தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான பண்டிகை மற்றும் விரதங்களில் ஒன்று வரலட்சுமி விரதம். மேலும், வட இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் ஒரிசாவில், வரமஹாலக்ஷ்மி பூஜை என்று பிரம்மாண்டமாக பூஜைகள் நடைபெறும். வரலட்சுமி விரதம் முழுக்க முழுக்க பெண்களுக்கானது. ஆடி மாதம் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. இந்த விசேஷமான நாள், வரலட்சுமி நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது. பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்துக்காக விரதம் இருந்து, விசேஷ பூஜைகள் செய்து, நோன்பு கயிறு கட்டிக் கொண்டு கொண்டாடும் ஒரு விசேஷ நாளாகும். இந்த ஆண்டு, வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 5 அன்று, ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை கொண்டாப்பட இருக்கிறது.
வரலட்சுமி விரதத்தின் கதை
விதர்ப ராஜ்ஜியத்தில், குந்தி நகரம் என்ற அழகான, இயற்கை எழில் கொஞ்சும் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில், சாருமதி என்ற பெண் தன் கணவனுடன் வசித்து வந்தார். தீவிர இறை பக்தி கொண்ட சாருமதிக்கு, மகாலக்ஷ்மி தான் இஷ்ட தெய்வம். தூய்மையான மனதோடு, தவறாமல் மகாலக்ஷ்மியை வணங்கி வந்தாள் சாருமதி. சாருமதியின் அர்பணிப்பு, குடும்பத்தின் மீதான அக்கறை மற்றும் இறை பக்தியால் நெகிழ்ந்த ஆதி லட்சுமி அம்பாள், கனவில் தோன்றி வரலட்சுமி பூஜை செய்யுமாறு கூறினார். அவ்வாறு செய்தால், அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்று சொல்லிவிட்டு மறைந்தார். அடுத்த நாள், தன் கனவில் ஆதி லட்சுமி தோன்றியது பற்றியும், வரலட்சுமி பூஜை செய்யுமாறு அம்பாள் பணித்துவிட்டுச் சென்றதையும் ஊர் மக்களிடம் பகிர்ந்தாள் சாருமதி. அடுத்த நாள், அதிகாலையில் எழுந்து, நீராடி, பூஜை செய்வதற்காக, மரக்கிளைகளை வைத்து ஒரு சிறிய கோவில் மண்டபம் ஒன்றை உருவாக்கினாள். அம்பாளின் முகத்தை வரைந்து கலசம் உருவாக்கினாள். முதல் கட்ட பூஜை முடிந்த உடனேயே, அம்பாளின் ஆசியால் சாருமதிக்கு தங்க ஆபரணங்கள் கிடைத்தன.
மகாலட்சுமி ஸ்தோத்திரத்தை சொல்லி, இனிப்புகளை நைவேத்தியம் செய்து, ஒன்பது மஞ்சள் கயிறுகளை அம்பாளுக்கு சாற்றி, அதை தன் வலது கையில் கட்டிக் கொண்டாள். நோன்பு கயிறு கட்டிக் கொண்ட சாருமதிக்கு, நவரத்தின கற்களால் ஆன கங்கணத்தை (வளையல்) வரலட்சுமி அம்மன் பரிசாக வழங்கினார்.
Also Read : வரலட்சுமி பூஜை செய்வது எப்படி? அம்பாளை அழைப்பது முதல் நோன்பு கயிறு கட்டுவது வரை.!
ஆரத்தி காட்டி, நைவேத்தியத்தையும் நோன்பு கயிறையும் அனைவரோடும் பகிர்ந்து, அன்று நாள் முழுவதும் விரதம் இருந்து பூஜையை நிறைவேற்றினாள் சாருமதி. வரலட்சுமி விரதம் நிறைவாக கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு, ஆதி லட்சுமி அம்பாள், சாருமதிக்கு அனைத்து சுபிட்சங்களையும் வாரி வழங்கினார்.
சாருமதியைப் போலவே, அந்த ஊரில் இருந்த பெண்களும் வரலட்சுமி விரதம் இருக்க தொடங்கினார்கள்.
வரலட்சுமி – அஷ்டலக்ஷ்மியின் அழகிய சொரூபம்
வரலட்சுமி என்பது அஷ்டலக்ஷ்மியின் மிகவும் அழகிய வடிவமாகக் கருதப்படுகிறது. பொன், பொருள், செல்வ வளம், நிறைவான வாழ்க்கை, குடும்பத்தில் மகிழ்ச்சி என்று அனைத்து வரங்களையும் வாரி வழங்குவாள் வரலட்சுமி அன்னை.
Also Read : வறுமை நீக்கும் மகாலட்சுமி பூஜை செய்வது எப்படி.!
ஆதி லட்சுமி அல்லது மகா லட்சுமி – ஆன்மீக ரீதியான செல்வம், உள்ளுணர்வு
தன லட்சுமி – பணம், பொன், சொத்து
தானிய லட்சுமி – உணவும் உணவு சார்ந்த பொருட்களும்
கஜ லட்சுமி – தன்னம்பிக்கை மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பு
சந்தான லட்சுமி – குழந்தைப்பேறு
தைரிய லட்சுமி – துணிச்சல், பயம் நீக்கம்
விஜய லட்சுமி – தடை நீக்கம், வெற்றி
வித்யா லட்சுமி – கல்வி, கலைகளில் அறிவு மற்றும் ஆற்றல்
வரலட்சுமி பூஜை செய்தால், இந்த அத்தனை பேறுகளையும் அம்பாள் வழங்குவாள் என்பது ஐதீகம்.
வரலட்சுமி விரதப்பூஜை செய்வதற்கான முகூர்த்தம்
வரலட்சுமி பூஜை, எப்போதுமே வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படும். வெள்ளிக்கிழமை ராகு காலம் காலை 10.30 முதல் 12 மணி வரை இருக்கும். எனவே, பூஜை தொடங்கும் நேரம் என்பதை விட முடிக்கும் நேரம் முக்கியமானது. ராகு காலத்தில் பூஜையை முடித்து நைவேத்தியம், ஆராதனை செய்யக்கூடாது. தோராயமாக ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை பூஜை செய்யத் தேவை என்பதால், ராகு காலம் தொடங்குவதற்குள் பூஜை நிறைவேற வேண்டும். இல்லையென்றால், நண்பகல் 12 மணிக்கு மேல் பூஜை செய்யத் தொடங்கலாம்.
Also Read : திருமணம் மற்றும் குழந்தை வரம் அருளும் ஆடிப்பூர அம்பிகை வழிபாடு மகிமைகள்!
ஆகஸ்ட் 5, 2022 அன்று வரும் வரலட்சுமி பூஜைக்கு மூன்று முகூர்த்த நேரங்கள் உள்ளன.
காலையில் சிம்ம லக்ன முகூர்த்தம் – காலை 6.15 முதல் 8.31 வரை
மதியம் விருச்சிக லக்ன முகூர்த்தம் – மதியம் 1.07 முதல் 3.25 வரை
மாலை கும்ப லக்ன முகூர்த்தம் – மாலை 7.12 முதல் 8.39 வரை
காலை அல்லது மதிய நேரத்தில் பூஜை செய்ய முடியாதவர்கள், மாலை நேரத்தில் செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadi