ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

விஜய தசமி 2022: வெற்றிகளை வாரி வழங்கும் திருநாளாக விஜயதசமி  கொண்டாடப்படுவது ஏன்.?

விஜய தசமி 2022: வெற்றிகளை வாரி வழங்கும் திருநாளாக விஜயதசமி  கொண்டாடப்படுவது ஏன்.?

விஜயதசமி

விஜயதசமி

கல்விக்கு உரிய சரஸ்வதி தேவி, செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவி, வீரத்துக்கு அடையாளமான பார்வதி தேவியை போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  நம் நாட்டில் எண்ணற்ற பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் மிக முக்கியமான பண்டிகை 9 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா.

  கல்விக்கு உரிய சரஸ்வதி தேவி, செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவி, வீரத்துக்கு அடையாளமான பார்வதி தேவியை போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

  நவம் என்பது 9-ஐ குறிக்கிறது. அந்த வகையில் அன்னை சக்தி தேவியை 9 நாட்களும் விரதமிருந்து மக்கள் கும்பிடுகிறார்கள்.

  நவராத்திரி நாட்களில் மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என சக்தியின் 9 வடிவங்களை பக்தர்கள் வழிபட்டு வணங்கி மகிழ்கிறார்கள்.

  9 நாட்களோடு நவராத்திரி பண்டிகை முடிந்தாலும் இதனை தொடர்ந்து 10-ஆம் நாள் கொண்டாடப்படும் விஜயதசமி எனப்படும் தசராவும் முக்கியமான நாளாகும்.

  விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது..?

  அம்பிகை துர்க்கையாக வடிவமெடுத்து மகிஷாசுரன் என்னும் அரக்கனோடு போரிட்டு அவனை தோல்வியுற செய்து வெற்றிவாகை சூடிய நாளே விஜயதசமியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  இந்த அரக்கனோடு போரிட்ட 9 நாட்கள் நவராத்திரியாகவும், துர்க்கை வெற்றி வாகை சூடிய நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

  சாகா வரம் எதிர்பார்த்து பிரம்மனை நோக்கி கடுமையான தவமிருந்த மகிஷன் என்ற அசுரன், இறுதியில் தான் விரும்பிய வரத்தை பெற்றான். இவனது வரத்தின் படி, எந்த ஒரு மனிதரோ, தேவரோ, கடவுளோ, வேறு அரக்கரோ கொல்ல முடியாது. குறிப்பாக கருவில் உருவாகாத பெண்ணை தவிர யாராலும் தனக்கு இறப்பு வர கூடாது என்று வரத்தையும் பெற்றான்.

  கேட்ட வரம் கிடைத்ததை தொடர்ந்து தன்னை யாரும் அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் அகில உலகையும். தேவர்களையும் ஆட்டி படைத்தான். நாளுக்கு நாள் மகிஷாசுரனின் அட்டகாசம் அதிகரித்த நிலையில் தேவர்கள் மும்மூர்த்திகளிடம் சென்று முறையிட்டனர். எனவே சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் தங்களது சக்தியை ஒன்றாக்கி ஒரு பெண்ணை படைத்தனர்.

  தேவர்கள் மற்றும் முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க தெய்வ சக்திகள் ஒன்று திரண்டு மாகாளியாக உருவெடுத்து மகிஷாசூரனை அடக்கி காலில் போட்டு மிதித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

  மகிஷாசூரனை 9 நாட்கள் போரிட்டு 10-ஆம் நாள் வீழ்த்திய துர்க்கையை அதன் பிறகு மகிஷாசூரமர்தினி எனும் பெயரால் அழைத்தனர். தேவர்கள் உட்பட அனைவரையும் கொடுமைப்படுத்திய மகிஷனை வீழ்த்திய 10-ஆம் நாள் வெற்றிக்கான விழாவாக விஜயதசமி என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.

  Read More: திருப்பதி பிரம்மோற்சவம் மூன்றாம் நாள் விழா.. சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி..

  தமிழகத்தில் விஜயதசமி...

  தமிழகத்தை பொறுத்த வரை விஜயதசமியன்று மழலை குழந்தைகளை முதல் முதலாக பள்ளியில் சேர்க்கும் பழக்கம் இருந்து வருகிறது. அதே போல பாட்டு வகுப்பு, இசை கருவி பயிற்சி வகுப்பு, நடன வகுப்பு என புதிதாக ஒன்றை கற்று கொள்வதற்கு விஜயதசமி நாளை தேர்வு செய்கின்றனர். விஜயதசமி நாளில் தொடங்கும் எந்த செயலும் வெற்றியடையும் என்ற நம்பிக்கையின் காரணமாக மக்கள் இந்த வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Festival, Vijayadasami