சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு புனித பயணம் வரும் பக்தர்களின் திடீர் உடல் நலம் பாதிப்பு பிரச்சனைகளை தீர்க்க சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது. ஆண்டு முழுவதும் செயல்படும் நிலக்கல்லில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பம்பா, சன்னிதானம் பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.
ஆபரேஷன் தியேட்டர், ஐசியூ, ஈசிஜி, ஆக்சிஜன், எக்ஸ்ரே மற்றும் அவசர அறுவை சிகிச்சைக்கு வசதிகள் மற்றும் ஆய்வக வசதிகள் ஏற்படுத்தி உள்ளது. நீலிமலை மற்றும் அப்பாச்சிமேடு ஆகிய இடங்களில் இருதய சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகள் அனைத்திலும் பாம்பு கடித்தால் சிகிச்சை மற்றும் வெறிநாய் தடுப்பூசிகள் உள்ளன.
பம்பை முதல் சன்னிதானம் வரையிலான பாதையில் 15 அவசர மருத்துவ உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மலை ஏறும் போது மயக்கம் அல்லது சோர்வு ஏற்படுபவர்களுக்கு ஓய்வெடுக்கவும், செயற்கை முறையில் ஆக்ஸிஜனை சுவாசிக்கவும், முதலுதவி செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Also see... சபரிமலை செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு கேரள அரசின் முக்கிய அறிவிப்பு.!
இவை தவிர பல்ஸ் ஆக்சிமீட்டர் மற்றும் இதய புத்துயிர் வழங்க வெளிப்புற டிஃபிபிரிலேட்டர் போன்ற உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்களின் சேவை இந்த மையங்களில் 24 மணி நேரமும் கிடைக்கும்.
மேலும் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழித்தடத்தில் ஏதேனும் அவசர உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், அருகிலுள்ள மருத்துவ மையத்தைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் வந்து சிபிஆர் உள்ளிட்ட முதலுதவிகளை வழங்குவார்கள். பின்னர் ஒவ்வொரு அவசர மருத்துவ மையத்திற்கும் அருகே ஐயப்ப சேவா சங்க தொண்டர்கள் ஸ்ட்ரெச்சர் மூலம் சிகிச்சை வசதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வார்கள்.
எருமேலியில் இருந்து பம்பை வரையிலான பாரம்பரிய வனப் பாதையில் வனத்துறை உதவியுடன் கல்லிடாம்குன்னு, கரியிலாம்தோடு, மஞ்சப்பொடி தட், கரிமலை ஆகிய இடங்களில் அவசர மருத்துவ உதவி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. அவசர காலங்களில் நோயாளிகளை அழைத்து செல்ல தேவசம்போர்டு மற்றும் வனத்துறையின் ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர பம்பை, நிலக்கல், இலவுங்கல், எருமேலி, வடசேரிக்கரை, பந்தளம், மற்றும் பத்தனம்திட்டா பொது மருத்துவமனைகளில் நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகின்றன. நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானத்தில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சுகாதார மேற்பார்வையாளர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் இளநிலை சுகாதார ஆய்வாளர்கள் குழு பணியாற்றி வருகிறது.
தரிசனத்திற்கு வருபவர்கள் மலை ஏறும் போது உடல் நலக்குறைவு ஏற்படாமல் இருக்க பந்தளம், பத்தனம்திட்டா இட தாவளம், நிலக்கல் பம்பை மற்றும் சரண பாதையின் இருபுறமும், தவிர்க்க வேண்டியவை குறித்து, ஆறு மொழிகளில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
Also see... சபரிமலை மண்டல காலத்தில் தினசரி நடைபெறும் பூஜைகள்... முழுவிவரம் இதோ!
மண்டல பூஜை - மகரவிளக்கு உற்சவத்தை முன்னிட்டு பத்தனம்திட்டா பொது மருத்துவமனையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள சபரிமலை வார்டில் உள்ள அனைத்து படுக்கைகளிலும் ஆக்சிஜன் சப்ளை மற்றும் வென்டிலேட்டர், போர்ட்டபிள் வென்டிலேட்டர், ஆக்சிஜன் பெட், இசிஜி, ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர், மல்டி-பாரா மானிட்டர், பைபாஸ் வென்டிலேட்டர் மற்றும் ஐசியூ உள்ளிட்ட அதிநவீன வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
சபரிமலை வார்டில் 18 படுக்கைகள் மற்றும் இருதய சிகிச்சை பிரிவில் இரண்டு படுக்கைகள் உட்பட 20 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. உயிர்காக்கும் மருந்துகள், உயிர்காக்கும் கருவிகள் ஆய்வக சோதனைகள் போன்ற அனைத்து சேவைகளும் இலவசமாக இங்கு வழங்கப்படும்.
மேலும் சபரிமலை வார்டுக்கு பிரத்யேகமாக 24 மணி நேரமும் செயல்படும் டாக்டர்கள், ஸ்டாஃப் செவிலியர்கள், அட்டெண்டர்கள் அடங்கிய குழு, கூடுதலாக மருத்துவமனையின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோனி மருத்துவக் கல்லூரியிலும் சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Also see... இனி தடை இல்லை.. சபரிமலைக்கு விமானத்தில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!
இந்த முறை பம்பையை மையமாக கொண்டு கட்டுப்பாட்டு அறை செயல்பட தொடங்கியுள்ளது. (கட்டுப்பாட்டு அறையின் எண்: 04735 203232) பக்தர்கள் செல்லும் பாதையில் பக்தர்களுக்கு நெஞ்சுவலி அல்லது மாரடைப்பு ஏற்பட்டால், சுகாதாரப் பணியாளர்கள் ஐந்து நிமிடங்களில் அவர்களைச் சென்று பம்பைக்கு அழைத்துச் சென்று உடனடியாக பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். கேத் லேப் மற்றும் இருதயநோய் நிபுணர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.