• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் திருக்கோவிலின் சிறப்புகள்!

திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் திருக்கோவிலின் சிறப்புகள்!

வானமே கூரையாக வாழும் அன்னை, காளி என்றாலும் காட்சியில் கருணை வடிவம் காட்டும் அன்னை என பல பெருமைகள் வாய்ந்த தலமாக விளங்குவது உறையூர் வெக்காளி அம்மன் திருக்கோவில்.

  • Share this:
    கோவில்கள் அனைத்திலும் மேல் விமானமானது கருவறைக்கு மேல் இருக்கும். ஆனால் திருச்சி உறையூர் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் வெக்காளியம்மன் கோவிலில் மேல் விமானம் இல்லாது மழை, வெயில், பனி என அனைத்தையும் தாங்கி பக்தர்களின் குறைகளையும், நோய்களையும் தீர்த்து மக்களைக் காத்து அருள்புரிகிறாள் அம்மன்.

    அன்னை பராசக்தியின் அவதாரங்களில் முக்கியமானது காளி அவதாரமாகும். உறையூர் அம்மன் சன்னதியில் வடக்கு நோக்கிய யோக பீடத்தில் அமர்ந்து வெக்காளி அம்மன் கம்பீரமாக காட்சி தருகிறாள். ஒரு கரத்தில் திரிசூலம், ஒரு கரத்தில் உடுக்கை, மற்றொரு கரத்தில் பாசம், இன்னொரு கரத்தில் அட்சய பாத்திரம் என நான்கு கரங்களை கொண்டிருக்கிறாள். கழுத்தில் திருமாங்கல்யமும், முத்தாரம், அட்டிகை, தலையில் பொன்முடி, கையில் வளையல்கள் அணிந்திருக்கிறாள். பீடத்தில் வலது காலை மடித்தும், இடது காலை அசுரன் மீது பதியவைத்தும் அருள்பாலிக்கிறாள். இடுப்பில் யோக பட்டம் அணிந்திருக்கிறாள்.

    வெக்காளி அம்மன் வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறாள். மேற்கூறை இல்லாத அம்மன் கோயில்களில், பொதுவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை அசுரன் மீது பதியுமாறு அமர்ந்திருப்பாள். ஆனால் வெக்காளி அம்மன் வலதுகாலை மடித்து இடதுகால் பாதத்தை அசுரன்மீது பதியவைத்திருப்பது அபூர்வ காட்சியாகும்.



    தலவரலாறு

    சாரமா முனிவர் என்பவர், அபூர்வ பூச்செடிகளைக் கொண்டு உறையூரில் நந்தவனம் அமைத்தார். அந்த நந்தவனத்தில் மலரும் மலர்களை மாலையாகத் தொடுத்து, அருகே உள்ள தாயுமான சுவாமிக்கு நாள்தோறும் சமர்ப்பித்து வந்தார்.

    இந்த நிலையில் பூ வணிகன் ஒருவன், அந்தப் பகுதி மன்னனை மகிழ்விப்பதற்காக சாரமா முனிவரின் நந்தவனத்தில் இருந்து மலர்களை திருட்டுத்தனமாக பறித்துக் கொடுத்து வந்தான். ஒரு நாள் இதனைக் கண்டறிந்த சாரமா முனிவர், மன்னனிடம் போய் முறையிட்டார். மன்னனோ, முனிவரின் புகாரை புறக்கணித்த தோடு அல்லாமல், பூ வணிகனை ஊக்குவித்தான்.

    இதனால் தவித்துப் போன சாரமா முனிவர், திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று எண்ணி, தாயுமான சுவாமிகளிடமே தனது புகாரை சொல்லி வழிபட்டார். தனக்கு நேரும் குறைகளைக் கூட தாங்கிக் கொள்ளும் இறைவன், தன் அடியார்கள் படும் துயரைத் தாங்கிக்கொள்ள மாட்டார் என்பதே நிதர்சனமான உண்மை. இதனால் கிழக்கு நோக்கிய இறைவன், கோபக்கனல் கொண்டு மேற்குநோக்கி திருப்பினார். அவரது உக்கிரப் பார்வையால், உறையூரில் மண் மழை பொழிந்தது. இதில் அங்கு வசித்த மக்களின் வீடுகள் அழிந்தன. மக்கள் செய்வதறியாது திகைத்தனர். அனைவரும் உறையூரில் உள்ள வெக்காளி அம்மனிடம் சரண் புகுந்தனர்.

