பொன்னி நதியாம் காவிரி கரைபுரண்டோடும், திருச்சி திருவானைக்காவல் கரையோரப் பகுதிகள் முற்காலத்தில் கடம்பவனம் என்றழைக்கப்பட்டு இருக்கிறது. கடம்ப மரங்களும், யானைகளும் நிறைந்த அடர்ந்த காட்டுப்பகுதியில், சிவனை அடையும் நோக்கில் காவிரிக்கரையில் அகிலாண்டேஸ்வரி தவமிருக்கிறாள்.
காவிரித் தண்ணீரை கையால் எடுத்து அப்படியே அதை லிங்கமாக செய்து வழிபட்டு வருகிறாள். அப்போது, இரணியன் என்ற அசுரன், அகிலாண்டேஸ்வரிக்கு இடையூறு செய்தான். ஆத்திரமடைந்த அகிலாண்டேஸ்வரியின் கோபக் கனலில் இருந்து தெறித்த ஒரு பொறி, காளியாக உருவெடுத்தது.
அந்த காளிதான் இரணியனை வதம் செய்து திரும்பியது என்கின்றன புராணக் கதைகள். இந்த இரணியம்மனே, திருவானைக்காவலின் எல்லைக் காவல் தெய்வமாக விளங்குகிறாள் என்பது ஐதீகம்.
இந்த உக்கிரமான காளியின் பதுவு கோவில், ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயில் சன்னதி வீதியில் உள்ளது. அவளது சினத்தை தணித்த அகிலாண்டேஸ்வரி, அவளுக்கு இரணியம்மன் என்று பெயரிட்டு, எல்லையை காவல் காக்கும் விதமாக, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் அருகே, கோவில் கொள்ள பணித்தாள்.
முன் தேர் உனக்கு; பின் தேர் எனக்கு" என்றும் வாக்களித்திருக்கிறாள். அதன்படி, ஆண்டுதோறும் தை மாத கடைசி செவ்வாய்கிழமை பட்டியல் இனத்தவரின் காப்புடன் எல்லைப் பிடாரி இரணியம்மன் கோயில் திருவிழா துவங்குகிறது.
மாசி மாதம் முதல் செவ்வாய் கிழமை முத்தரையர் காப்பும், இரண்டாவது செவ்வாய் கிழமை காணியப்பிள்ளை காப்பும் கட்டப்படுகிறது. அன்றே யானை வாகனத்தில் இரணியம்மன் வீதியுலா புறப்படுகிறார். தொடர்ந்து குதிரை வாகனம், பூத வாகன புறப்பாடு நடக்கிறது.
இதற்கிடையே, சன்னதி வீதியில் உள்ள காளியம்மன் பதுவு கோயிலில் 'காளியாவட்டம்' என்கிற காளி ஓட்டம் நடைபெறும். கோயில் பூசாரி காளி வேடமணிந்து வீதியுலா வருவதும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கம்புகளோடு படுகளம் காண்பதும் காணக் கிடைக்காத அற்புதமான காட்சி.
அதைத்தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில், ஓலைப்பிடாரியாய் இரணியம்மன் வீற்றிருக்க, வீட்டுக்கு வீடு, தெருவுக்கு தெரு மாவிளக்கு பூஜையும், கிடாக்களை பலி கொடுத்து, பக்தர்கள் நேர்த்திக் கடனும் செய்வார்கள்.
இத்தகைய சிறப்புமிக்க இத்திருவிழா, இருதரப்பினர் இடையே ஏற்பட்ட ஈகோ' காரணமாக தடைப்பட்டு கிடந்தது.
31 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த, 2019ம் ஆண்டு, அப்போதைய திருவானைக்காவல் உதவி ஆணையர் ஜெயப்பிரியா முயற்சியால், காளியாவட்டம் கோலாகலமாக நடத்தப்பட்டது.
அதன்பிறகு வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய ஆர்வம் செலுத்தாததால், 'காளியாவட்டம்' திருவிழா கானல் நீரானாது. இந்நிலையில், 'காளியாவட்டம்' நிகழ்வு நடத்த வலியுறுத்தி, திருவானைக்காவல் சன்னதிவீதி, டிரங்க் சாலையில் நேற்று மாலை திடீர் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
Also see... மகா சிவராத்திரி 2023 : விரதம் இருக்கும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
அப்பகுதியில் இருந்த, 100க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. போலீஸ் முன் அனுமதியின்றி நடைபெற்ற இப்போராட்டத்தால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
தகவலறிந்த, ஸ்ரீரங்கம் காவல்துறை உதவி ஆணையர் நிவேதிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனடியாக கடைகளை திறக்க வைத்த போலீசார், கடைகளை மூடச் சொன்ன நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trichy