ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

வெள்ளையனை விரட்டி வென்ற விஜயதசமி - விடுதலை வரலாற்றில் பெண் ஆளுமை தினம் இது!

வெள்ளையனை விரட்டி வென்ற விஜயதசமி - விடுதலை வரலாற்றில் பெண் ஆளுமை தினம் இது!

விஜயதசமி

விஜயதசமி

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன் வீரம் விளைவித்தாள் வேலுநாச்சியார். அந்நியனை அவன் பிடித்த கோட்டையில் இருந்து விரட்டி வென்ற வரலாறு அவள் ஒருத்திக்கே உரியது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜயதசமிக்கு ஆன்மிகத்தில் பல கதைகள் உண்டு, ஆனால் ஆற்றல் மிக்க இந்த மண்ணின் கதை ஒன்று உள்ளது, தெரியுமா? அதில் இறையாண்மையும் சமூக நல்லிணக்கமும், சரித்திர சாதனையும் உள்ளது! 

  சிவகங்கை சீமை இராமநாதபுரத்தின் ஒரு பகுதியை கிழவன் சேதுபதி பிரித்து மகளுக்காக அளித்த சீதன சீமை. அதன் இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதர் அவர் மனைவி வேலுநாச்சியார். இவர்கள் திருமணம் 1746-ல் நடைபெற்றது. 1772 ஆம் ஆண்டு காளையார் கோவில் ஆலய வழிபாட்டில் ஆயுதமின்றி இருந்த மன்னர் ஆங்கிலேயரால் கொல்லப்பட்டார்.

  ராணி வேலுநாச்சியார் தளபதிகள் மருதுபாண்டியருடன் திண்டுக்கல் விருப்பாட்சி பாளையக்காரர் கோபால நாயக்கர் கோட்டையில் தஞ்சம் புகுந்தார். நெஞ்சில் வெஞ்சினம் குவித்தார். அந்நியரை அழித்திட துடித்தார். ஆயுத பலம் தேவை பட்டது. அதற்கென்ன கவலை!  அண்ணன் நான் இருக்கிறேன் அரணாக என்று உதவி கேட்டதும் உரிமையுடன் உதவினார் திப்பு சுல்தானின் தந்தை “ஹைதர் அலி”.

  படைகளுக்கு பயிற்சிகள் ரகசியமாக கொடுக்கப்பட்டது. கிபி 1780 ஆம் ஆண்டு படைகள்,  இழந்த மண்ணை மீட்க மின்னலென புறப்பட்டன. படைகளுக்கு பல்வேறு தலைவர்கள் நியமிக்கப்பட்டு திருப்புவனம், திருப்பத்தூர், திருமயம் காளையார் கோவில் என தாக்குதல் பலமாக நடைபெற்றது.

  அது நவராத்திரி காலம், கோட்டை வாசல் திறக்கப்பட்டிருந்தது, அன்னை இராஜராஜேஸ்வரி ஆலயத்தில் பூஜைகளுக்கு பெண்கள் குழுமியிருந்தனர். கோட்டையில் இருந்த ஆயுத கிடங்கை அழிக்கும் பொறுப்பினை “குயிலி” தானே ஏற்றாள். உடம்பெல்லாம் எண்ணெய் பூசி தன்னையே திரியாக்கி தீக்குளித்தாள். சுதந்திர தழல் வளர்த்தாள். குயிலியின் தியாகம் தீப்பொறியாய் இருந்த சுதந்திர வேட்கையை தீப்பிழம்பாய் ஆக்கியது. வெள்ளையனுக்கு எதிரான முதல் வெற்றியை ஒரு பாளையம் அன்று அனுபவித்தது.

  மிஞ்சிய படைகள் மானாமதுரை ஆற்றுப்பகுதியில் மோதிக்கொண்டன. மண்மணம் மட்டுமே கண்ட மானாமதுரை மக்களுக்கும் அன்று போர்க்குணம் மிகுந்து படையுடன் கலந்து உயிர் கொடுத்து போரிட, இவர்கள் வளரி வீச்சில் கதறியது வெள்ளைப்படை. பரங்கியன் பரிதவித்து மன்னிப்பும் கேட்டான். விண்ணும் மண்ணும் அதிர விஜயதசமியில் வெற்றி யாத்திரை சிவகங்கை சமஸ்தானத்தில் நடைபெற்றது.

  வரலாறு கொண்டாடும் ஜான்சி ராணி (காலம் கிபி 1828)  என்பார் பிறப்பிற்கு முன்பே, ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன் வீரம் விளைவித்தாள் வேலுநாச்சியார். அந்நியனை அவன் பிடித்த கோட்டையில் இருந்து விரட்டி வென்ற வரலாறு அவள் ஒருத்திக்கே உரியது. அந்த வெற்றிக்கு அண்ணனாக இருந்தார் ஹைதர் அலி, உயிர் துறந்தோர் குயிலி துவங்கி பெருமளவில். அத்தனையும் ஒற்றை ராணியின் கணவன் மறைந்த சோகத்திற்கு அல்ல, கைம்பெண் என்றான போதும் மண்ணின் மீதும், மக்களின் மீதும் அவள் கொண்ட அன்பிற்கும் அவர்கள் சுயமரியாதையை அவர்களுக்கு தர அவள் காட்டிய ஆற்றலுக்கும்!

   ஒற்றுமையின் ஓங்கார நாதம் உன்னதச்சுதந்திரம்,

  உதவி புரிந்தோரெல்லாம் ஒரு மதம் தானே!

  உதிரம் கொடுத்தோரெல்லாம் உடன் பிறந்தோர் தானே

  - விஷ்ணு நாகராஜன்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Vijayadasami, Women Empower