ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா – பகல்பத்து திருவிழா தொடங்கியது

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா – பகல்பத்து திருவிழா தொடங்கியது

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம்

பூலோகவைகுண்டப் பெருமாளை ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து திருவிழா தொடங்கியது. நம்பெருமாள் அர்ச்சுனமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

  108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றிவணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கியவிழாவான வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு திருவிழா நேற்று மாலை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

  21நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் திருவாய்மொழி திருநாட்கள் எனப்படும் பகல்பத்து திருநாளின் முதல்நாளான இன்று காலை 7.30மணிக்கு நம்பெருமாள் தொண்டரடிபொடியாழ்வார் இயற்றிய பாசுரத்திற்கேற்ப கவரிமான் தொப்பாரை கொண்டை அணிந்து, நெல்லிக்காய் மாலையுடன் கூடிய அடுக்கு திருவாபரணங்களை சூடியபடி, ரத்தினகற்கள் பதிக்கப்பட்ட அபயஹஸ்தம் அணிந்தும், பின்புறத்தில் புஜகீர்த்தியுடன் தங்கபல்லக்கில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கண்ணாடி சேவை கண்டருளி பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.

  அதனைத்தொடர்ந்து அரையர் சேவை எனப்படும் அபிநயம், வியாக்யானம், பெரியாழ்வார் திருமொழி கேட்டருளிய அவர் பக்தர்களுக்கு பொதுஜனசேவை கண்டருளினார். தொடர்ந்து பகல் பத்து ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருள்வார். பூலோகவைகுண்டப் பெருமாளை ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

  பகல்பத்து நாட்களில் மூலவர் முத்தங்கி அணிந்து பக்தர்களுக்கு சேவைசாதிப்பார். முக்கியதிருநாளான வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 14ம்தேதி 4.45மணியளவில் நடைபெறஉள்ளது. பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று நம்பெருமாளை தரிசனம் செய்துவருகின்றனர். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.

  வைகுண்ட ஏகாதேசி திருவிழாவிற்காக மாநகர காவல்துறை சார்பில் 2,000 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 197 சிசிடிவி கேமராக்கள் கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் பகல்பத்து விழாவிற்கு வரும் பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் பெருமாளை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் 14ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் பக்தர்கள் அனுமதி குறித்து மாவட்ட ஆட்சியர் தான் அறிவிப்பார்.

  19 வருடங்களுக்குப் பிறகு மார்கழி மாதத்தில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு விழா இந்த வருடம் மட்டும் கார்த்திகை இருபத்தி எட்டாம் தேதி டிசம்பர் 14ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

  20ஆம் தேதி நம்பெருமாள் கைத்தல சேவையும் 21ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் 23ஆம் தேதி தீர்த்தவாரியும் 24ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சம் துடன் வைகுண்ட ஏகாதேசி திருவிழா நிறைவடைகிறது.

  செய்தியாளர்: இ.கதிரவன் ( திருச்சி)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Festival, Hindu Temple, Srirangam, Trichy, Vaikunda ekadasi