    அன்னை வெக்காளி, தம் மக்களுக்காக தாயுமானவரிடம் வேண்ட, மண் மாரி பொழிவது நின்றது. மக்கள் வீடு இழந்து நின்றனர். மக்களின் துயரம் கண்டு வருந்திய அன்னை, மக்கள் அனைவருக்குமே வீடு கிடைக்கும் வரை நானும் வெட்ட வெளியிலேயே வாழ்வேன் என்று சபதம் செய்து வானமே கூரையாக வாழத் தொடங்கினாள். இன்றளவும் வீடற்றவர்கள் வாழ்ந்து வருவதால், அன்னையும் தன் சபதப்படியே வெட்ட வெளியில் வாழ்ந்து வருவதாக தல வரலாறு சொல்கிறது.

    கோவிலின் அமைப்பு

    சுற்றிலும் எழிலான மண்டபம் இருக்க, அன்னை வெக்காளி மட்டும் தன் வாக்குப்படி வெட்டவெளியில் நடுநாயகமாக வடக்கு முகமாய் அருள்காட்சி வழங்குகிறாள். ஆலயத்திற்கு தெற்கு, வடக்கு வாசல்கள் உள்ளன. தெற்கு வாசலில் நுழைந்தால் வல்லப கணபதி, விசாலாட்சி சமேத விஸ்வநாதர், வள்ளி - தெய்வானை சமேத மயூர முருகன், காத்தவராயன், புலி வாகனத்துடன் கூடிய பெரியண்ணன், மதுரைவீரன், உற்சவர் வெக்காளி, வடக்கு சுவரில் துர்க்கை, பொங்கு சனீஸ்வரர் என அனைத்து சன்னிதிகளும் ஒருங்கே அமைந்துள்ளன.

     

    அம்மன் சன்னிதியின் எதிரே சூலங்கள் நடப்பட்டுள்ளன. இதில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை அலுவலகத்தில் சிறு காணிக்கை செலுத்தி, ஆலயத்தில் தரும் சீட்டில் எழுதி அதனை அம்மனிடம் வைத்து எடுத்து, இந்த சூலத்தில் கட்டி விடுகின்றனர். இதனால் தங்கள் வேண்டு தல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக அமைந்துள்ளது.

    மேலும் படிக்க... திருமணத் தடை நீங்கவும், கடன் தொல்லை தீரவும் வணங்க வேண்டிய அற்புத ஆலயம் எது தெரியுமா?

    இந்த ஆலயத்தில் பங்குனியில் தொடங்கும் பிரம்மோற்சவம், சித்திரை 1-ந் தேதி நடைபெறும் தேரோட்டத்தோடு நிறைவுபெறுகிறது. இது தவிர, இங்கு ஆவணி மாதத்தில் மகா சர்வசண்டி ஹோமம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. சித்திரை மாதம் ஐந்து நாட்கள் விழா, பூச்சொரிதல் விழா, வைகாசி கடைசி வெள்ளியில் மாம்பழ அபிஷேகம், புரட்டாசியில் நவராத்திரி, தை வெள்ளி, ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் என  ஒவ்வொரு மாதமும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. விழாக்களுக்குக் குறைவில்லாத ஆலயமாக இது விளங்குகின்றது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்.

    சுற்றியுள்ள திருச்சி தலங்கள்

    உறையூரில் பஞ்சவர்ண நாதர் கோவில், தான்தோன்றீஸ்வரர் ஆலயம், நாச்சியார் கோவில், செல்லாண்டி அம்மன் திருக்கோவில் உள்ளிட்ட பல ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இவை தவிர உறையூரைச் சுற்றிலும் உச்சிப் பிள்ளையார் கோவில், தாயுமான சுவாமி ஆலயம், திருவானைக்கா ஆலயம், உய்யக்கொண்டான் திருமலை, திருவெறும்பூர், திருநெடுங்களம், திருவாசி, திருப்பைஞ்ஞீலி, வயலூர் உள்ளிட்ட சைவத் தலங்களும், ஸ்ரீரங்கம், உத்தமர் கோவில், திருவெள்ளரை, அன்பில் எனும் வைணவத் தலங்களும் அமைந்துள்ளன. இது தவிர சமயபுரம், குணசீலம் உள்ளிட்ட பிரார்த்தனைத் தலங்களும் இருக்கின்றன.

    பிரார்த்தனை

    மக்கள் தங்கள் மனதில் உள்ள குறைகளையும் கோரிக்கைகளையும் சீட்டில் எழுதி அன்னை முன்புள்ள திரிசூலத்தில் கட்டி விடுகின்றனர். இதன்மூலம் தங்கள் குறைகள் நிவர்த்தியாகும் என நம்புகின்றனர். அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் பெண்களுக்கு திருமண தடையும் புத்திர தோஷமும் நீங்கும்.

    நேர்த்திக்கடன்

    அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

    வெக்காளி அம்மன் கோவில் அமைவிடம்

    திருச்சிராப்பள்ளி மாநகரின் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உறையூர் அமைந்துள்ளது. 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று எண்ணற்ற பேருந்துகள் அக்கோவிலுக்கு செல்லுகின்றன.

    மேலும் படிக்க... நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: