திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் அண்ணன்மார் தெய்வங்கள் என்று அழைக்கப்படும் பொன்னர் - சங்கர் வீர வரலாற்று சரித்திரம் நடைபெற்ற கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களை கொங்கு நாட்டு மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இக்கோயில்களில் பொன்னர் - சங்கர், கன்னிமாரம்மன், மந்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பண்ண சாமி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவில்களில் மாசிப் பெருந் திருவிழா நடைபெறும். புகழ்பெற்ற இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
இதேபோல் இந்த ஆண்டும் கடந்த 18 ம் தேதி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் வளநாடு, படுகளம், வீரப்பூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும். அண்ணன்மார் கோட்டை கட்டி ஆட்சிபுரிந்த வளநாட்டில் பொன்னர் – சங்கரின் தங்கையான தங்காள் விளையாட கிளி வேண்டும் என அண்ணன்களிடம் கேட்டதால் தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பொன்னர் – சங்கர் கோவில் அருகே உள்ள கோவில் குளத்தில் உள்ள மரத்தின் மீதேறி தங்காளுக்கு கிளி பிடித்துக் கொடுத்தனர். முக்கிய திருவிழாவின் தொடக்கமாக இன்று, இந்த வரலாற்றை நினைவுபடுத்தும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது.
இதில் அண்ணன்மார் என்றழைக்கப்படும் சங்கர் வேடமிட்டவர் மரத்தின் மீதேறி தங்காளாக வரும் சிறுமிக்கு கிளியை பிடித்துக் கொடுத்தார். இந்த ஐதீக நிகழ்வை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். முன்னதாக ஆட்டம், பாட்டம் உற்சாகம் என அந்த பகுதியே களைகட்டியது.
இதேபோல வீரப்பூர் மட்டுமின்றி அண்ணன்மார் என்று அழைக்கப்படும் பொன்னர் - சங்கர் மாண்டு பின் மீண்டதாக கூறப்படும் படுகளத்தில், படுகளம் சாய்தல், பின் எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெறும். நேற்று இரவு இந்த முக்கிய நிகழ்ச்சி தொடங்கியது.
அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்க ஒவ்வொருவராக திடீர் திடீரென கீழே சாய்ந்தனர். சிலர் சாமி ஆடியபடி வந்து கீழே சாய்ந்தனர். கீழே சாய்பவர்களை அங்கு இறை தொண்டாற்றும் ஊழியர்கள் தூக்கி வந்து கோயில் முன்பு வரிசையாக படுக்க வைத்தனர். பலரும் இப்படி வரிசையாக படுக்க வைத்திருக்க யாரும் அசைவற்று அப்படியே கிடந்தனர்.
நேற்று நள்ளிரவில் கீழே விழுந்தவர்கள் எல்லாம் இன்று அதிகாலை வரை சில மணி நேரம் அப்படியே தான் இருந்தார்கள். அந்த சமயம் அம்மன் பல்லக்கில் பவனி வரும் நிகழ்வு நடைபெற்றது. பின் சிறுமி திடீரென எழுந்து சாமியாட அப்போது கோவில் பூசாரிகள் தீர்த்துடன் சென்று சிறுமியை அழைத்து வந்த பின் வரிசையாக படுத்திருப்பவர்கள் மீது தீர்த்தத்தை தெளித்ததும், சில மணி நேரம் அசைவற்று கிடந்தவர்கள் துள்ளி குதித்து எழுந்து விட்டனர்.
Also see.. மாசிமகம் 2023 எப்போது?.. நேரம், தேதி குறித்த தகவல்கள்..!
இந்த வரலாற்று நிகழ்ச்சிதான் அண்ணன் மார் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி. மிகவும் தத்ரூபமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுமார் 800 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
இன்று மாலை வீரப்பூரில் பொன்னர் - சங்கர் குதிரை வாகனத்தில் சென்று அம்பு போடும் வேடபரி திருவிழா நடைபெறுகிறது. இதனால் வீரப்பூரில் இப்போதே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
செய்தியாளர்: ராமன், மணப்பாறை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Festival, Masi Magam, Trichy