படிக்க... பணத்தடை நீங்கி குபேர யோகம் பெற இதை செய்யுங்கள்!
பலன்கள் :
இந்த பூஜையை செய்வதால் வீட்டில் நிச்சயம் பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் பெருகும். அதோடு வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும் நிலைக்கும். மகாவிஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலட்சுமி தீபாவளி தினத்தில் நமது இல்லம் தேடி வந்து அருள்பாலிக்கிறாள். தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால் சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும். கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அத்துடன் குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார்.
மகாலட்சுமியின் திருவருளால் அனைத்து செல்வங்களும் அதாவது தனம், தானியம், மக்கட் செல்வம், வீடு, தைரியம், வீரம், அறிவு என அனைத்தையும் பெற முடியும்.
மேலும் படிக்க... தேவி மகாலட்சுமியின் அருளைப் பெற எளிய வழிகள்...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.