திருப்பதியில் வட இந்திய பக்தர்களின் வசதிக்காக ரொட்டி, சப்பாத்தி ஆகியவையும் இனிமேல் பக்தர்களுக்கு உணவாக அன்னதானம் மூலம் வழங்கப்படும்.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நேற்று திருப்பதி மலையில் உள்ள அன்னதான வளாகம், லக்கேஜ் சென்டர்கள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது திருப்பதி மலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வர துவங்கியுள்ளனர். இதனால் பக்தர்கள் வருகைக்கு ஏற்ற வகையில் அனைவருக்கும் இலவச உணவு வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருப்பதி மலையில் இரண்டு இடங்களில் இலவச உணவு வழங்க தேவையான ஏற்பாடுகளை செய்ய அன்னதான துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வட இந்திய பக்தர்களின் வசதிக்காக ரொட்டி, சப்பாத்தி ஆகியவையும் இனிமேல் பக்தர்களுக்கு உணவாக அன்னதானம் மூலம் வழங்கப்படும்” என்றார்.
மேலும் ” ஏப்ரல் மாதம் முதல் ஏழுமலையான் கோவிலில் கட்டண சேவைகளை மீண்டும் துவக்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கட்டண சேவை டிக்கெட்டுகள் விலையை தேவஸ்தான நிர்வாகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுவது தவறான தகவல். இலவச தரிசன டோக்கன் பெறும் பக்தர்கள் 48 மணி நேரத்துக்குள் ஏழுமலையானை வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாதாரண பக்தர்களின் வசதிக்காக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி மலையில் உள்ள ஹோட்டல்கள் வழக்கம் போல் செயல்படும்” என்று கூறினார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.