ஆடி மாத அமாவாசையை அடுத்து வரும் பஞ்சமி திதியை, ‘கருட பஞ்சமி’ என்பார்கள். இந்த தினத்தில் கருடனை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும். அதே போல், ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாளில் வரும் பஞ்சமி திதியானது, ‘ரிஷி பஞ்சமி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் அனைவரும் விரதம் இருந்து வழிபடுவது சகல சவுபாக்கியங்களையும் பெற்றுத் தரும். இந்த இரண்டு பஞ்சமி தினங்களைத் தவிர்த்து, ‘வசந்த பஞ்சமி’ என்ற சிறப்புமிக்க தினமும் ஒன்று உள்ளது. ஆனால் அது தமிழகம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெரிய அளவில் கொண்டாடுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் தமிழகத்தில் சரஸ்வதி வழிபாடு என்பது புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியை ஒட்டி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் வட நாட்டில் இந்த நிகழ்வை துர்க்கை வழிபாடாக நடத்துவார்கள். வசந்த பஞ்சமி தினத்தைத்தான், வடநாட்டினர் சரஸ்வதியை வழிபடுவதற்கான விழாவாக கடைப்பிடிக் கிறாா்கள். தமிழ்நாட்டில் முன் காலத்தில் காமன் பண்டிகை என்ற பெயரில் வசந்த பஞ்சமி கொண்டாடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
வசந்த பஞ்சமியானது வட மாநிலங்களில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இதனை வட மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். வடமாநிலங்களில் இந்த நாளை ஹோலி பண்டிகையை வரவேற்கும் விதமாக கொண்டாடுகின்றனர். வசந்த பஞ்சமியிலிருந்து நாற்பதாம் நாள் ஹோலி பண்டிகை வரும் என் பது குறிப்பிடத்தக்கது...
டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், திரிபுரா, அசாம், வங்காளம், சிக்கிம், பஞ்சாப், மகாராட்டிரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், சட்டிஸ்கர், பீகார் போன்ற மாநிலங்களில் வசந்த பஞ்சமி கொண்டாடுகின்றனர்.
தென்னகத்தில் ஆந்திராவில் ஸ்ரீ பஞ்சமி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். நேபாளம், மேற்கு வங்கம், இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகின்றனர்.
மேலும் படிக்க... சரஸ்வதி பூஜை : வீட்டில் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது!
சரஸ்வதி ஜெயந்தி விழா
பிரம்ம பத்தினி என்று சொல்லப்படுகின்ற முப்பெரும் தேவியருள் ஒருவரான சரஸ்வதி தேவி அவதரித்த நாளே மகர மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திதி ஆகும். இதனை “வசந்த பஞ்சமி” மற்றும் “சரஸ்வதி ஜெயந்தி” விழா என்றும் கொண்டாடுகின்றனர். சரஸ்வதி தேவி வாக்கு வன்மை, கல்வி, கலை, ஞானம், அறிவு, புத்தி கூர்மை, நல்லொழுக்கம், ஆளுமை ஆகிய அனைத்திற்கும் அதிதேவதை ஆவாள். இவளை வணங்குவதால் அஞ்ஞானம் நீங்கி மெய்ஞானம் வளரும்.
சரஸ்வதி தேவியின் தோற்றம்
சரஸ்வதி தூய்மையே வடிவானவள். வெந்நிற ஆடை உடுத்தி, வெள்ளை தாமரையில் அமர்திருப்பவள், கையில் ஞானத்தின் அம்சமாக வீணை, ஜெப மாலை, ஏட்டு சுவடி வைத்திருப்பவள். இவரின் வாகனம் அன்ன பறவை ஆகும்.முப்பெரும் தேவியருள் முதன்மை ஆனவள் இவளே. பிரம்மனின் மனைவியானவள். இவளே சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி ஸ்வரூபமாக விளங்குகிறாள்.
சரஸ்வதியின் வேறுப் பெயர்கள்
வாக்தேவி, பாரதி, கலை செல்வி, ஞானவாகினி, கலைமகள், பிராஹ்மி, காயத்ரி, சாரதா, பூரவாகினி, சாவித்ரி, சகலகலாவல்லி, இசை மடந்தை, பாமகள், நாமகள், பனுவலாட்டி, வாணி, வேதா, கலைவாணி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்.
மேலும் படிக்க... வடபழனி முருகன் கோவில் நடை திறப்பு, முடியும் நேரம் குறித்த தகவல்கள்...
வசந்த பஞ்சமியில் சரஸ்வதி பூஜை
வட மாநிலங்களில் வசந்த பஞ்சமியானது சரஸ்வதி பூஜையாக கொண்டாடுகின்றனர். மஞ்சள் சரஸ்வதிக்கு உகந்த நிறமாக கருதி மஞ்சள் நிற ஆடை, மஞ்சள் நிற பழங்கள், மஞ்சள் நிற மலர்கள், மஞ்சள் நிற சாதங்கள், மஞ்சள் நிற இனிப்பு வகைகளை சரஸ்வதிக்கு சமர்பித்து பூஜைகள் செய்கின்றனர். குழந்தைகளுக்கு அட்சராபியாசம், வித்யாரம்பம் முதலியவை இந்நாளில் செய்கின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.