ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

வைகுண்ட ஏகாதசி 2023: ஸ்ரீரங்கம் பகல்பத்து திருவாய்மொழி திருவிழா துவக்கம் - அதிகாலையில் எழுந்தருளிய நம்பெருமாள்

வைகுண்ட ஏகாதசி 2023: ஸ்ரீரங்கம் பகல்பத்து திருவாய்மொழி திருவிழா துவக்கம் - அதிகாலையில் எழுந்தருளிய நம்பெருமாள்

ரெங்கநாத பெருமாள்

ரெங்கநாத பெருமாள்

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா,  பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருவாய்மொழி திருவிழா இன்று தொடங்கியது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

108 திவ்யத் தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான திருத்தலம், ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில். இக்கோயிலில் ஆண்டு முழுவதுமே விழாக்கள் நடைபெற்றாலும் கூட, வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பு வாய்ந்த திருவிழாவாக விளங்கி வருகிறது.

திருவாய் மொழித் திருவிழா

வைகுண்ட ஏகாதசி பெருவிழா,  பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருவாய்மொழி திருவிழா இன்று தொடங்கியது. உற்சவர் நம்பெருமாள் காலை, 5.30 மணிக்கு, விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து தங்கப் பல்லக்கில் புறப்பட்டார்.

காலை, 6.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைந்தார். ரத்தின நீள்முடி கிரீடம், கபாய் சட்டை, ரத்தின அபய ஹஸ்தம், காசு மாலை, நெல்லிக்காய் மாலைகள் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து, ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், அடியார்கள் மற்றும் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

காலை, 7.15 மணி முதல், காலை, 11.30 மணி வரை, அரையர்கள் நம்பெருமாள் முன்நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்தம் என்ற தேன் தமிழ்ப் பாடல்களை, அபிநயம் மற்றும் இசையுடன் பாடிக் காட்டுவர்.இரவு, 7 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு, இரவு, 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

அதிகாலை புறப்பாடு

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பகல்பத்து முதல் நாளில், லக்கினம் பார்த்து தான் புறப்பாடு கண்டருள்வது வழக்கம். அதன்படி, விருச்சிக லக்கினம் என்பது இன்று அதிகாலை, 5.30 மணி என்பதால், அந்த நேரத்திலேயே நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு கண்டருளினார்.

நாளை முதல் காலை, 6 மணிக்கு மேல், நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு கண்டருள உள்ளார்.

முத்தங்கி சேவை

பகல்பத்தின் முதல் நாளான இன்று முதல், ஜனவரி, 11ம் தேதி வரை, நல்முத்துகளால் செய்யப்பட்ட முத்தங்கியை அணிந்து மூலவர் ரங்கநாதர் சேவை சாதிப்பார்.முத்தங்கி சேவையில் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் வருகை தருவார்கள் என்பதால், விழா துவங்கி, முடியும் வரை, மூலவருக்கு முத்தங்கி அணிவிக்கப் படுகிறது.இதே போல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

Also see...  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா... நிகழ்ச்சி நிரல் விவரம்

இன்று பகல்பத்து திருநாள் துவக்கத்தையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே மூலவர் மற்றும் உற்சவர் நம்பெருமாளை சேவித்து வருகின்றனர்.

First published:

Tags: Srirangam, Vaikunda ekadasi