• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • திருவண்ணாமலை தீப திருவிழா... 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை

திருவண்ணாமலை தீப திருவிழா... 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை

புதன்கிழமை மதியம் 1 மணி முதல் வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

  • Share this:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி புதன்கிழமை 17 ஆம் தேதி முதல் வருகிற 20-ந் தேதி வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

அருணாசலேஸ்வரர் கோவில்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்காக கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கடந்த ஆண்டை போன்றே கோவிலின் வளாகத்திலேயே சாமி உற்சவ உலா நடைபெற்று வருகின்றன.

காலையில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலாவும், இரவில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உற்சவ உலாவும் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்று வருகின்றது.

மேலும் கோவிலில் விழா நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அனுமதி சீட்டு இல்லாமல் சாமியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பி விடுகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான 7-ம் நாள் விழாவன்று தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஆகம விதிகளின் படி 7-ம் நாள் விழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

சாமி தரிசனத்திற்கு தடை

வழக்கமாக தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளன்றும், அந்த சமயத்தில் வரும் பெளவுர்ணமியன்றும் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்லவும் பக்தர்கள் வருகை தருவர்.

இதற்காக சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து  திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். இந்த மாதத்திற்கான பெளவுர்ணமி வருகிற 18-ந் தேதி மதியம் 1.03 மணிக்கு தொடங்கி 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2.51 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் மலையேறி சென்று மகா தீபத் தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 17 ஆம் தேதி (புதன்கிழமை) மதியம் 1 மணி முதல் வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனுமதி சீட்டு பெற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு... தடுப்பூசி சான்றிதழ் அவசியம்..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: