ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா துவக்கம்.. 3,000 போலீசார் பாதுகாப்பு

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா துவக்கம்.. 3,000 போலீசார் பாதுகாப்பு

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்

Vaikunda ekadasi 2023 | ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், 3,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா, இன்றிரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்வுடன் துவங்குகிறது. பகல்பத்து, ராப்பத்து என நாளை முதல் தொடர்ந்து, 20 நாட்களுக்கு நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனப்படும் தீந்தமிழ் பாசுரங்களால் நம்பெருமாளை பாடி பரவசமாக வழிபடும் தமிழ்த் திருவிழாவாக இவ்விழா நடைபெற உள்ளது.

108 திவ்யத் தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான திருத்தலம், ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில்.

இக்கோயிலில் ஆண்டு முழுவதுமே விழாக்கள் நடைபெற்றாலும் கூட, வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பு வாய்ந்த திருவிழாவாக விளங்கி வருகிறது.

திருவாய் மொழித் திருவிழா

நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா, இன்றிரவு திரு நெடுந்தாண்டகத்துடன் துவங்குகிறது. விழாவின் பூர்வாங்க நிகழ்ச்சியாக, கருவறையில் மூலவரின் முன்பு திருமங்கையாழ்வார் பாடிய திரு நெடுந்தாண்டகத்தின் ஒரு பகுதி பாடப்படும்.

தொடர்ந்து நாளை, பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருவாய்மொழி திருவிழா (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல்நாள் நம்பெருமாள் காலை, 5.30 மணிக்கு விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை, 6.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைவார்.

காலை, 7.15 மணி முதல், காலை 11.30 மணி வரை, அரையர்கள் நம்பெருமாள் முன்நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த தமிழ்ப் பாடல்களை, அபிநயம் மற்றும் இசையுடன் பாடிக் காட்டுவர்.

இரவு, 7 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு, இரவு, 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

முத்தங்கி சேவை

பகல் பத்தின் முதல் நாளான நாளை முதல், ஜனவரி, 11ம் தேதி வரை, நல்முத்துகளால் செய்யப்பட்ட முத்தங்கியை அணிந்து மூலவர் ரங்கநாதர் சேவை சாதிப்பார்.

முத்தங்கி சேவையில் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் வருகை தருவார்கள் என்பதால், விழா துவங்கி முடியும் வரை, மூலவருக்கு முத்தங்கி அணிவிக்கப்படுகிறது.

இதே போல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

Also see... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் வரலாறும் அதன் சிறப்புகளும்...

சொர்க்க வாசல்

பகல்பத்து உற்சவத்தின், 10வது நாள் (ஜனவரி 1ம் தேதி) நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ஜனவரி, 2ம் தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான, பரம்பத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு  நடைபெறுகிறது.

அன்றைய தினம் அதிகாலை, 3.30 மணிக்கு, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அதிகாலை, 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார்.

இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள்.

சொர்க்கவாசல், 2ம் தேதி முதல், 7ம் தேதி வரை, பகல், 1 மணி முதல், இரவு, 8 மணி வரை திறந்திருக்கும். 8ம் தேதி மாலை, 4 மணி முதல், இரவு, 8.30 மணி வரை திறந்திருக்கும்.

ராப்பத்து

9ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. சொர்க்கவாசல் திறப்பு தினமான, 2ம் தேதி முதல், ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.

ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ராப்பத்து ஏழாம் திருநாளான, 8ம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான, 9ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான, 11ம் தேதி தீர்த்தவாரியும், 12ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவு பெறுகிறது.

Also see... ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா... சொர்க்கவாசல் திறப்பு எப்போது? முழு விவரம்

விழாக் கோலம்

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு,  ஸ்ரீரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

கண்ட்ரோல் ரூம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், 3,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கு, இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அன்று கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

தொடர்ந்து, இருபது நாட்கள் நடைபெறும் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக, கோயில் வளாகத்தில் சிறப்பு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உடன், கூடுதலாக, 92 கேமராக்கள் இணைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது.

மேலும், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கூட்ட நெரிசலை கண்காணித்து, நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், விழா நாட்களில், காவிரிப் பாலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவு போலீசார் பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

First published:

Tags: Srirangam, Trichy, Vaikunda ekadasi