முகப்பு /செய்தி /ஆன்மிகம் / திருப்பதி கோவிலில் வரலாற்றில் முதல்முறையாக... இனிமேல் இப்படிதான் உண்டியலை எண்ணப் போகிறார்களாம்...!

திருப்பதி கோவிலில் வரலாற்றில் முதல்முறையாக... இனிமேல் இப்படிதான் உண்டியலை எண்ணப் போகிறார்களாம்...!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Tirupati | திருப்பதியில் காணிக்கை பணம் இம்மாதம் ஐந்தாம் தேதி முதல் கோவிலுக்கு வெளியே எண்ணப்பட உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirupati, India

திருப்பதி ஏழுமலையானை தினமும் சுமார் 80,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். பக்தர்களின் காணிக்கை மூலம் ஏழுமலையானானுக்கு தினமும் சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையும், ஒரு சில நாட்களில் ஆறு கோடி ரூபாய் வரை கூட காணிக்கையாக கிடைக்கிறது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம், ஆபரணங்கள் ஆகியவற்றை கோவிலுக்கு உள்ளேயே கணக்கிட்டு பணத்தை வங்கிகளில் தேவஸ்தான நிர்வாகம் செலுத்தி வருகிறது. காணிக்கையாக கிடைக்கும் ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை திருப்பதியில் உள்ள தேவஸ்தான கருவூலத்திற்கு பாதுகாப்பாக எடுத்து சென்று அங்கு அவற்றை பத்திரப்படுத்தி வருகின்றனர்.

கோவில் வளாகத்தில் இடவசதி இன்மை போன்ற காரணங்களால் காணிக்கையாக கிடைக்கும் பணம், ஆபரணங்கள் ஆகிவற்றை கோவிலுக்கு வெளியே கணக்கிட தேவஸ்தான நிர்வாகம் ஓர் ஆண்டுக்கு முன் முடிவு செய்தது. இந்த நிலையில் 23 கோடி ரூபாய் செலவில் ஏழுமலையான் கோவிலுக்கு வெளியே அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட காணிக்கை பணம் கணக்கிடும் வளாகம் கட்டப்பட்டது. அந்த வளாகத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த பிரம்மோற்சவத்தின் போது திறந்து வைத்தார்.

காணிக்கை பணம் கணக்கிடுவதை பக்தர்கள் வெளியில் இருந்து பார்க்கும் வகையில் அந்த வளாகத்தில் கண்ணாடி சுவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக அதி நவீன சிசிடிவி கேமராக்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இம்மாதம் ஐந்தாம் தேதி முதல் காணிக்கையாக கிடைக்கும் பணத்தை கோவிலில் இருந்து மொத்தமாக வெளியில் கொண்டு வந்து புதிதாக கோவிலுக்கு வெளியே கட்டப்பட்டுள்ள வளாகத்தில் கணக்கிட தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஏழுமலையான் கோவில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் ஐந்தாம் தேதி முதல் காணிக்கை பணம் கோவிலுக்கு வெளியே கணக்கிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Tirumala Tirupati, Tirupati